. தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
. தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மனநிறைவு கிடைக்கிறது

சொல்கிறார்கள்

"ஆத்ம த் திருப்திகிடைக்கிறது!'

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், "கருணை இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும், நியூசிலாந்தை சேர்ந்த ஜீன் வாட்சன்: நான் முதன் முதலில், 1984ம் ஆண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். கன்னியாகுமரி பகுதி, எனக்கு மிகவும் பிடித்துப் போனதால், மீண்டும், 1986ம் ஆண்டு இங்கு வந்து, அப்பகுதி மக்களிடம் பழக ஆரம்பித்தேன். அங்குள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகி ஒருவர் மூலம், நிலக்கோட்டை பகுதிக்கு வந்தேன். முதன் முதலாக என்னைப் பார்த்த அந்த ஊர் மக்கள், நான் ஒரு மருத்துவர் என நினைத்து, தங்கள் குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி, என்னிடம் வேண்டுகோள் வைத்தனர்.அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்காக மிகவும் வருந்தினேன். அந்த எண்ணம் தான், கருணை இல்லமாக உருமாறியுள்ளது.

போதிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு, என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். மீண்டும் நியூசிலாந்திற்கே சென்றேன். கருணை இல்லம் துவங்க, நிதி திரட்ட முயற்சி செய்தும், போதிய நிதி கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் உள்ள எங்களின் பூர்வீக வீட்டை விற்று, கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்தேன்.

கையிலிருந்த சொற்ப தொகையுடன், இந்தியா வந்து, ஏழு குழந்தைகளுடன் கருணை இல்லத்தை துவங்கினேன். ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதியும், கருணை இல்லத்தில் இல்லை. கையிலும் போதிய நிதி இல்லாததால் செய்வதறியாது திகைத்தேன். அப்போது, என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்தனர். பல இடையூறுகள், சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்து, கருணை இல்லம் அறக்கட்டளை துவங்கி, நிதி திரட்டினோம்.

குழந்தைகளின் ஏழ்மை நிலை, நன்கு ஆராயப்பட்ட பின்பே, அவர்களுக்கு கருணை இல்லத்தில் இடம் அளிக்கப்படுகிறது. கருணை இல்லத்தில் சேராத மாணவர்களுக்கும், உதவி செய்கிறோம். என் கனவு, அக்கறை, சகலமும் இந்தப் பிள்ளைகளின் நல்வாழ்வு தான். அது, நான் எதிர்பார்த்ததை போன்றே, நிறைவேறி வருவதில், எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தியை சொல்ல வார்த்தையே இல்லை.

புதன், 24 அக்டோபர், 2012

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத உறுதி:தமிழகச் செங்கல் கட்டடத்தொழில்நுட்பம்

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத உறுதி:தமிழக செங்கல் கட்டட தொழில்நுட்பம்

சென்னை: பண்டைய செங்கற் கட்டட கலையின் நுட்பங்களை, நவீன கட்டடங்களில் பயன்படுத் தினால், காலத்தால் அழியாத உறுதியான கட்டடங்களை உருவாக்க முடியும் என, தொல்லியல்
அறிஞர் சத்தியமூர்த்தி கூறினார்.

பண்டைய செங்கற் கட்டட கலை பற்றிய கருத்தரங்கம் தொல்லியல் துறையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய, தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர், முனைவர்.சத்தியமூர்த்தி, பேசியதாவது:சங்க காலம் முதலே, செங்கற்களை கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. கட்டட பொருட்களில், செங்கல் மட்டுமே பஞ்சபூதங்களின் உதவியோடு தயாரிக்கப் படுபவை.
பல வடிவங்களில்...:


கட்டடங்களுக்கு தகுந்த வகையில் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு கட்டுவதே பண்டைய தொழில் நுட்பம். இதனால், பல வடிவங்களில், விதவிதமான செங்கற்கள் தயாரிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மேற்பரப்பு மண்ணை கொண்டே செங்கல் தயாரிக்கப்பட்டது.இந்த செங்கற்கள் தான், பாறைகளை குடைந்து கட்டப்பட்ட கோவில்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தன. பெரும்பாலான கற்கோவில்களில், இரு கல் சுவர்களுக்கு இடையில் உறுதி தன்மைக்காக, செங்கற்கள் தான் நிரப்பப்பட்டன. ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற இடங்களில் உள்ள கட்டடங்கள், சுடாத செங்கற்களை கொண்டு தான் கட்டப்பட்டன. செங்கல் பயன்பாட்டில், ஏற்பட்ட மாறுபட்ட வளர்ச்சியை கொண்டு, நாகரிக வளர்ச்சியை அறிய முடியும்.
வேப்பத்தூரில்...


கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில், வீற்றிருந்த பெருமாள் கோவில் முற்றிலுமாக செங்கற்களின் துணை கொண்டே கட்டப்பட்டது. இந்த கோவில் பற்றிய குறிப்புகள் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் உள்ளன.தரையில் இருந்து, 4 மீ., உயரத்தில், மூன்று அடுக்குகளாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம், இன்னும் சிதைந்த நிலையில், காட்சி அளிக்கிறது.நம் நாட்டு செங்கற் கலையின், நுணுக்கங்களை கற்று கொண்டு கம்போடியா நாட்டில், 1,000 ஆண்டுகளுக்கு முன், விஷ்ணு அவதாரங்கள் இடம் பெற்ற கோவில் கட்டப்பட்டுள்ளது.
இப்போதும் செய்யலாம்:


இப்போது, நாம் பயன்படுத்தும் செங்கற்களை, கட்டடத்தின் வளைவு பகுதிகளுக்கு ஏற்ப, உடைத்து தான் பயன்படுத்துகிறோம். இம்முறையினால் தான், வீடுகள் உறுதி தன்மையின்றி, விரிசல் விடுகின்றன.பண்டைய செங்கற் கட்டட கலையின் நுணுக்கங்களை, நவீன கட்டடங்களில் பயன்படுத்தினால், அழியாத பல கட்டடங்களை உருவாக்கலாம். இவ்வாறு, சத்தியமூர்த்தி பேசினார்.


நுண்நொதுமி ஆய்வகம் பொட்டிபுரம் மக்களின் தேவை என்ன?

நியூட்ரினோ ஆய்வகம் பொட்டிபுரம் மக்களின் தேவை என்ன?

தேவாரம்:நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள, தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிபுரம் ஊராட்சியிலும், சுற்றுப்பகுதிகளிலும் செய்ய வேண்டிய அடிப்படைகட்டமைப்பு பணிகள் ஏராளம் உள்ளன."நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம்(50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.

உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நியூட்ரினோ என்றால் என்ன?: "நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ).
ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.
ஆராய்ச்சி எதற்காக: நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பங்கேற்பவர்கள்: ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய
இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
அம்பரப்பர் மலை தேர்வு ஏன்: தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது.
மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?: பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ
ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
மக்களின் தேவை என்ன?: ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும்.
கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

திங்கள், 22 அக்டோபர், 2012

"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'



சொல்கிறார்கள்


"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'


முதலீடாக, 500 ரூபாயில் துவங்கி, பலகாரங்கள் விற்பனையில், இன்று மாதம் நான்கு லட்சம் ரூபாய் வியாபாரம் பார்க்கும் இன்பவள்ளி: என் கணவர் மளிகைக் கடை வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக அதில், நஷ்டம் ஏற்பட, கடன் ஒரு புறம், மகன்களின் படிப்பு மறுபுறம் என, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள முடியாமல், தவித்தேன். தஞ்சையிலிருந்து, பிழைப்புத் தேடி திருச்சி வந்தோம். அங்கு, கணவருக்கு கிடைத்த மிகக் குறைவான ஊதியம் மூலம், மாதம் முழுவதும் சிக்கன வாழ்க்கை நடத்தினேன்.அப்போது, எங்கள் பகுதியில் துவங்கிய மகளிர் சுய உதவிக் குழுவில் நானும் உறுப்பினராக சேர்ந்தேன். தெரிந்தவர்கள் மூலம், 500 ரூபாய் கடன் வாங்கி, காய்கறிகளைக் கொண்டு, 10 வகையான ஊறுகாய்களை தயார் செய்தேன். ஒரு முறை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குள் நடந்த போட்டியில், என் தயாரிப்பான, பாகற்காய் ஊறுகாய்க்கு பரிசு கிடைத்தது. பின், ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்ததன் மூலம், நல்ல பெயர் கிடைத்தது.ஒரு முறை தெரிந்தவருக்கு, தேன் குழல் முறுக்கு செய்து கொடுத்தேன். அது அவருக்கு பிடித்துப் போக, செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும் என, யோசனை கூறினர். நானும் ஒரு ஆர்வத்தில், பலகாரங்கள் செய்ய துவங்கினேன்.மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம், 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பலகாரம் செய்ய மிஷின் வாங்கினேன். என் தயாரிப்பின், சுவையும், தரமும் நன்றாக இருந்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில் தயக்கம் இருந்தது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் மூலம், மாணவர்களிடம் விற்பனை செய்தேன்.வியாபாரம் வளரத் துவங்கியது. பல ஸ்வீட் கடைக்காரர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளிகள் பலருக்கும் என் கை பக்குவம் பிடித்ததால், ஆர்டர் கொடுத்தனர். மாவு வறுப்பது, அரைப்பது, இடிப்பது என, அனைத்து வேலைகளையும் நானே கவனமாக செய்வேன். 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இன்று மாதத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்கிறேன்.






ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'

சொல்கிறார்கள்


"கொலு வைப்பதேதொழில் தான்!'
திருமணம், நிச்சயம் போன்ற நிகழ்ச்சிகளில், அதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை, கொலு பொம்மைகள் மூலம் காட்சிக்கு வைக்கும் கவிதா, ஜெயஸ்ரீ, அஞ்சனி, சத்தியபாமா:கவிதா ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பள்ளியில் தான், எங்களின் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு தான், நான்கு பேரும் அறிமுகமானோம். கவிதாவிற்கு, கை வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம். ஓய்வு நேரங்களில், கிராப்ட் வேலைகள் செய்ய ஆரம்பித்து விடுவார். அதில், ஆர்வமாகி பாராட்டியதுடன், கற்றுக் கொள்ளவும் துவங்கினோம்.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது தொழில் செய்யலாம் என, தீர்மானித்தோம். அப்போது தான், திருமணத்திற்கான ஆரத்தி, அலங்காரங்கள், கொலு பொம்மைகள் என, "கான்செப்ட்'டிற்கு ஏற்ப செய்து கொடுப்பதையே, நாமும் ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம் எனத் தோன்றியது.சென்னை, மேற்கு மாம்பலத்தில், ஒரு, "பிளாட்'டை வாடகைக்கு எடுத்தோம். சுப விசேஷங்களுக்கான, ஆரத்திகள் மற்றும் சீர்தட்டுகள், மண்பானை அலங்காரங்கள், விழா அரங்கில் கொலு பொம்மைக் காட்சி என, மூன்றும் செய்து தருகிறோம் என, தெரிந்தவர்களிடம் வாய்ப்பு கேட்டோம். இந்த புதுமையான யோசனைக்கு, பலர் தயங்கினாலும், சிலர் ஆர்வமாயினர்.மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயம், முகூர்த்தம், முளைப்பாரி, மோதிர விளையாட்டு என, சுபசடங்குகளை, நாங்கள் கொலுவாக வைப்பதை பார்ப்பவர்கள் ரசித்ததுடன், வாய்ப்பும் கொடுத்தனர்.ஒரே மாதிரியான, கொலு பொம்மைகளையே அனைத்து விசேஷங்களிலும் வைக்காமல், ஒவ்வொரு, "ஆர்டரு'க்கும், புதிதாக ஏதாவது யோசித்து செய்வோம். விழா நடத்துபவர்களின் விருப்பங்கள், அவர்களின் சமுதாயப் பழக்கம் அனைத்தையும், கொலுவில் கொண்டு வருவோம். இப்போது, பல, வி.ஐ.பி., வீட்டு விசேஷங்களுக்கும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது.தினமும் காலை, 10:00 மணிக்கு அலுவலகத்திற்கு வருவோம். ஆர்டர்கள், கணக்கு வழக்கு அனைத்தையும், ஒவ்வொருத்தரும் பகிர்ந்து செய்வோம். 1:00 மணிக்கு, வீட்டிற்கு கிளம்பி விடுவோம். இந்த நான்கு ஆண்டாக, குடும்பமும், தொழிலும் ஒன்றை ஒன்று தொந்தரவு செய்யாமல் போகிறது.
"ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'
 இல்லத்தரசிகள் பங்குச் சந்தையில் ஈடுபடுவது பற்றி வகுப்பெடுக்கும் தர்மஸ்ரீ: திருமணத்திற்குப் பின், கணவரின் வேலை காரணமாக, மும்பையில் இருந்த போது, ஓய்வு வேளையில், "ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட், கரன்சி மார்க்கெட்' என, பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பங்குச் சந்தை நேரடி வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். துவக்க காலத்தில் பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் சரிவர புரியாமல் நிறைய நஷ்டங்கள்.நஷ்டம் வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில், எந்த வித அடிப்படை அறிவுமின்றி, மனம் போன போக்கில் செய்த முதலீடுகள், அதிகபட்ச நஷ்டத்தை தந்திருப்பது புரிந்தது. தவிர, நிபுணர் கருத்துக்களை மட்டுமே நம்பி முதலீடு செய்ததாலும், நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தின் மூலம், மெல்ல மெல்ல, சந்தையின் போக்கைக் கவனிக்க ஆரம்பித்தேன்.இதில் நான் கற்றுக் கொண்டதை, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதையே மற்றவர்களுக்கு வகுப்பாக எடுத்தால், மற்ற பெண்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என, யோசனை கூறினர். அது எனக்கு சரியென பட, கணவரின் ஒப்புதலுடன் பங்குச் சந்தை பற்றிய வகுப்பெடுக்க ஆரம்பித்தேன்.மொத்தம் ஐந்து வகுப்புகள். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், பங்குகளை ஆன்-லைன் மூலம், வாங்குவது, விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களை கண்டுபிடிப்பது எப்படி என, படிப்படியாக சொல்லிக் கொடுப்பேன். சில சமயம், வெளியூர்களுக்கும் சென்று வகுப்பெடுப்பேன்.பங்குச் சந்தையில் முன் அனுபவமே இல்லாதவர்கள், முன் அனுபவம் இருந்தும் நஷ்டப்பட்டவர்கள் என, பல தரப்பட்டவர்களையும், இந்த வகுப்பின் மூலம் சந்திக்க முடிகிறது. இந்த துறையில், பெண்கள் குறைவாகத் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், பங்குச் சந்தை என்றாலே, "சூதாட்ட களம்' என்ற மாயை தான்.வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் முதலீடும் இருந்தாலே போதும். பங்குச் சந்தை பற்றிய நெளிவு, சுளிவுகளைக் கற்று, ஓய்வு நேரத்தில், நல்ல லாபம் பார்க்கலாம்!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி? how to protect rain season diseases,

மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?

வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. அதற்கு முன்பே, ஆங்காங்கே மழை கொட்டத் துவங்கி விட்டது. நோயின் முன்னோடியாக, "டெங்கு' காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவலாகி விட்டது. இதேபோல மழைக்காலத்தில், பல்வேறு நோய்களும் நம்மைத் தாக்கும். வெயில் காலத்தில் "எறும்பைப் போல' சுறுசுறுப்பாக செயல்படும் நாம், மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம். திடீர் மழையில் நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள், அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென, "மழைக் காலத் தொடரில்' டாக்டர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.மழைக்கால பொதுவான நோய்கள், அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.

மழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வுயு க் கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்.சர்க்கரை நோயாளிகள் மழைக் காலத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய முடியாது. எனவே, ரத்த சர்க்கரை கூட வாய்ப்புள்ளது. அந்தநிலையில், உணவுக் கட்டுப்பாட்டை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதிக குளிரில், அதிகாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் போது, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தேங்கிய மழைநீர் மூலம் சிக்குன்குனியா, டெங்கு, பன்றி காய்ச்சல் வரலாம். பன்றி காய்ச்சல் கிருமிகள் (எச்1என்1) அதிக குளிர், மழை சீதோஷ்ணத்தில் அதிகமாக உற்பத்தியாகும். எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பெண்கள், ஈரத்தலையுடன் இருந்தால், "சைனஸ்' தொல்லை ஏற்படும். வைரசால் கண்நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
குளிருக்கு அதிக டீ, காபி குடித்தால் ஆபத்து
பாதுகாப்பில்லாத குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் தாக்கலாம்.
கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரை குடித்தால், காலரா, வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும், கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.
மழை பெய்யும் போது, சாக்கடை கழிவுநீரும் சேர்ந்துவிடும். தவிர்க்க முடியாமல் நடந்து வந்தாலும், உடனடியாக ஆடையை மாற்றி, கால்களை நன்கு கழுவ வேண்டும்.
மழையில் நனைந்த ஆடைகள் மூலம், தோல்நோய்கள் வரலாம்.
உடல் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர், மழைக் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க, சிலர் அதிகமாக சிகரெட் புகைப்பர், மதுரை அருந்துவர். இவர்களுக்கு மாரடைப்பு, நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரலாம்.
காப்பி, டீ அதிகமாக குடித்தால், வயிற்றுப் புண் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளின், கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகிவிடும்.

வெறுப்பில் உள்ளனர் மக்கள்

வெறுப்பில் உள்ளனர் மக்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, கோவையிலிருந்து எழுதுகிறார்: சமீபகாலமாக, தமிழக அமைச்சர்கள் நான்கு பேர் கொண்ட குழுவினர், 40 தொகுதிகளிலும், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகின்றனராம்; அவர்கள், ஏதாவது மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்ய போகின்றனரா என்றால், அது தான் இல்லை.வரும், 2014ல் நடக்கப் போகிற, எம்.பி., தேர்தலுக்காக, செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். போகட்டும், அதில், யதார்த்தமான பேச்சுகளையாவது பேச வேண்டாமா?"ஜெ.,வைப் பார்த்து, அமெரிக்காவே அச்சப்படுகிறது; ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் என, இன்ன பிற நாடுகளும் பயப்படுகின்றன' என்கிறார் ஒரு அமைச்சர்.

இன்னொரு அமைச்சரோ, "இந்த நாட்டை ஆள, அனைத்து திறமைகளும் ஒருங்கே கொண்ட, ஒரே தலைவர், ஜெ., தான்' என்று, புளகாங்கிதம் அடைகிறார். மற்றொருவரோ, "அம்மாவே பிரதமர்; அவரை பாரதப் பிரதமராக அமர்த்தியே தீருவோம்' என்று குதூகலிக்கிறார்.இதெல்லாம் சாத்தியமா; இப்போது அவசியமா... தமிழக மக்கள், அவரை முதல்வராக தேர்ந்து எடுத்த பணி, முற்றிலும் நிறைவடைந்து விட்டதா? தமிழக மக்கள், எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா?அத்தியாவசியமான தேவைகளுக்காக, அன்றாடம், வீதியில் நின்று போராடி, போலீசாரிடம் அடியும், உதையும் வாங்கி, மக்கள் கஷ்டப்படுவதை அமைச்சர்கள் அறிவரா? ஒரு மணி நேர மின்வெட்டு, படிப்படியாக முன்னேறி, 14 மணி நேரம், 18 மணி நேரமாக அதிகரித்ததால், தொழில்கள் முடங்கி, விரக்தியில், தொழிலாளர்கள் விழி பிதுங்கி நிற்பது தெரியுமா? டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று, நாள் தோறும் பலர் இறந்து வருவதையும், விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருப்பதையும் தான் அறிவரா?இப்படி, பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில், அது, கட்சித் தொண்டர்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக, "அம்மாவே பிரதமர்' என்று கோஷம் போட்டு, அமைச்சர்கள், வேஷம் போடுவது தேவையா?
இப்போது தேர்தல் வந்தால், அ.தி.மு.க., ஒரு, "சீட்' கூட பெறாது என்பது தான் உண்மை. மக்கள், அந்த அளவிற்கு வெறுப்பில் உள்ளனர். ஆட்சி, அதிகாரம், சுகவாசம் என்ற திளைப்பில் உள்ள ஆட்சியாளர்கள், இதை உணர்வரா?

செயல்வீரர்கள் கூட்டத்தை நிறுத்தி, அர்ப்பணிப்பு உணர்வோடு, மக்கள் நலப்பணிகளை, ஊர் ஊராகச் சென்று மேற்கொள்வரா... இல்லை, செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கா?

சனி பகவான்மிரட்டியிருப்பாரோ?
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: "தமிழகத்தின் இருள் என்று நீங்குகிறதோ, அன்று தான், கறுப்புச் சட்டை அணிவதை, இந்தக் கருணாநிதி நிறுத்துவான்; அதுவரை, 24 மணி நேரமும், கறுப்புச் சட்டை அணிந்திருப்பான்' என்று, தி.மு.க., தலைவர் போட்ட சபதம், நான்கு நாட்களில், "புஸ்வாணம்' ஆகிவிட்டது.
இப்படி, இவர், நான்கு நாட்களோடு, கறுப்புச் சட்டை அணிவதை நிறுத்தி விட்டாரே என, கண்ணீர் வடிப்பவர்களுக்குச் சொல்ல விரும்புவது யாதெனில்...

கருணாநிதி கனவில், சனி பகவான் தோன்றி, "நாத்திக சிகாமணியே... கறுப்பு நிறம் எனக்குப் பிடித்த நிறம்; அதை, ஆத்திகர்கள் அணிவது தான் உத்தமம். அடிக்கடி கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மாற்றி, பகுத்தறிவாளர் வேஷம் போடுபவர்
களுக்கு, கறுப்புச் சட்டை அணியும் யோக்கியதை இல்லை. "எனவே, இதை உடனே நிறுத்தி, வழக்கம் போல வெள்ளைச் சட்டையும், மஞ்சள் துண்டும் அணிந்து கொள். அப்படி செய்யத் தவறினால், உன் பேரன் தயாநிதி இருக்கும் ரகசிய இடத்தை, நான் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவேன்!' என்று, மிரட்டியிருப்பாரோ என்னவோ!அதனால் தான், பாவம், தி.மு.க., தலைவர் அஞ்சி, நடுங்கி, கறுப்புச் சட்டையைத் தூக்கி கடாசி விட்டார் போலும்.இனி, கறுப்புக் கண்ணாடி கூட அணிய மாட்டார்; தி.மு.க., கொடியில் இருக்கும் கறுப்பு வண்ணத்தையும் நீக்கி, மஞ்சள் நிறத்தை, தி.மு.க., கொடிக்கு வழங்கலாம்!"கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என்ற பாட்டை, இனி, அவர் கண்டிப்பாக, கேட்கவே மாட்டார். கறுப்பு என்ற வார்த்தையையே, தன் அகராதியிலிருந்து நீக்கி விடுவார். கறுப்பு மீது, அவருக்கு வந்திருக்கும் வெறுப்புக்கு, என்ன காரணம் என்பதை, இப்போது, உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பர்.கறுப்புப் பணத்தை எல்லாம், வெள்ளைப் பணமாக்க, கருணாநிதி, தீவிர முயற்சி மேற்கொள்ளலாம். சனி பகவான், கருணாநிதியை நன்றாகவே ஆட்டுவிக்கிறார்! -தினமலர்

மிகுதியான கற்பனை, சிக்கல்களை உண்டாக்கும்

சொல்கிறார்கள்

"அதீத க் கற்பனை , சிக்கல்களை உண்டாக்கும்!'

மன நல மருத்துவர் ரஹ்மான்கான்: "நாலு பேர் நாலு விதமாக நம்மைப் பற்றி...' என்பதான சந்தேகம், நம் அனைவரையும் கடந்து செல்வது தான். ஆனால், எந்தவொரு முகாந்திரமும் இல்லாது, ஒரே நாளில் அடிக்கடி இந்த சந்தேகம் ஏற்பட்டால், அது தீவிர உளவியல் பாதிப்பின் ஆரம்பமாக இருக்கும்.சுயமதிப்பீடு குறைவாக இருப்பவர்கள், ஏதேனும் குற்ற உணர்வில் உழல்பவர்கள், தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிப்பவர்கள், சந்தேகப்படுவதை குணமாகக் கொண்டவர்கள், கட்டுப்பாடான சூழலில் இறுக்கமாக வளர்பவர்கள், இப்படிப்பட்டவர்களுக்கு, இந்த எண்ணம் மேலோங்கும்.

அடுத்த கட்டமாக, மனச்சிதைவு, அதி தீவிர சந்தேக உணர்வு, அதீத மனக் கிளர்ச்சி என, மற்ற சில மனநலக் கேடுகளை இதுவே வரவழைத்து விடும்.இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும், சுலபமாக கற்பனை செய்து கொள்வர். நண்பர்கள், குடும்பத்தினர்களையே எதிரியாக பாவித்து, சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர்.
ஒரு கட்டத்தில், செய்தித் தாளில் வரும் செய்தியும், "டிவி' சீரியல்களும் கூட, தம்மை கிண்டல் செய்யவே திட்டமிட்டு ஒளிபரப்புவதாகவும், மிகையான கற்பனைக்குள், தீவிர நம்பிக்கையுடன், உலா வருவர்.இந்தப் போக்கில், திடீரென எண்ணம், சொல், செயல் எதுவுமே, ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, மாறிப் போகும் ஆபத்தும் உண்டு.
பாதிக்கப்பட்டவர் பேசுவதை, புலம்புவதை பரிகாசம் இன்றி, காது கொடுத்துக் கேட்கப் பழக வேண்டும்.

இந்த முயற்சியில் பலனில்லை எனில், அவரின் நிலையில், தூக்கமின்மை, பசியின்மை, கவனச்சிதறல், சமூகத்துடன் ஒன்ற முடியாது, நாளும் புதுப் பிரச்னைகள் என, கூடுதல் உபத்திரவங்கள் உருவானால், பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவம் அவசியம்.
ஆரம்ப நிலையில் மன நல ஆலோசகரிடம் சென்றால், கவுன்சிலிங் மூலம், மனப் பயிற்சி கிடைக்கும். கூடுதல் அவஸ்தைகளுடன், சற்றே முரண்டு பிடிக்கும் நிலையில் இருப்பவருக்கு, மருந்து, மாத்திரைகளுடன் கூடிய மனநல கவுன்சிலிங் தரப்படும்.

இலங்கை க் கடற்படையுடன் கூட்டு ப் பயிற்சி தென் மாநிலங்களை த் தவிர்க்க அறிவுரை

இலங்கை க் கடற்படையுடன் கூட்டு  ப் பயிற்சி தென் மாநிலங்களை  த் தவிர்க்க  அறிவுரை

புதுடில்லி:இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடற்படை கூட்டு பயிற்சியை நடத்துவதற்கு நான்கு தென் மாநிலங்களை தவிர்க்கும்படி ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய - இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சியை, இதற்கு முன் இரண்டு முறை நடத்தியுள்ளது. முதலாவது பயிற்சி,2005ம் ஆண்டும், அதை தொடர்ந்து இரண்டாவது பயிற்சி, 2011ம் ஆண்டு திரிகோணமலையில் நடந்தது.

இந்நிலையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும்எதிர்ப்பு வருகின்றன. எனவே கடற்படை கூட்டு பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய ராணுவ அமைச்சகம் இந்திய கடற்படைக்கு விடுத்த வேண்டுகோளில்," இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சியை நடத்த தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில கடலோர பகுதியை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது.இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு பயிற்சி, இம்முறை இந்திய கடல் பகுதியில் நடத்தப்பட வேண்டும். இதையடுத்தே, ராணுவ அமைச்சகம் இந்த வேண்டுகோளை வைத்துள்ளது.
-  தினமலர்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

அரசின் மதுக் கடைகளை மூட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- Tamac : supreme court verdict

அரசின் மதுக் கடைகளை மூட முடியாது:  உச்ச நீதிமன்றம்  அதிரடி உத்தரவு
 தினமலர்

புதுடில்லி : தமிழக அரசு நடத்தும், "டாஸ்மாக்' மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நேற்று, தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தின், பிரிவு 47ஐ மேற்கோள் காட்டி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசின் கொள்கைக்கு எதிராக, பொதுமக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் விதத்தில், அரசே, கடையைத் திறந்து, மதுபானம் விற்கிறது என்பது மனுதாரரின் வாதம்.அரசின் கொள்கை படி, நாம் சென்றால், அரசு ஊழியர்கள் ஒருவர் கூட, மதுபானம் அருந்தக் கூடாது. அவ்வாறு செய்ய முடியுமா? அந்த விதிமுறைகள், பின்பற்ற வேண்டியவற்றைக் கூறுகின்றன; மது விலக்கு பற்றி கூறவில்லை.

அரசு ஊழியர்கள் யாரும் மதுபானம் அருந்தக் கூடாது என்ற விதியை, நடைமுறை படுத்த முடியுமா? அவ்வாறு செய்தால், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படத் தான் முடியுமா? ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.மதுபானம் அருந்துவதால், ஏராளமானோர் இறப்பதாக, மனுதாரர் கூறுகிறார். அதை விட, தினமும், சாலைகளில் நடக்கும் விபத்துகளில் ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்கள் மீது மனுதாரர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


திங்கள், 15 அக்டோபர், 2012

2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல்

2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல் 

 தினமலர்
பழநி:பழநி வையாபுரி குளத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வையாபுரிகுளம் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் 37 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் "வையாபி நாட்டு, பழனியில் ஏரி அறிமுஞ்சு இக்குளம் இறங்கிடதமையில்' என்ற வார்த்தை மூலம் பழநியும்-வையாபுரி குளமும் பேரழிவை சந்தித்தன என்பதை நமக்கு தெரிவிக்கின்றன.

அந்தகாலத்தில் பழநியை ஆண்ட ராஜாராஜ குமாரபாலன் என்ற அரசனின் மனைவி "கூத்தன் அதியசோழி' என்ற பெண் தான், வையாபுரி குளத்தை தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாள் என்ற செய்தியும் இதன் மூலம் நமக்கு தெரியவருகிறது.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்;"800 ஆண்டு பழமையான கல்வெட்டில், பழநியாண்டவரின் வேல் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்வெட்டில் ஒன்று அரசு அருங்காட்சியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,' என்றார்.






வெள்ளி, 12 அக்டோபர், 2012

மின் தடை பற்றி கவலைப்படாமல் இருக்க...:

சொல்கிறார்கள்


 மின் தடை பற்றி கவலைப்படாமல் இருக்க...: 

தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை துணைப் பொது மேலாளர் சையத் அகமத்: பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழகத்தில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக் கொண்டு, மின்சாரம் பெறலாம். மக்கள் இதற்கு தயக்கம் காட்டுவதற்குக் காரணம், அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடு தான். அதனால் தான், மத்திய அரசு அதிக பட்சம், 40 சதவீதம் வரை, மானியம் வழங்க முன் வந்துள்ளது. வீட்டு மின் சாதனங்களை, 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரிய ஒளி மூலம் பெற, "சோலார்' தகடுகள் மற்றும் "பேட்டரி' அமைப்பதற்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக, 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள, 1.19 லட்சம் ரூபாயை, நாம் தான், செலவு செய்ய வேண்டும். பேட்டரி இல்லாமல், மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைக்க, 25 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறோம். "சோலார்' தகடுகளை, லட்சங்களில் தான் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஒரு மின்விசிறி, ஒரு மின் விளக்கு என, மின் தேவையை சுருக்கிக் கொண்டால், குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாயில் கூட, சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு, அதிக பட்சமாக, 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான "சோலார்' தகடுகள் அமைக்க, 1.8 கோடி ரூபாய் செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம், 72 லட்சம் ரூபாய் கிடைக்கும். மானிய அறிவிப்பிற்கு முன்னதாக, தாங்களாகவே, "சோலார் பிளான்ட்'டை வீட்டில் நிறுவி இருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், அதை செயல்படுத்தியிருந்தால், அவர்களுக்கும் மானியம் உண்டு. "சோலார் பிளான்ட்'டை வீடுகளில் ஏற்படுத்தித்தர, இதுவரை, 90க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, அங்கீகாரம் வழங்கி உள்ளோம். இதில் முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆண்டிலும் அக்., மாதம் மட்டுமே, ஆன்-லைன் மூலம், மானியம் பெற விண்ணப்பிக்க முடியும்.

செங்கற் களஞ்சியமாகும் நெற்களஞ்சியம் : rice bowl thanjavur turns into bricks bowl




தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயத்தை கைவிட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகள் பலர், கிடைக்கும் காவிரி நீரை பயன்படுத்தி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில், பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத நிலையில், விவசாயம் மட்டுமே இங்கு முக்கிய தொழில்.
பாசனம்:


மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீர், இங்குள்ள காவிரி, வெண்õறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் பாய்ந்து, அதன் மூலம் தான் பாசனம் நடக்கிறது. காவிரி மூலம், 4.69 லட்சம், வெண்ணாறு மூலம், 4.65 லட்சம், கல் லணை கால்வாய் மூலம், 2.56 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இம்மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று காலங்களில் நெல் மட்டுமே பிரதானமாக, விளைச்சல் செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி, 75 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், சம்பா சாகுபடி, 3 லட்சம் ஏக்கர் நிலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. கடந் தாண்டு, 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியும், இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில், சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டன.
பாதிப்பு:


50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், கரும்பு, உளுந்து, துவரை, பச்சைபயிறு, எள், பஞ்சு உள்ளிட்ட பயிர்கள், விவசாயம் செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஜூன் மாதம், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, காவிரி நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதம் முதல், செப்., மாதம் வரை, குறுவை, சம்பா சாகுபடிகளுக்கு, நியாயப்படி வழங்க வேண்டிய, 137 டி.எம்.சி., தண்ணீரையும், கர்நாடக அரசு, வாரம் மற்றும் மாத வாரியாக, முறைப்படி வழங்கவில்லை. காவிரியில் நீர் திறக்கப்படாததால், இந்தாண்டு, 10 ஆயிரம்
ஏக்கருக்கும் குறைவாகவே, தஞ்சாவூரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சம்பா சாகுபடி காலம் துவங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, காவிரியில் இருந்து, கடந்த, 29ம் தேதி முதல், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. இம்மாதம், 15ம் தேதி வரை, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத் தரவு இருந்தும், கடந்த, 8ம் தேதி இரவுடன், தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து, தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமான அளவில் இல்லாததாலும், விவசாய தொழில் நலிவுற்று வருவதாலும், இம்மாவட்ட விவசாயிகள் பலர், வேறு தொழில் களுக்கு தாவி வருகின்றனர். காவிரி, வெண்ணாறு படுகைகளை ஒட்டிய விவசாயிகள் பலர், செங்கல் தயாரிப்பு தொழிலில் களமிறங்கியுள்ளனர். விவசாயத்தை போல, கூலித்தொழிலாளர்களை நியமிக்காமல், பலர், குடும்பம், குடும்பமாகவே செங்கல் தயாரிப்பு தொழிலை செய்கின்றனர்.
விறுவிறுப்பு:


களிமண்ணில் இருந்து செங்கல் அறுக்கும் பக்குவம் தெரியாதவர்கள் மட்டுமே, இத்தொழிலில் தேர்ச்சிப் பெற்ற ஒரிருவரை, துணைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், செங்கல் தயாரிப்பு தொழில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான செங்கல் தயாரிப்பு சூளைகள், ஆற்றுப் படுகைகளில் அமைக்கப் பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் மட்டும், மாதந்தோறும், 10 லட்சம் செங்கற்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள், தஞ்சாவூர் மட்டுமின்றி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களின், கட்டுமான தேவைக்காக அனுப்பப்படுகிறது. செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தஞ்சாவூர் தாலுகா, கூடலூரை சேர்ந்த தேவா, 42, என்பவர்
Advertisement
கூறியதாவது:
லாபம்:


விவசாயத்தை விட செங்கல் தயாரிப்பு தொழிலில் லாபம் கிடைக்கிறது. மேலும், இதற்கு விவசாயத்தை விட, தண்ணீர் பயன்பாடு குறைவு என்பதால், இந்த தொழிலை நாங்கள் ஆர்வமுடன் செய்கிறோம். இத்தொழிலில், நேரத்திற்கு ஏற்ப, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது. பருவமழை துவங்குவதற்குள், சூளையை எரிய வைத்து விட்டால், பின், கவலைப்பட தேவைஇல்லை. ஒரு மாதத்திற்கு முன், செங்கல் ஒன்றின் விலை, 2.80 ரூபாய்க்கு விற்றோம்; இப்போது தேவை அதிகம் இருப்பதால், 3.50 ரூபாய்க்கு விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆற்றுப்படுகையில் மீன் குழம்புவாசம்:


செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சூரிய வெயில் அதிகரிப்பதற்கு முன், அதிகாலையிலேயே, ஆற்றுப் படுகைகளுக்கு குடும்பத்துடன் வந்து விடுகின்றனர். அங்கு, ஒருபுறம் மண் குழைத்தல், அச்சில் கல்அறுப்பு, விறகு சேகரிப்பு, சூளைக்கு கல் அடுக்குதல் போன்ற பணிகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமையல் வேலையும் நடக்கிறது. அங்கேயே, களிமண்ணால் அடுப்புகள் அமைத்து, அதில் சட்டி, பானைகளை வைத்து சமையல் செய்கின்றனர். திறந்த வெளியில், சமைக்கும்போது, காற்று வேகத்தால் பாத்திரங்கள் கரி படிந்துவிடும் என்பதால்தான், சட்டி, பானைகளை பயன்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் மதிய உணவுகளில், மீன் குழம்பு அல்லது வறுவல் பிரதானமாக இடம் பெறுகிறது. மாலை நேரங்களில் சிற்றுண்டியாக, அவித்த மரவள்ளி கிழங்கு, வேர் கடலை, வாழைப்பழம் ஆகியவற்றையும் ருசிக்கின்றனர். சூளை பணிகளை துவக்கும் முன்பும், செங்கற்களை விற்பனைக்கு இறக்கும்போதும், ஆட்டுகிடா வெட்டி, குலதெய் வத்தை வணங்குவதையும் பலர் பின்பற்றுகின்றனர்.
- தினமலர் செய்தியாளர்-