தில்லித் தமிழ்ச்சங்கம் மேலும் சிறப்பாக வளரவும் தமிழ் வளர்க்கவும் தமிழர் நலன் பேணவும் வாழ்த்துகள். செய்தியாளருக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
67 ஆண்டு பழுமையான தில்லி தமிழ்ச் சங்கம்!
First Published : 10 Jun 2011 10:46:02 AM IST
புதுதில்லி, ஜூன் 9: தில்லிவாழ் தமிழர்களிடையே கடந்த 67 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது தில்லி தமிழ்ச் சங்கம்.இச் சங்கமானது இப்போது தில்லிவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு நன்றாக தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் மூன்று தளங்களுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது தில்லித் தமிழ்ச் சங்கக் கட்டடம். 1946-ம் ஆண்டு ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்ட இச்சங்கம், பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைத் தாண்டி இன்று தில்லிவாழ் தமிழர்களின் பெருமையாகத் திகழ்கிறது.இலக்கிய விழா, கருத்தரங்கம், மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது இச் சங்கம். இதன் வளர்ச்சி குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சங்கத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், இப்போதைய தலைவருமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி "தினமணி'க்கு அளித்த பேட்டி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியில் தலைவர்கள் மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, பக்தவத்சலம், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பலரது பங்களிப்பு அளப்பரியது. பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்தபோது அவரிடம் உறுப்பினராகச் சேருவதற்கு ரூ.100 கேட்கப்பட்டது, அப்போது தன்னுடைய சட்டைப் பையில் கைவிட்டு கைக்குட்டையை வெளியே எடுத்து "என்னிடம் இதுதான் உள்ளது' என்று கூறியுள்ளார். ஆனாலும், தன்னை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளச் சொன்ன அவர், பின்னர் ஒரு வாரத்திலேயே அதற்கான பணத்தையும் அனுப்பி வைத்தார்.அதேபோன்று, டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், சங்கத்திற்கு வருகை தந்த கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, சங்கப் பெயர்ப் பலகையைப் பார்த்து "இதென்ன டெல்லி தமிழ்ச் சங்கம்?' "தில்லி துருக்கர் செய்த வழக்கமடி' என்று பாரதியார்கூட டெல்லியை தமிழில் தில்லி என்று தானே அழைத்துள்ளார். பின்னர் ஏன் டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிட்டுள்ளீர்கள்?'' என்று வினவியுள்ளார். அதன்பிறகு, சங்கத்தின் பெயர் தில்லி தமிழ்ச் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக சங்கத்தின் மூத்த நிர்வாகிகளாக இருந்த குப்புசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் என்னிடம் கூறியதுண்டு.அதேபோன்று, சங்கக் கட்டட வளர்ச்சி நிதிக்காக தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் ரூ.1 லட்சம் அரசு நிதி தந்தார். தில்லி வந்திருந்தபோது அப்போதைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா ரூ.50 ஆயிரம் தருவதாக அறிவித்திருந்த நிலையில் மறைந்துவிடவே, அந்நிதியை முதல்வராக இருந்த கருணாநிதி வழங்கினார். அதேபோன்று, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ரூ.5 லட்சம் நிதி தருவதாக கூறியிருந்தார். நிதி பெறுவதற்காக நானும், எனது மனைவியும் அவரைச் சென்னையில் சந்திக்க நேரில் சென்றோம். எனினும், அவரைச் சந்திக்க முடியவில்லை. பின்னர், இதுபற்றிய தகவல் அவரிடம் கொண்டு சேர்க்கப்படவே, தில்லியில் பாரதியார் சிலையை நிறுவிடும் விழாவில் வைத்து ரூ.5 லட்சத்தை எங்களிடம் வழங்கினார். அதேபோன்று சங்கத்தில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.10 லட்சம் அரசு நிதி தந்தார்.சங்கத்தின் மாடியில் இயங்கிவரும் நூலகத்தில் பலதரப்பட்ட இலக்கிய நூல்கள், வார இதழ்கள் உள்பட 20 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் உள்ள பெரிய அளவிலான தமிழ் நூலகமாக இது உள்ளது. இங்கு வரும் வாசகர்களுக்கு உதவிட நூலகரும், பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் பாரதி விழா, பொங்கல் விழா, சித்திரைத் திருவிழா, பாவை விழா நடத்தி வருகிறோம். மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, குழு விவாதப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.குறைந்த கட்டணத்தில் பரத நாட்டியம், பாட்டு, மிருதங்கம், குச்சுப்புடி, ஓவியம் ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையில் தமிழ் பயிலும் மாணவர்களில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000-மும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களில் தமிழில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் தமிழ்ப் பாடத்தில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். எதிர்காலத் திட்டம்: இனிவரும் காலங்களில் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளுடன் இணைந்து தமிழை நன்றாக கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை கொடுப்பது குறித்தும் யோசித்து வருகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இதற்காக உதவி கோரவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக