தமிழ்க்கடமைகள் 33
மணிமேகலைக் காப்பியம் ஒரு புதிர்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : June 21, 2011கருத்துகள் (0) 3 views
கற்பனைத் திறங்கள், சொல் நலம், பொருள் நலம் ஆகியன ஒருங்கேக் கொண்டுத் திகழ்ந்து கற்பாரை ஈர்க்கும் காவியமாய்த் திகழ்வது மணிமேகலை. புத்தச் சமய நெறியை வலியுறுத்தும் நோக்கில் படைக்கப் பெற்றிருப்பினும் சமயம் சார்ந்த அறநெறியை வலியுறுத்தி யாவருக்கும் ஏற்றதான இலக்கியமாகவும் இது விளங்குகிறது. கிளைக்கதை மிகுதியாய் இருப்பினும் எடுத்துச் செல்லும் முன்கூர்தல் (flash back) முறையில் அவை அமைக்கப்பட்டுள்ளமை, இன்றைய திரைப்பட உத்தியை அன்றே சிறப்பாகக் கையாண்டுள்ளமையை நன்கு புலப்படுத்துகிறது.
இவ்வாறு பல சிறப்புகளுடன் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்திருப்பினும் அவரது முதன்மை நோக்கம் “மணிமேகலையின் மாண்பை” விளக்குவது மட்டுமன்று; மணிமேகலை வரலாற்றைக் கருவியாகக் கொண்டு, தாம் சார்ந்த சமயக் கதைகளைத் தமிழுலகில் பரப்புவதே ஆகும் என்று எண்ணத்தக்க வகையில் வரலாற்று மாந்தர்கள், கதைப்பாத்திரங்கள் ஆகியோரின் முன் வரலாற்றுச் செய்திகள் அமைந்துள்ளன. சமயம் சார்ந்த புலவரின் நோக்கம் சமயம் சார்ந்த கதைகளைப் பரப்புவதாகத்தானே இருக்கும் என்று எண்ணலாம். எனினும் மண்மணம் கமழாத இலக்கியம் வேரூன்ற முடியாது என்பதை அறிந்திருந்தும் “அயலகக்கதைகளை இறக்குமதி” செய்வதில் கருத்து செலுத்திய புலவர் தாயக வரலாற்றுச் செய்திகளை ஓரிரு சொற்களிலேயே முடித்து விடுவது பெரும்புதிராக இருக்கிறது. அனைவரும் அறிந்திருந்தவற்றை விளக்கிக் கூற வேண்டா எனக் கருதித், தெரியாத செய்திகளை முதன்மைப்படுத்தியிருப்பார் என நாமாக அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றாலும், “இலக்கியம் – காலம் காட்டும் கண்ணாடி அல்லவா? அதற்கேற்ற முத்திரையை ஏன் பதிக்கத் தவறிவிட்டார் ?”என்ற எண்ணம் எழுகிறது. காப்பியத்தை 30 காதைகளுக்குள் முடிக்க வேண்டும் என வரையறுத்துக் கொண்டிருக்கலாம்; இருப்பினும், கதைப்பின்னலில் கருத்து செலுத்தியவர் கோவைப்படுத்தும்பொழுது “திடீர்த்தாவுதல்களுக்கு” இடம் கொடுத்தது ஏன்?
எந்தச் சமய நெறியும் தமிழ் அறநெறியில் இல்லாததாய் இல்லை. அவ்வாறு இருக்க, சமயப்போர்வையில் வடபுலத்துக் கதைகளையும் பாலிச் சொற்களையும் கலந்திடும் வகையில் காப்பியத்தை இயற்றிய சூழலும் புரியவில்லை.
முத்தமிழ் வடிவில் மணிமேகலை : பக்கம் 129-130
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக