ஞாயிறு, 19 ஜூன், 2011

Huge fees in stalin school: தாலின் வீட்டில் இயங்கும் "சன் ஷைன்' மழலையர் பள்ளியில் அதிகக் கட்டணம்?


வெட்கங் கெட்டவர்கள் தமிழ்ப்பள்ளிகள் நடத்தாதவர்களா? தமிழில் பெயர் சூட்டாதவர்களா? அல்லது போலிகளை நம்பும் மக்களா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

ஸ்டாலின் வீட்டில் இயங்கும் "சன் ஷைன்' மழலையர் பள்ளியில் 
அதிகக் கட்டணம்?

First Published : 19 Jun 2011 03:40:01 AM IST


சென்னை, ஜூன் 18: முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இயங்கும் மழலையர் பள்ளிக்கு சென்னையிலேயே அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.சென்னை வேளச்சேரி டாக்டர் சீதாபதி நகரில் உள்ள "சன் ஷைன் மான்டிசோரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி' என்ற இந்தப் பள்ளிக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தப் பள்ளியின் முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வீடு, தனக்கும், தனது மனைவிக்கும் சொந்தமானது என்று மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி.,வகுப்புக்கு முந்தைய மழலையர் வகுப்புக்கு இதைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.நீதிபதி கோவிந்தராஜன் குழு 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே கட்டணம் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையில் ஒரு சில பள்ளிகளுக்கு 200 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு அறிவித்துள்ள புதிய கட்டணம், கட்டண நிர்ணய சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என்று பெற்றோர் நலச்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். கல்விக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து 6 ஆயிரத்து 400 பள்ளிகள் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு ஜூன் 13-ம் தேதி புதிய கட்டண விவரங்களை அறிவித்தது. இந்தக் கட்டண விவரங்கள் www.pallikalvi.in  என்ற தமிழக அரசின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.அதில் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 200 முதல் 300 சதவீதம் வரை கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணத்தை அதிகரித்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பெற்றோர்கள் தரப்பில் எந்தக் கருத்தையும் கேட்காமல் பள்ளிகள் சொல்லும் விவரங்களின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்தனர்.தமிழ்நாடு முழுவதும் புதிய கட்டண விகிதங்கள் ஓரளவு சீராக உள்ளதாகவும், சென்னை, கோவை ஆகிய நகரங்களில் மட்டுமே கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக