பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைக் கடத்தத் திட்டமிடும் குற்றக்கும்பல்(மாபியாக்கள்)
தேவதானப்பட்டி பகுதியில் பன்னிரண்டாம்
வகுப்பு மாணவிகளைக் கடத்தத் திட்டமிட்டுள்ளது குற்றக்கும்பல்(மாபியா).
தேவதானப்பட்டி, செயமங்கலம், கெங்குவார்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதியில்
இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும்
தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம், வத்தலக்குண்டு சென்று படிக்கும்
மாணவிகளும் உள்ளனர். இவ்வாறு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை
அவர்களின் பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவிகளின் காதலர்கள், மிதியூர்தி
ஓட்டுநர்கள், கடை வைத்திருப்பவர்கள் ஆகியோர்கள் கூட்டுச்சேர்ந்து கடத்தத்
திட்டமிட்டுள்ளார்கள். தேவதானப்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
பள்ளிவளாகத்தில் வைத்து மாணவிகளை மகிழுந்தில் கடத்தியது குற்றக் கும்பல்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொதுத்தேர்வு எழுதி முடித்தவுடன் பன்னிரண்டாம்
வகுப்பு மாணவிகளைத் திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய பகுதிகளுக்குக் கடத்திச்
சென்றுள்ளனர். இதே நிலை தேனி மாவட்டம் முழுவதும் உள்ளது. இவ்வாறு
கடத்தப்படும் மாணவிகளுக்கு ஒரு சிலர் சான்றுரை வழக்குரைஞரிடம் (நோட்டரி
பப்ளிக்) சான்றிதழ் பெற்று கோயில்களில் தாலி கட்டி விடுகின்றனர்.
பள்ளிநிருவாகத்தினர் இதன் தொடர்பாகப் புகார் கொடுத்தால் பள்ளி பெயர்
கெட்டுவிடும் என்பதால் புகார் கொடுக்க முன்வருவது இல்லை.
கடந்த வருடம் புதுக்கோட்டையைச்சேர்ந்த
மாணவிகளை அப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடை நடத்துநரும்
சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவரும் சேர்ந்து கடத்தி கொடைக்கானல் செல்லும்
வழியில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். எனவே
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளைப் பெற்றோர்கள் கண்காணித்து
குற்றக் கும்பல்களிடமிருந்து காப்பாற்ற முன் எச்சரிக்கையுடன்
இருக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், காவல்துறையினரும் எச்சரிக்கை
விடுத்துள்ளனர். இவ்வாறு ஏதேனும் துன்பநிகழ்வு நடந்தால் தொடர்பு
கொள்வதற்காக ஆங்காங்கே காவல்துறையினரின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி
கொடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக