சனி, 12 மார்ச், 2016

மராத்தியைக் கட்டாயப் பாடமாக்க சட்டம்: மராட்டிய அரசு முடிவு

மராட்டியத்தில் 1– ஆம் வகுப்பு முதல் 7– ஆம் வகுப்பு வரை மராத்தியைக் கட்டாயப் பாடமாக்க சட்டம்: மாநில அரசு முடிவு

 
மும்பை, மார்ச்சு 12–

மராட்டிய மாநிலத்தின் தாய்மொழி மராத்தி ஆகும். ஆனால் அங்கு பெரும்பான்மையான மக்களால் இந்தி மொழியே பேசப்பட்டு வருகிறது. பள்ளிகளில் இந்தியிலும் அவரவர் விரும்பும் மொழிகளிலும் பாடம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் மராட்டியத்தில் பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாநில கல்வி மந்திரி வினோத்து தவ்டே சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது வெளியிட்டார்.

அவர் கூறியாவது:

மராட்டியத்தில் உள்ள பள்ளிகளில் 1– ஆம் வகுப்பு முதல் 7– ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயமாக்கப்படும். மற்ற மொழி பேசுவோரும் மராத்தியை கட்டாயம் ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும்.

தற்போது பெரும்பாலான பள்ளிகளில் மராத்தி மொழியே இல்லை. அங்கு மராட்டியத்தின் வரலாறு பற்றி கற்றுத் தருவது இல்லை. சிவாசி மகாராசா, சரத்பதி சாகு பற்றி 3 வரிகளில் மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். மராட்டியத்தைப் பற்றி விரிவான வரலாறு கற்றுத் தரப்படவில்லை.

மத்திய அரசின் (சி.பி.எசு.இ.) பாடத் திட்டத்தின் கீழ்தான் பெரும்பாலான பள்ளிகள் இயங்குகின்றன. பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள்  இப்பாடத் திட்டத்தில்( சி.பி.எசு.இ.)தான் படிக்கிறார்கள். அவர்களுக்கு நம் வரலாற்றைச் சொல்லித் தருவதில்லை.

எனவே மராத்தியைக் கட்டாயப் பாடமாக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர் : மாசி 29, 2047 / 12.03.2016
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக