சனி, 21 மார்ச், 2015

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

logo-semmozhiniruvanam01

(இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)
    தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை உலகிற்கு உணர்த்துகிறது. நம் உரிமையைக் கேட்பதற்குக் கூட நாம் தயங்குவதில் இருந்தே நம் வெட்கங் கெட்ட நிலை அனைவர்க்கும் புலனாகின்றது.
  உரிமைக்கு ஊறு நேரும்பொழுது மிக மிகச் சிறிய எதிர்ப்பைக் காட்டக்கூடத் தயங்கும்  தமிழால் வாழ்வோரின் தகைமைக்கு(!) ஒரு சான்று.
   
  சமற்கிருதம், அரபி, பெர்சியன் முதலான மொழிகளைச் செம்மொழிகள் எனச் சொல்லி பல கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருகிறது சமயச் சார்புடைய மத்திய அரசு. தமிழுக்குப் பல போராட்டங்களுக்குப் பின்பே தமிழின் செம்மொழித் தன்மைக்குரிய தகைவேற்பு வழங்கப்பட்டது. உடனே எப் பேராட்டமும் முயற்சியும்  இன்றிச் சமற்கிருதத்திற்கும் செம்மொழி ஏற்பு வழங்கப்பட்டது. ஆனால், செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே சமற்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தொடருகின்றன. தமிழுக்கோ ஒப்பிற்கு ஓரிரண்டு கண் துடைப்பாக வழங்கப்படுவது தவிர முழுமையான நிதி உதவிகள் வழங்கப்படவில்லை. அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.
 
   செம்மொழிச் செயற்பாட்டுத் திட்டங்களில் ஒன்று செம்மொழி அறிஞர்களை விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல். ஆனால், தமிழில் புலமையுடையோர் இல்லை எனத் தமிழறிஞர்களை  இழிவுபடுத்தும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. நாமும் அமைதி காப்பதன் மூலம் அதனை ஒப்புக் கொள்கின்றோம்.
  ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெர்சியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும். செம்மொழித்தமிழ் அறிஞர்களுக்கும் இவ்வாறு வாணாள் முழுவதும் ஆண்டுதோறும் பரிசுஊதியம் வழங்கும் வகையில்  விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே தவிர இது வரை ஒருவருக்குக் கூட அவ்வாறு விருது வழங்கப்படவில்லை. தமிழ்ப்புலமையுடையோர் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறது என்றால், நாமும் ஆமாம், ஆமாம், எங்களில் அறிஞர்கள் யாருமில்லை; அந்த அளவிற்கு வளர்ச்சியில்லாத மொழியே எங்கள் தமிழ் மொழி என்பதுபோல் தலையாட்டிக் கொண்டு அமைதி காத்துவருகிறோம். சமற்கிருதத்திற்கும்  தொன்மையான சிறப்பு மிக்க உலக மூல மொழியான தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் முழுவதும் ஆண்டுதோறும் பரிசூதியம் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதைக் கேட்பதற்கு நமக்குத் துணிவில்லை. ஒருவேளை அவ்வாறு விருது வழங்கினால் நமக்கா கிடைக்கப் போகிறது? வேறு யாரோ விருது வாங்க நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையா என்று தெரியவில்லை.
  
   இவை தவிர சமற்கிருத அறிஞர் ஒருவருக்குப் பன்னாட்டு நிலையில் ஆண்டுதோறும் வாணாள் முழுவதும் உரூபாய் 50,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அயல்நாட்டைச் சேர்ந்த செம்மொழியாம் தமிழறிஞர் ஒருவருக்குக் குறள்பீடம் விருது   என உரூபாய் 5,00,000 வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்படியானால்  சமற்கிருதத்தைவிடத் தமிழ் உயர்ந்ததாக ஒத்துக் கொண்டதாகுமே! விடலாமா? எனவே, எவ்வகை முறையீடும் போராட்டமும் இன்றிச் சமற்கிருத அறிஞருக்கான இப்பரிசுத் தொகை உரூபாய் 5 இலட்சத்திற்கு ஒருமுறை விருதாக உயர்த்தப்பட்டது.
  உண்மையில், குறள் பீடம் பன்னாட்டு விருதுகள் இரண்டு வழங்கப் பெறும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று இந்தியாவில் தங்கியிராத இந்தியர் ஒருவருக்கும் மற்றொன்று இந்தியரல்லாத அயலவர் ஒருவருக்கும் வழங்கப்பெறும். சமற்கிருதத்திற்கு ஒரு விருது; ஆனால், தமிழுக்கு இரண்டா என எண்ணியே குறள்பீட விருது ஒன்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
  அறிவித்துள்ள விருதுகளையாவது காலமுறையில் வழங்கியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 2004ஆம் ஆண்டு   அக்டோபர்த் திங்கள் 12 ஆம் நாள் தமிழுக்குரிய செம்மொழி ஏற்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிற்கான விருதாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. அஃதாவது  2004-2005ஆம் ஆண்டிற்குரிய தொல்காப்பியர் விருதோ, குறள் பீடம் விருதுகளோ இளம் அறிஞர் விருதுகளோ யாருக்கும் வழங்கப்படவில்லை. (மூத்த அறிஞர் விருது பற்றித்தான் வாயே திறக்கவில்லையே!) தமிழறிஞர்கள் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறதா? சமற்கிருதத்திற்குக் கீழான நிலையில்தான் தமிழாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்ற பரந்த(?) மனப்பான்மையா எனத் தமிழ் டிரிபுயூன் (Tamil Tribune) கேட்டது. இருப்பினும் வழங்கப்படவில்லை.
தொல்காப்பியர் விருது 2005-2006ஆம் ஆண்டிற்கு மட்டுமே (பேராசிரியர் அடிகளாசிரியர்) அறிவிக்கப்பட்டுள்ளது. குறள்பீடம் விருதும் அயலவருக்கான ஒரு விருது மட்டும் (பேராசிரியர் சியார்சு அர்ட்)  2006-2007இற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக விருது வாங்கும் அளவிற்குக் கூடத் தமிழறிஞர்கள் யாரும் இல்லை என்பது மத்திய அரசின் வாதம் போலும். ஆனால் சமற்கிருத விருது சிற்றூரைச் சேர்ந்தவருக்குக் கூட வழங்கிச் சிற்றூரிலும் அதற்குச் செல்வாக்கு உள்ளதாக அறிவிக்கத் தயங்குவதில்லை.
  இளம்அறிஞர் விருது 2005-2006 (முனைவர் அறவேந்தன், முனைவர் மணிகண்டன், முனைவர் கலைமகள், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர் பழனிவேலு), 2006-2007 (முனைவர் சந்திரா, முனைவர் அரங்க. பாரி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் பவானி, முனைவர் கலைவாணி), 2007-2008ஆம் ஆண்டுகளுக்கு மட்டுமே (முனைவர் செல்வராசு, முனைவர் வேல்முருகன், முனைவர் மணவழகன், முனைவர் சந்திரசேகரன், முனைவர் சைமன் சான்) அறிவிக்கப்பட்டது. எனவே, இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய விருதுகள் வழங்காமை தமிழுலகத்திற்கு இழப்பு என்னும் உணர்வு ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை? பரபரப்பான அரசியல் விளம்பரத்தில் விரிவான செய்தி இடம் பெறாது என்ற நம்பிக்கையோ?
  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய 2010  சூனில் 2008-2009,   2009-2010 வரை விருதுகளை அறிவித்து வழங்கியிருக்கலாமே.  அவற்றையும் ஏன் அறிவிக்கவில்லை. உலக அறிஞர்கள் முன்னிலையில் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து இருக்கலாமே! தமிழால் பெருமை பேசுவோர்களுக்குத் தமிழறிஞர்களைச் சிறப்பிக்க மனமில்லாமல் போனது ஏன்? சரி போகட்டும்! அறிவித்த விருதுகளையாவது குடியரசுத்தலைவர் மூலம் வழங்கினார்களா? அவ்வாறு வழங்கவில்லையே! ஏன்? சமற்கிருதம் முதலான மொழியறிஞர்களுக்கு வழங்கியதுபோல் இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்குவதைத் தடுத்தது யார்? அதுதான் போகட்டும். குடியரசுத் தலைவர் நிகழ்ச்சித் திட்டத்தைப் பார்த்தால் வாரத்தில் 4 நாட்கள்கூடத் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில்  பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறிருக்க தமிழறிஞர்களுக்கான விருதுகளுக்கு நாள் ஒதுக்காமல் முட்டுக்கட்டையாக இருப்பது யார்? ஏன்?
விருது தராமல் விருதுத் தொகை மட்டும் தந்த பொழுது அதை எவ்வாறு இந்த அறிஞர்கள் வெட்கம் சிறிதுமின்றி ஏற்றுக்கொண்டார்கள்?
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே
ஊமைச்சனங்களடீ
மானம் சிறிதென் றெண்ணி
வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில்-கிளியே
இருக்க நிலைமையுண்டோ?
எனப் பாரதியார் இவர்களுக்காகத்தான் பாடிச் சென்றாரோ?
இன்று அவர் இருந்திருந்தால்
விருதுபெறுவதற்கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
எனப் பாடியிருப்பார் அல்லவா? விருதுகள் வழங்காமல் விருதுத் தொகைகள் மட்டும் வழங்கப்பட்டது ஏன் என எண்ணலாம். நிதி ஒதுக்கப்பட்ட ஆண்டிற்குள் அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் அல்லவா? எனவே, வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கோரிப் பெறப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்தினால்  தணிக்கைத் தடை வருமல்லவா? எனவேதான் விருதுகளைக் குடியரசுத் தலைவர் தரும்பொழுது தரட்டும். விருதுத் தொகைகளை  வழங்குவோம் என வழங்கியுள்ளனர். விருதுகள் வழங்காதது விருதாளர்களுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தாலும் பெருமைக்குரிய விருதுத் தொகையை அறிந்தேற்பிற்குக் காரணமான முதல்வர் வழங்கும் பொழுது வாங்குவதுதானே ஏற்றது என வாங்கிவிட்டனர்.
    விருதுத் தொகைகள் வழங்காததன் காரணம் என்ன தெரியுமா? ஆரிய மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிப்போன மத்திய அரசு தமிழ் டிரிபுயூனில் குறிப்பிட்டாற்போன்று சமற்கிருதத்திற்கு இணையாக எந்த மொழியையும் ஏற்க விரும்பவில்லை. உண்மையிலேயே சமற்கிருதத்தைவிடப் பன்மடங்கு மேம்பட்டதாக உயர் தமிழ் இருப்பினும் ஒப்பிற்குச்  சமற்கிருதத்திற்கு அடுத்தநிலை தமிழ் எனக் கூறி வந்தாலும் அதற்கு மிகவும் கீழான நிலையே கொடுக்க விரும்புகிறது. சமற்கிருதத்திற்கு அடுத்துள்ள நிலையில் பல மொழிகளைக் கூறிவிட்டு அதில் தமிழையும் சேர்த்து விட்டால் தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை மறைத்து விடலாம் அல்லவா? எனவே, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி ஏற்பு நடைமுறைக்கு வருவதற்குக் காத்திருக்கிறார்கள்.
  மருத்துவர் கி.ஆ.பெ.மணிமேகலை கண்ணன் நடத்தும் தமிழ்க்கழகம் (அகாதமி) சார்பாக அதன் தலைவர் மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் உயர் நீதிமன்றத்தில் செம்மொழித் தகுதியல்லாத மொழிகளுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார். தீர்ப்பு வருவதற்குள் அவசரம் அவசரமாக  அம் மொழிகளுக்கான அறிந்தேற்பாணையைத் தீர்ப்பிற்கு உட்பட்டுச் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார்கள். வழக்கு முடிவில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வரவழைத்து விடலாம் என எதிர் நோக்குகிறார்கள். அவ்வாறு வந்தால் அவையும் செம்மொழிகளாகும். மலையாள மொழியினர் சேரநாட்டில் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் செம்மொழிஏற்பினை வேண்டி உள்ளார்கள். வங்காள மொழியினரும் செம்மொழிஏற்பினை வழங்க வேண்டி உள்ளார்கள். இவ்வாறு இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் செம்மொழி ஏற்பு வழங்கிவிட்டால்  சமற்கிருதம் தவிர பிற அனைத்தும் ஒரு கும்பலாகக் காட்சியளிக்கும். கும்பலோடு கும்பலாகத் தமிழுக்கான விருதுகளை வழங்கினால் அதன் சிறப்பு யாருக்குத் தெரியப் போகிறது? என்னும் உயர்வு(!) மனப்பான்மை. எனவே, பிற மொழிகளுக்கான செம்மொழி ஏற்பாணை நடைமுறைக்கு வருவதற்காகக் காத்து உள்ளார்கள்
    செம்மொழிக்காலம் என்பதற்குக் கி.மு. (கிறித்து பிறப்பிற்கு முன்புள்ள காலம்) எனப் பொதுவாகக் குறித்திருக்க வேண்டும். அல்லது 2000 ஆண்டு முன் வரலாறு என்று  இருந்ததையாவது மாற்றாமல் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் 1000 ஆண்டு என அறிவித்துப் பிற மொழிகளைப் பட்டியலில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஒத்துக்  கொண்டார்களே! பிறகு போராட்டத்திற்குப் பின்தானே 1500 ஆண்டுப் பழமை என மாற்றினார்கள். எனவே தமிழால் பிழைப்பவர்களுக்குப் பிறருக்கான விருதுகள் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அவர்கள், பிற மொழிஅறிஞர்களுக்கான விருதுகள் வழங்கும் வரை பொறுத்துக் கொள்வார்கள் அல்லவா? அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இதுவரை தமிழக அரசு மத்திய அரசைக் கண்டிக்க வேண்டா – வற்புறுத்தி விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியிருக்கலாமே! ஏன் நடத்தவில்லை? முதல்வர் தில்லிக்குச் சென்ற பொழுதுகூட விருதளிப்பை வைத்திருக்கலாமே! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்கிறீர்களா? முதல்வர் தமிழர் நலனுக்கு அனுப்பும் மடல்களே குப்பைத் தொட்டிக்குப் போகும்பொழுது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் கடமை உணர்வுடன் அனுப்பும் மடல்களுக்கா மதிப்பிருக்கப் போகிறது! அனைவரும் சமம் எனப் பேசும் மத்திய அரசு, அயல்நாட்டு மொழியாம் ஆரியத்தை உயர்த்துகிறது; மண்ணின் மொழியான உயர்தனிச் செம்மொழித் தமிழைத் தாழ்த்துகிறது. இதனைக் கடமையாக எண்ணும் மத்திய அரசினருக்கு வெட்கம் எங்கே வரப் போகிறது?
 அரசியல்வாதிகளுக்குத்தான் வெட்கம் கிடையாது. விருதுகளால் மதிப்படையும் அறிஞர்களுக்குமா வெட்கம் இல்லை. விருதுகள் வழங்கிவிட்டதாக எண்ணி நண்பர்களும் சுற்றத்தாரும்  விருது எங்கே? விருது எங்கே? எனக் கேட்கும் பொழுது நாணிக் குறுகுகிறார்களே! கிளர்ந்து எழ வேண்டாவா?
    
  விருதுக்குத் தெரிவு செய்யப்பெற்ற அறிஞர்களே! உண்மையிலேயே நீங்கள் தமிழை மதிப்பதாயின் குறைந்த காலக்கெடு கொடுத்து குடியரசுத்தலைவர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவில்லையெனில் திருப்பித் தருவதாக அறிக்கை விடுங்கள்! தமிழை மதிக்காதவர்களும் தமிழ்ப்பகைவர்களே. ஆதலின்
      
  எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி    
  இட்டழைத்தாலும் தொடேன்
என அறிவித்து  விருதுத் தொகைகளைத் திருப்பியளியுங்கள். தமிழ் என்பது மொழியை மட்டும் குறிப்பதில்லை. வீரம், மானம் முதலான உணர்வுகளையும் குறிப்பது. எனவே, படித்த தமிழுக்காவது மதிப்பளித்து தன்மானத்தமிழர்களாக மாறுங்கள். இப்படி ஒரு நெருக்கடி கொடுத்தாலன்றித் தமிழ்மானம் காக்கப்படாது என்பதை உணருங்கள்.
தமிழை மதிக்கும் தமிழர்களாய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!
 – இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக