ஞாயிறு, 15 மார்ச், 2015

தேவை கீழாநெல்லி!

70thevathana-keezhanelli
  தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சள் காமாலை வேகமாக பரவி வருவதால் கீழாநெல்லிச் செடிக்கு மிகு தேவை ஏற்பட்டுள்ளது.
  மஞ்சள்காமாலை நோய் வந்தால் கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்படைந்தால் கை, கால், வயிற்றுப்பகுதி வீங்குவதோடு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கல்லீரல் பாதிப்படைந்தால் அதற்கான ஆய்வுக் கருவிகள், மதுரையிலும் சென்னையிலும்தான் உள்ளன. பணவசதியற்றவர்களால் இந்த மருத்துவம் மேற்கொள்ளமுடிவதில்லை. இதனால் பழைய மருத்துவமுறையான ஆயுர்வேத, சித்த மருத்துவர்களை நாடுகிறார்கள்.
  சித்தமருத்துவத்தில் கீழாநெல்லிச்செடியைப் பொடி ஆக்கி அதன்பின்னர் ஆட்டுப்பாலில் கலந்து தொடர்ந்து குடிந்து வந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. தற்பொழுது வெயில் காலம் என்பதால் மஞ்சள் காமாலை வந்து பலர் பாதிப்படைகின்றனர். இதனால் வயல், வாய்க்கால் வரப்புகளிலும், நீர்ப்பாங்கான நிலங்களிலும் விளையும் கீழாநெல்லிச்செடிக்கு தற்பொழுது மிகு தேவை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கல்லீரல், இதயம் போன்ற நோய்களைச் சரிசெய்ய க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர மாவட்ட நிருவாகம் முன்வரவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
70vaigaianeesu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக