நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு வேண்டுகோள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : June 21, 2011
பொதுவாக, ஈழத்தமிழர் நலனில் கருத்து செலுத்தும் பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்றவரை பரப்புரைப் பணி முதலான பல தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். நல்லார்வமும் தொண்டுணர்வும் உள்ள இருபால் இளைஞர்களையும் உணர்வும் தன்னலமில்லாத் தமிழ் நலமும் உள்ளவர்களாகப் பார்க்கும் பொழுது இளைய தலைமுறையினர் மீது பெரும் மதிப்பு ஏற்படுகிறது. ஆனால், ஆங்காங்கே, தனித்தனிக் குழுக்களாக நாடெங்கும் பரந்துபட்ட பணிகளை ஆற்றுவோரை ஒன்றுபடுத்த யாருமில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவ்விளைஞர்களும் தங்களுக்குத் தாங்களே முடிவெடுத்து ஆர்வம் மிகுதியால் செயல்படுவதால் பட்டறிவின்மையால் ஏற்படும் குறைபாடுகளும் நன்கு தெரிகின்றன.
பொதுவாகத் தமிழ் ஈழம் தொடர்பான ஆதரவு அமைப்புகள் பிளவுபட்டுக் கிடந்தாலும் ஆர்வமுள்ள பொது மக்கள் நடத்துவது யார் எனப் பார்க்காமல் பங்கேற்பதே உண்மை. இருப்பினும் எந்த அமைப்பு எனக் குறிப்பிட்டால் மாற்று அமைப்பு ஆதரவாளர் யாரும் வர மாட்டார்கள் என எண்ணி அமைப்பின் பெயர் போடாமல் நடத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாகத்தான் வருகை அமைகின்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறித்த நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதில்லை. மக்கள் காலத்தாழ்ச்சியாகத்தான் வருவார்கள் என்ற எண்ணத்தில்தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றனர். அதற்காகத் தாங்களும் காலத்தாழ்ச்சியாக வரும் போக்கையும் கடைப்பிடிக்கின்றனர்.
ஊர்வல நிகழ்ச்சி ஒன்றிற்கு நானும் சென்றிருந்தேன். முதன்மை அழைப்பாளர்கள் வந்தபின்தான் தொடங்க வேண்டும் எனக் காத்திருந்தார்கள். அவர்கள் வரும் வரை அங்கே திரளாகக் கூடியிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருவர் இருவராக நிற்கச் செய்தால் பெரிய ஊர்வலமாக அமையுமே என்னும் கருத்தைத் தெரிவித்தேன். வந்த பின் உடனே ஒழுங்கு படுத்தி விடலாம் என்றனர். ஆனால் உரியவர்கள் வந்தபின்பு இந்த இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பின்னால் செல்லுங்கள் எனச் சொல்லியதுடன் சரி! கும்பல் கும்பலாகத்தான் எழுச்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஊர்வலம் அமைந்தது.

பொதுவாக ஆர்வமும் எழுச்சியும் உள்ள மக்களை முனைப்புடன் கூட்டும் பரப்புரைப் பணியையும் விழிப்புணர்வுப் பணியையும் ஆற்றும் அனைவரின் செயல்பாடும் போற்றற்குரியதுதான். எனினும் அவர்கள் உழைப்பு உரிய பணியைத்தரும் வண்ணம் காலந் தவறாமை, ஒழுங்கு, சரியான திட்டமிடுதல் முதலானவற்றை மேற்கொள்வது எண்ணிய பணி எண்ணியவாறு முடிய எளிதான வழி வகுக்கும் என்பதை உணர வேண்டும்.
சூன் 26இல் ஒளி வணக்கத்தைக் கூட்டும் அமைப்பினரும் தங்களின் ஒப்பற்றப் பணியால் சிறப்பான தொண்டினைச் செய்து வருகின்றனர். எனினும் செயல் மேலும் செம்மையாக அமைய பின்வருவனவற்றில் கருத்து செலுத்த அன்புடன் வேண்டுகின்றேன்.
1. இப்பொழுதிருந்தே மாலை நேரங்களில் ஒளிவணக்கம் குறித்த பதாகைகளை வைத்து அனைவரிடமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தல்.
2. உரிய நாளில் குறித்த நேரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பாக அனைவரையும் அரை மணி நேரம் முன்னதாகவே வருமாறு வேண்டுதல்.
3. விளக்குகள் அணையாமல் இருக்க உரிய ஏற்பாடு செய்தல்.
4. மெழுகு விளக்கினைக் கையில் ஏந்துவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்தல்.
5. குறிப்பிட்ட நேரம் விளக்கினைக் கையில் ஏந்துவதுடன் பொதுமக்கள் வந்து விளக்கினை ஏற்றி உடன் செல்லும் வகையிலான ஒளிவணக்கத்திற்கு ஏற்பாடு செய்தல். இதன் மூலம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.
6. பேருந்து நிறுத்தங்களில் இருந்து இறங்கும் மக்களிடம் ஒளி வணக்கம் செலுத்திவிட்டுச் செல்ல அமைதியான முறையில் வேண்டுதல்.
7. பங்கேற்போர் உடைகளில் ஆங்கில முழக்கங்கள் அல்லது ஆங்கிலத்தில் அமைப்பின் பெயர் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழிலேயே அமைய அல்லது தமிழிலும் அமைய தக்க ஏற்பாடு செய்தல்.
8. பொறுப்பாளர்கள் சிலர் உரிய விளம்பிகளுடன் (Badges) முன்னரே வந்து இருத்தல்.
9. ஒளி வணக்கத் தொடக்க நேரத்தையும் நிறைவு நேரத்தையும் வரையறுத்து விளம்பரப்படுத்தல்.
10. விளக்கேற்றி வணங்குதல், விளக்கினை ஏந்தி நின்று வணங்குதல் என இரண்டு முறையும் இருப்பதைத் தெளிளவுபடுத்தல்.
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருவார்கள் என்பதையும் இங்கே தெரிவிக்கப்பட்டவை குறித்து ஏற்கெனவே சிந்தித்து இருப்பார்கள் என்பதையும் நம்பினாலும் நிகழ்ச்சி உரிய நேரத்தில் செம்மையாக அமைய பங்கேற்பாளர்களின் சார்பான கருத்துரையாக ஏற்க அன்புடன் வேண்டுகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக