செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தமிழக உணர்வு புறக்கணிப்பு

http://img.dinamalar.com/data/gallery/gallerye_235208405_784478.jpg


புதுதில்லி:"இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது' என, தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை உதாசீனம் செய்யும் வகையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசை, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், நேற்று சந்தித்து பேசினர். அவரும், கொழும்பு வரும்படி, பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பு விடுத்தார்.


இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த, கடைசி கட்டப் போரின் போது, ஏராளமான போர்க் குற்றங்களும், இனப் படுகொலைகளும் நிகழ்ந்தன. தமிழர்களுக்கு எதிராக நடந்த, இந்த பாதகங்களுக்கு நீதி கேட்டு, தொடர்ந்து, பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அதனால், "நவம்பர், 15 முதல், 17ம் தேதி வரை, இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது' என, அ.தி.மு.க., - தி.மு.க., என, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.இது தொடர்பாக, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா இரு முறை கடிதங்களையும் எழுதியுள்ளார். "பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு செல்லக்கூடாது' என, பார்லிமென்டிலும், தமிழக எம்.பி.,க்கள், குரல் எழுப்பி வருகின்றனர். நேற்றும் கூட, ராஜ்யசபாவில், இது தொடர்பாக, தமிழக எம்.பி.,க்கள் பேசினர்.


இந்தச் சூழலில், காமன்வெல்த் நாடுகளின், மாநாட்டில் பங்கேற்க வரும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷே சார்பில் அழைப்பு விடுக்க, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரீஸ், நேற்று முன்தினம் டில்லி வந்தார். நேற்று அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.


இந்தச் சந்திப்பு தொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக மீனவர்கள், 100க்கும் மேற்பட்டோர், இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடி வருவது குறித்து, அமைச்சர் பெரீஸ் உடன் பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், மனிதாபிமான அடிப்படையில், அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.இலங்கையில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மன்மோகன், இதன் மூலம், இலங்கை வாழ் மக்களிடையே, சமரச உணர்வு அதிகரிக்கும் என்று தெரிவித்தார். தேர்தலை, சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நம்பகமான முறையிலும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்த, இலங்கை அமைச்சர் பெரீஸ், "வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலுக்கான பிரசாரம், தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒன்பது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 350 பேர் போட்டியிடுகின்றனர்.
காமன்வெல்த் மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்கள், தேர்தல் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, தனக்கு அழைப்பு விடுத்த, இலங்கை அரசுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் நன்றி தெரிவித்தார்.இவ்வாறு மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமரைச் சந்தித்த பின், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும், பெரீஸ் சந்தித்தார். அப்போது, இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்களை விடுதலை செய்வது, இந்திய - இலங்கை மீனவர்கள் சங்கத்தினர் சந்தித்து, தங்களுக்குள்ள பிரச்னைகள் குறித்து பேசுவது உட்பட, பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடந்த அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், அந்நாட்டில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை, இந்தியா புறக்கணிக்க வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என, தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அந்த எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், அதை உதாசீனம் செய்யும் வகையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை அமைச்சரின் பேச்சு அமைச்சர் வாசன் கண்டனம்:""தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் கூறியுள்ள கருத்து கண்டனத்திற்குரியது,'' என, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டில்லி வந்த பெரீஸ், நிருபர்களிடம் பேசும் போது, "கச்சத் தீவை திரும்ப தர முடியாது; அது, முடிந்து போன பிரச்னை. கடல் எல்லையைக் கடந்து வரும் தமிழக மீனவர்களை கைது செய்வது, சரியான நடவடிக்கை' என, கூறியிருந்தார்.


இது தொடர்பாக, மத்திய அமைச்சர் வாசன், சென்னையில் நேற்று கூறியதாவது:சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களை விடுவிக்க மாட்டோம் என, இலங்கை அரசு, பல தடங்கல்களை ஏற்படுத்துகிறது. இதை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரீசும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுஏற்புடையதல்ல; கண்டிக்கத்தக்கது.இலங்கை அமைச்சரின் பேச்சு, தமிழக மக்களுக்கு, ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்கள், மீனவர் பிரச்னையில், இரு நாட்டிற்கும் இடையே நடைபெறவுள்ள, சுமுக பேச்சு வார்த்தைக்கு இடையூறாக அமையும்.இவ்வாறு அமைச்சர் வாசன் கூறினார்.


மத்திய அமைச்சர் நாராயணசாமி அளித்த பேட்டி:இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க வரும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அழைப்பு விடுக்க, இலங்கை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள், டில்லி வந்துள்ளனர்; அது தவறல்ல."காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், டில்லி சென்று நேரடியாக, இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றன. காமன்வெல்த் மாநாடு, நவம்பரில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா பங்கேற்பது குறித்து, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கலந்து பேசி, பிரதமர் நல்ல முடிவை எடுப்பார்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக