தமிழ்க்கடமைகள் 20
நம் பணத்தில் கொழிக்கும் இந்தியை எதிர்ப்போம்
‘இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம்’ என்று கூறுவதையும் நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்’ என்று கூறுவதையும் நிறுத்த வேண்டும். நேருவின் உறுதிமொழி என்பது இந்தி முழுமையாக நம் மீது ஏறுவதை ஒத்திப் போடுவதுதானே தவிர, நம்மொழிக்குத் தலைமை வாய்ப்புத் தருவது அன்று. அதுபோல் இந்திமொழி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தின் அவர்களின் பணத்தில் வளர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாம் யார்? ஆனால், அனைத்து மொழி பேசுவோரின் செல்வத்தைச் சுரண்டிக் ‘கட்டாயம் இல்லை’ என்ற பெயரில் இந்தி பரப்பப்படுவதும் வளர்க்கப்படுவதும் திணிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும். அரசு பள்ளிக் கூடங்களில் இருந்து இந்தியை விரட்டி விட்டோம் எனக்கூறித் தனியார் பள்ளிகளிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தி வளர்ச்சிக்குப் பெருஞ்செலவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தி வளர்ச்சிக்காகத் ‘தட்சிண பாரத இந்தி பிரச்சாரசபை’ மூலம் நமது செல்வம் செலவிடப்படுவதையும் நிறுத்த வேண்டும். இந்தியைப் படிப்போருக்கும் படிப்பிப்போருக்கும் தரப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இவை மூலமும் நடுவணரசின் பிறதுறை அமைப்புகள் மூலமும் இந்திக்குச் செலவழித்த தொகையை இழப்பீடு போல் தமிழ் வளர்ச்சிக்குச் செலவழிக்க நடுணவரசு தரவேண்டும். தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பிற்கு இதுவரை செலவழித்தத் தொகையும் தமிழுக்குத் தரப்பட வேண்டும். மேலும் இந்தியை மட்டும் தேசிய மொழி என்றும் பிறவற்றை வட்டார மொழிகள் என்றும் அரசியலமைப்பிற்கு மாறாகக் கூறுவதை எல்லா இடங்களிலும் நிறுத்த வேண்டும். ‘தேசிய ஒளிப்பரப்பு’ என்று சொல்வதை ‘நடுவண் ஒளிபரப்பு’ என்றும் ‘மண்டல ஒளிபரப்பு’ என்று சொல்வதை ‘தமிழ்நாட்டு ஒளிபரப்பு’ என்றும் (மாநிலங்களின் பெயர்களில்) குறிக்க வேண்டும். நடுவண் ஒளிபரப்பில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டும் இடம் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில நிகழ்ச்சிகளும் இடம் பெறும் வகையில் இவை அமைய வேண்டும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்-ஓர் இனிய கனவு.
(தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 89 புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக