தமிழக அரசின் இலங்கைத் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன?: சீமான் கேள்வி
First Published : 19 Jun 2011 03:20:53 AM IST
சென்னை, ஜூன் 18: இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பினார்.ஈழத் தமிழர்களைக் காக்கும் பொருட்டு இலங்கைக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் சீமான் பேசியதாவது:இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்னைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.ஆனால் அண்மையில் தில்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்னை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.ஒரு நடிகை என் மீது புகார் கொடுத்ததை வைத்து, என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸôர் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியார், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காவது காங்கிரஸôர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனரா?இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.காங்கிரஸின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸýக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸýடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றார் சீமான்.இந்தப் பொதுக் கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, செல்வபாரதி கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக