அகதி தற்கொலை03 :agathi_tharkolai_03

[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு;  இறந்தவர் தன் மகன்  பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்;  முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு;  வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு;   நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம்.  – ஆசிரியர்]
[பின் வந்த முழுத் தகவலுக்கு

ஈழத்தமிழர் இரவீந்திரன் உயிர்ப்பறிப்பு - சில விளக்கங்கள் காண்க]



ஈழ ஏதிலியர் இரவிச்சந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-
  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆசுடின்பட்டிக் காவல் சரகம் உச்சம்பட்டியில் உள்ள இலங்கை ஏதிலியர்கள் முகாமில், வருவாய் ஆய்வாளரின் மிரட்டலால் இரவீந்திரன் என்ற ஈழத்தமிழர் அலைபேசிக் கோபுரத்தில் ஏறிக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி திகைப்பையும் வேதனையையும் அளிக்கின்றது.
  இரவீந்திரனின் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றாரா என்பதைச் சரி பார்க்க வேண்டிய அலுவலர் “எங்களிடம் சொல்லாமல் எப்படி வெளியே போகலாம்?” என்று அதை ஒரு  தற்பெருமைச் சிக்கலாக எடுத்துக் கொண்டு வசை பாடியது மனிதநேயம் அற்ற செயல்.
  ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அடைக்கலம் பெற்ற ஈழத் தமிழர்களை அந்த நாடுகள் உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகின்ற நிலையில், தாய்த்தமிழகத்தில் அவர்களை வன்கொடுமையாளர்கள் (தீவிரவாதிகள்) எனவும் வன்முறையாளர்கள் (பயங்கரவாதிகள்) எனவும் கருதி அலுவலர்கள் அச்சுறுத்தி மிரட்டுகின்ற கொடுமைகள் எல்லை மீறிச் சென்ற நிலையில்தான், இரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
  சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்களை நான் பார்வையிட்டு, அங்கே உள்ள நிலைமைகளை விளக்கி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அங்கே அவர்கள் சொல்லொணாத் துயரங்களைத் துய்த்து(அனுபவித்து)க் கொண்டு இருக்கின்றார்கள். தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து விட்டு, உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் கேட்டுத் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை வன்கொடுமையாளர்கள்(தீவிரவாதிகள்) எனவும் வன்முறையாளர்கள்(பயங்கரவாதிகள்) எனவும் கருதுகின்ற அலுவலர்களின் மனப்போக்கு மாற வேண்டும். இது குறித்துத் தமிழக அரசு உரிய வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும்.
  தமிழக அரசு அலுவலர் ஒருவரின் கெடுபிடியால் ஈழத்தமிழர் ஒருவரின் உயிர் பறிபோனது என்கிற செய்தி, உலக அளவில் தமிழகத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது.
  அந்தக் கெட்ட பெயரை நீக்குகின்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்திட வேண்டும். வருவாய் அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரவீந்திரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு அளித்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்” என்று கூறியுள்ளார்.
-ஞா.பி.