வெள்ளி, 24 ஜூன், 2011

reservation according to the edu.system: பாடதிட்டத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தேவை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பாடதிட்டத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தேவை: 
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

First Published : 24 Jun 2011 04:52:08 AM IST


சென்னை, ஜூன் 23: பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்விதிட்ட அடிப்படையில் ஒதுக்கீடு அளவை மாற்றி அமைத்தால், எந்தக் கல்வி திட்டத்தைப் பின்பற்றுவது என்பதில் தனியார் பள்ளிகள் தாமாகவே மனதை மாற்றிக் கொள்ளும் என்று அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  சமச்சீர் கல்வி என்பதை ஏற்றாலும், இப்போதுள்ள பாட திட்டங்கள் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று கூறி அதற்குத் தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் தாங்கள் வாங்கும் கூடுதல் கட்டணத்துக்கு, அதிக பாடங்கள் சொல்லித் தருகிறோம் என்று காரணம் கூறுவதற்காகவே இவ்வாறு கூறுவதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  எந்த பாட திட்டம் தரமானது என்ற சர்ச்சைக்குப் போகாமல் இதற்குத் தீர்வு காண அரசு ஒரு எளிய வழிமுறையைக் கையாள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.  2010-11-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 84 சதவீதம் பேர் மாநில பாட திட்டத்தில் பயின்றவர்கள். 14 சதவீதம் பேர் மெட்ரிக் பாட திட்டத்தில் பயின்றவர்கள். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1.4 சதவீதம் பேர். மீதிப் பிரிவினர் ஒவ்வொன்றிலும் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான்.  பிளஸ் டூ தேர்வில் மாநில பாட திட்டத்தில் எழுதியோர் 99 சதவீதம். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் ஒரு சதவீதம் மட்டுமே என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் பிளஸ் டூ வகுப்பில் மாநில பாட திட்டத்துக்கு மாறினால் அவர்களின் கல்வி எளிதாகிவிடுகிறது. பிளஸ் டூ பாட திட்டங்களை ஓரளவுக்கு அவர்கள் 10-ம் வகுப்புக்கு முன்னதாகவே படித்துவிடுவதால், பிளஸ் டூ பயிலும் இரண்டு ஆண்டு காலம் அதைத் திரும்பத் திரும்ப படிப்பதாக அமைகிறது. எனவே மனப்பாட அடிப்படையிலான தேர்வு முறையில் அதிக மதிப்பெண் பெற முடிகிறது.  ஒரு சதவீதம் பேர் பங்கேற்கும் சி.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தொழிற் கல்வியில் 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவது நியாயம்தானா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உயர்ந்த பாட திட்டங்களைப் படிப்பதால் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் முன்னிலை பெற்று ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எம்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களிலும் அதிக இடங்களைப் பெறுகிறார்கள். மாநிலத்திலும் அதிக இடங்களைப் பெற்றுவிடுகிறார்கள். இதனால் மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என ஆசிரியர்கள் பட்டியலிடுகின்றனர்.  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநில பாட திட்டத்தின் அடிப்படையில் எழுதும் 84 சதவீத மாணவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, தொழிற் கல்வியில் 84 சதவீத இடங்களை அவர்களுக்கு ஒதுக்குமாறு ஏன் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் தொடராமல் போய்விட்டது. இதையே ஒன்றாம் வகுப்பில் இருந்து மாநில பாட திட்டத்தில் பயிலும் கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு என செயல்படுத்தினால் உண்மையாக சமூக நீதியைக் காப்பதாக அது அமையும் என்கிறார்கள்.  மாநிலப் பாட திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிக பாட திட்டங்களை படிக்க முடியாது என்று அதிகாரிகள் மற்றும் சில கல்வியாளர்கள் தாங்களாக முடிவு செய்து கொண்டு, எளிமையான பாடங்களை நிர்ணயித்திருக்கக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கிராம, நகர்ப்புற மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தைப் படிக்க முடியுமா என்று ஆய்வு எதுவும் நடத்தப்பட்டதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  ஒன்றாம் வகுப்பில் இருந்து பிளஸ் டூ வரை மாநில பாட திட்டத்தில் பயில்வோர், அகில இந்திய அளவிலான உயர் தொழில் படிப்புகளுக்கு எத்தனை பேர் தகுதி பெற்றனர் என்ற புள்ளி விவரமே அதிகாரிகளிடம் இல்லை என்பதில் இருந்தே இதில் அவர்கள் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகின்றனர் என்பது தெரியும் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.  தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இருப்பதால் குழந்தைகள் ஒன்றாம் வகுப்புக்கு வரும்போதே 500 வரை எண்கள் சொல்வது, 100 வரை எண்கள் எழுதுவது போன்ற திறன்கள் இருக்கும். ஆனால் அரசுப் பள்ளிகளில் அப்படி இருக்காது. அதனால்தான் அரசுப் பள்ளிகளை மனதில் வைத்து சமச்சீர் கல்விக்கு தயாரித்த பாட திட்டம் தனியார் பள்ளிகளின் பார்வையில் தரம் குறைந்தவை போலத் தோன்றுகிறது என்று விளக்குகின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.  கல்வி அதிகாரிகள் இதை சுட்டிக்காட்டி அதற்கேற்ப பாட திட்டத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனதால் இப்போது குறைகள் கூறப்படுகின்றன.  எனவே சமச்சீர் கல்வி என்பது முதல் வகுப்பில் இருந்து என்பதற்குப் பதிலாக எல்.கே.ஜி. முதல் என தொடங்கினால் அனைவரும் ஏற்கும் வகையில் இருக்கும் என்று யோசனை கூறப்படுகிறது.  ஐந்து வயதிற்குள் குழந்தைகளின் கற்றல் வேகம், அறிவு வளர்ச்சி அதிகம் உள்ளது எனும்போது, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்குக் கற்பிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.  சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடப் புத்தகங்களையே பயன்படுத்தி, மொழிப்பாடங்கள், தமிழகப் பண்பாடு, கலாசார பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்யலாம் என்று ஆசிரியர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். இதைக் கற்பிப்பதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தால், எல்லா மாணவர்களும் எந்த பாட திட்டத்தையும் கற்றுவிட முடியும் என்று அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  ஒருவேளை, பொதுப் பாட திட்டத்தை உடனே செயல்படுத்த முடியாமல் போனால், 12ம் வகுப்பு வரை மாநில பாட திட்டத்தில் படிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் நியாயமான வாய்ப்பு மறுக்கப்படாத வகையில் 84 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.  
கருத்துகள்

மெட்ரிக் கலைத்திட்டம் , அரசுப்பள்ளி கலைத்திட்டம் என்பது எல்லாம் ஒன்றுதான் . மெட்ரிக் கலைத்திட்டம் சிறந்தது என்றால் மெட்ரிக் கலைதிட்டதிலியே பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கவேண்டியது தானே . ஏன் அவர்கள் ஸ்டேட் போர்டு கலைதிட்டதிற்கு வருகிறார்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் . எல்லாம் ஏமாற்று வேலை .
By ராஜேந்திரன், தேனி
6/24/2011 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக