சிங்கள அரசின் முதன்மைக் கூட்டாளியான காங்கிரசின் உறுப்பினர்களே வாக்களித்து இருக்கும் பொழுது மறைமுகத் துணைக்கூட்டாளியாக அமைதி காத்த தி.மு.க.உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மறைமுக எதிர்ப்பைக் காட்டி உள்ளது வருந்தத்தக்கது. வெளிநடப்பு செய்த உடன் மீண்டும் அவைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்திருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை மீது தடை கோரி பேரவை ஒரு மனதாக தீர்மானம்
First Published : 09 Jun 2011 05:09:02 AM IST
சென்னை, ஜூன் 8: இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். தீர்மான விவரம்: ""இலங்கையில் சம உரிமை கோரி போராடிய தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து, அரசமைப்பு சட்ட திருத்தம் செய்து தமிழர்கள் கெüரவத்துடனும், சம உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொல்வது, மனிதர்கள் வாழும் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசுவது, மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஆகியவற்றை இலங்கை அரசு செய்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் என சந்தேகப்படக் கூடியவர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை அந்த அரசு நிகழ்த்தியது. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள், ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. இவை போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து உள்ளது. எனவே இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இப்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தியது. விஜயகாந்த் (தேமுதிக), துரைமுருகன் (திமுக), என்.ஆர். ரங்கராஜன் (காங்கிரஸ்), ஏ. சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), கலையரசன் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இடையில் விஜயகாந்த் பேசும்போது, 1972-ல் இருந்து காவிரிப் பிரச்னை உள்பட பல வகைகளில் திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். அதை ஆட்சேபித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு முதல்வரின் பதிலுரையைத் தொடர்ந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவினர் வெளிநடப்பு செய்து வாக்கெடுப்பின்போது பேரவையில் இல்லாதது துரதிருஷ்டவசமானது என்று பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் கூறினார். இன ஒழிப்பு குற்றத்துக்காக இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக