70seyamangalam-accidents

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால்

தொடரும் துயரநேர்ச்சிகள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் வண்டிமோதல்கள் தொடர்கின்றன.
  தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாக வைகை அணை,   ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம். மேலும் கன ஊர்திகள் பெரியகுளம் வழியாகத் தேனி சென்றால் 10 அயிரைக்கல்(கி.மீ.) தொலைவு கூடுதலாக இருக்கும். இதனால் பயணநேரம், எரிபொருள் செலவு, ஊர்திப் போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனால் தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாகப் பல கன ஊர்திகள் செல்கின்றன.
  மேலும் ஆண்டிபட்டி, சின்னமனூர், தேவாரம் பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதற்காக நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று காற்றாடிகளை ஏற்றிக்கொண்டு கன ஊர்திகள் வருகின்றன. இவ்வாறு வரும் கன ஊர்தி ஓட்டுநர்களுக்கு நேர்ச்சிப்பகுதி, கண்ட(அபாய)ப் பகுதி, வேகத்தடை எதுவும் தெரியாது. இதனால் கன ஊர்தி ஓட்டுநர்கள் துயரநேர்ச்சிகளைச் சந்திக்கநேரிடுகிறது.
  மேலும் செயமங்கலம் காழி(காப்பி)த்தொழிற்சாலை அருகே செங்குத்தான மேடு உள்ளது. இந்த மேட்டில் ஊர்திகள் சென்றால் எதிர்வரும் வாகனங்கள் தெரியாது. அதே போல கீழே இருந்து ஊர்தி சென்றால் மேலே வரும் ஊர்தி தெரியாது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வண்டிமோதல் ஏற்படுகிறது.
 எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியை நேர்ச்சிப் பகுதி என அறிவித்துச் செங்குத்தான சாலையைச் சீரமைக்க முன்வரவேண்டும் என ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
70vaigaianeesu