கண்ணகிக் கோவிலில் வழிபட 3 நாள் இசைவு தருக! – வைகோ மடல்
மங்கலதேவிக் கண்ணகிக் கோவில் வழிபாடு செய்யத் தமிழ்நாட்டு மக்கள் வரும் சித்திரைப் முழுநிலா(பௌர்ணமி) அன்று ஒரு நாளுக்கு மாறாக மூன்று நாட்கள் வழிபட இசைவளித்து (அனுமதித்து) உதவிட வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மடல் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டு எல்லையோரம் கம்பம், கூடலூர்
கடந்து பளியங்குடி வனப்பகுதியில் ஏறத்தாழ 6.6 புதுக்கல் (கி.மீ).
தொலைவிலும், குமுளியிலிருந்து ஏறத்தாழ 14 புதுக்கல் தொலைவிலும், கேரள
மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 4,380 அடி
உயரத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. மலை மீது உள்ள
இக்கோவிலுக்குக் கேரள அரசின் ஒப்புதல் பெற்ற வல்லுந்துகள் (jeeps) மட்டுமே
செல்ல இயலும்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கலதேவிக் கண்ணகிக் கோவிலில் சித்திரை மாதத்தில்
முழுநிலாநாளையொட்டி(பவுர்ணமி) ஒரு கிழமைக் (வார) காலம் விழா நடத்துவது
வழக்கமாக இருந்தது. பின்னர், கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால்
அந்த விழா மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு, தற்பொழுது ஒருநாள் மட்டுமே
நடைபெறும் விழாவாகச் சுருங்கி விட்டது.
இந்த ஆண்டுச் சித்திரைப் பூரணி ஏப்பிரல் 21 அன்று வருவதால் மங்கலதேவிக் கண்ணகிக் கோவிலில் வழிபடத் தமிழகத்திலிருந்து செல்லும் இறையன்பர்களுக்குச் சித்திரைப் பூரணியான
ஏப்பிரல் 21 அன்று ஒருநாள் மட்டுமே கேரள அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும்,
இம்முறை தமிழ்நாட்டிலிருந்து தமிழக மக்கள் வழிபடக் கூடுதல் எண்ணிக்கையில்
கூடுவார்கள் என்பதால் மூன்று நாட்கள் சென்று வழிபாடு நடத்திடக் கேரள
அரசிடம் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்றும் மங்கலதேவி கண்ணகி கோவில்
வழிபாட்டு மன்றத்தை நடத்தி வரும் யாணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகப் பொதுச் செயலாளர் வைகோ-வை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி வைகோ, கேரள மாநில முதலமைச்சர்
உம்மன் சாண்டிக்கு அனுப்பியுள்ள மடலில், “மங்கலதேவிக் கண்ணகிக் கோவில்
வழிபாடு செய்யத் தமிழக மக்கள் வரும் சித்திரை முழுநிலா அன்று ஒருநாள்
மட்டுமே வழிபாடு செய்ய அளிக்கப்படும் ஒப்புதலுக்கு மாற்றாக ஏற்கெனவே
வழங்கியது போலத் தமிழக மக்கள் மூன்று நாட்கள் வழிபட ஒப்புதலளித்து உதவிட
வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக