தேவதானப்பட்டிப் பகுதியில்
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான
குளங்கள் ஆக்கிரமிப்பு
தேவதானப்பட்டிப் பகுதியில்
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால்
அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலத்தில் வருகின்ற நீரைத்
தேக்கவிடாமல் தடுத்து வெளியேற்றுகின்றனர். இதனால் கோடைக் காலத்திற்கு
முன்பே குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவை நீரின்றி வறண்டு
காணப்படுகின்றன.
தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையில்
மத்துவார்குளம் என்ற கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் கடைகள்,
பைஞ்சுதை(cement) தொட்டிகள் கட்டும் தொழிற்சாலைகள் முறைகேடாகக்
கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழையால் பெருகிய தண்ணீர்
உடனடியாக வெளியேற்றப்பட்டு இப்பொழுது கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
இதே போல சில்வார்பட்டியில் உள்ள கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டு அந்தக் கண்மாயில் தென்னந்தோப்புகள், வயல்கள் என ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்பொழுது நீர் வறண்டு காணப்படுவதால் அங்கு உழுவை மூலம் குளத்தினைக்கைப்பற்றி வேளாண்பணிகள் செய்துவருகின்றனர்.
இதே போல குள்ளப்புரம் கண்மாய்தான்
இப்பகுதியில் பெரிய கண்மாய் ஆகும். அங்கு இரவு, பகலாகப் பொதுப்பணித்துறை
அதிகாரிகள் உடந்தையுடன் கரம்பை மண் எடுக்கப்பட்டு கண்மாய் கரைகள்
உடைக்கப்பட்டு அருகில் உள்ள தோப்பில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எ.புதுப்பட்டியில் உள்ள கண்மாயில் ஆக்கிரமித்து பல காணி பரப்பளவில் தென்னை, வாழை, கரும்பு பயிரிடப்பட்டுள்ளன.
இதே போல பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள
புதிய குளம் கண்மாய் கவரப்பட்டு, அங்கு இலவம் மரங்கள் நட்டுப்பயிர்த்தொழில்
நடைபெற்று வருகிறது. இவ்வாறு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்கள்
கவரப்படுவதால் அப்பகுதியில் மழை நேரத்தில் நீரைத் தேங்கவிடாமல்
அடாவடித்தனமாக வெளியேற்றுகிறார்கள். இதனால் குளம், கண்மாய், ஏரிகளை நம்பி
உழவு செய்யும் உழவர்கள் தண்ணீரின்றி அல்லல்படுகிறார்கள்.
இதன் தொடர்பாகப் பொதுமக்கள் சார்பில்
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் குளத்தைக்காணோம்,
கண்மாயைக்காணோம், ஏரிகளைக்காணோம் எனக் காவல்நிலையத்தில் பொதுமக்கள்
சார்பில் புகார் கொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக