70broken-carwindow

தேவதானப்பட்டியில் நள்ளிரவில் பதற்றம்!

மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு

  தேவதானப்பட்டியில் வெடி வெடித்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது.
  தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சளாறு அணைப்பகுதியில் தனியார் திருமண மண்படம் உள்ளது. இத்திருமண மண்டபத்தில் புல்லக்காபட்டியைச்சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவையொட்டி தாய்,மாமன் வரவேற்பு நிகழ்ச்சியில் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளும், கண்ணாடிகளும் அதிர்வடைந்தன.
  மேலும் மஞ்சளாறு அணைச் சாலையில் ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த சேக்கு என்பவருக்குச் சொந்தமான சொகுசுஉந்தில் பின்புறம் உள்ள கண்ணாடியும் இடப்புறம் உள்ள கண்ணாடியும் நொறுங்கி விழுந்தன. இதனைக்கேள்விப்பட்ட அப்பகுதி இளைஞர்கள் கூட்டமாக வந்து மண்டபத்தை முற்றுகையிட்டனர். அதன்பின்னர் காவல்துறையினர் வந்து அமைதிப்படுத்தினர்.
  அதன்பின்னர், திருமண மண்டபங்களில் வெடிகள் வெடித்தால் வாடகைக்கு விடக்கூடாது என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுத் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் வெடிகள் வெடிப்பதாக இருந்தால் வாடகைக்கு விடமாட்டோம் எனத் திருமண மண்டபத்தைச் சேர்ந்த நிருவாகிகள் கூறினர். அதன்பின்னர் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
  தேவதானப்பட்டிப் பகுதியில் காதுகுத்துவிழா, திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி எதுவானாலும் தடை செய்யப்பட்ட வெடிகள் வெடிப்பது வழக்கமாக உள்ளது. எனவே காவல்துறையினர் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
70vaigaianeesu