திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கருவூலமான பழைய செய்திகள்!

கருவூலமான பழைய செய்திகள்!

கடந்த, 20 ஆண்டுகளாக, பத்திரிகை செய்திகளை படிப்பதோடு மட்டுமின்றி, அவற்றை பாதுகாத்து வரும், விஸ்வநாதன்: நான், சென்னையில் வசிக்கும், பொறியியல் பட்டதாரி. பாரத் பெட்ரோலியத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவன். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், வருகையும், நம்மை
பல விஷயங்களில் இருந்து அன்னியப்படுத்திவிட்டன. தொலைக்காட்சி வருகைக்கு பின், வானொலியும், "இன்டர்நெட்' வருகைக்கு பின் தொலைக்காட்சியும், தங்களின் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. இளம் வயதிலிருந்தே, பத்திரிகையை ஆர்வமுடன் படித்து வருகிறேன். அதன் காரணமாக, இன்றைய இணைய உலகத்திலும், 1991ம் ஆண்டு முதல் தற்போதுள்ள, பல்வேறு தினசரி, வார மற்றும் மாத இதழ்களை தொடர்ந்து படிப்பதோடு மட்டுமின்றி, அவற்றை பாதுகாத்து, பத்திரப்படுத்தி வருகிறேன். ஆரம்பத்தில், பழைய நாளேடுகள், வார இதழ்களை, இரவலாக பெற்று தான் படித்து வந்தேன். அப்போது, அவற்றில் ஏதேனும் முக்கியமான செய்திகள் இருந்தால், உரிய அனுமதியோடு அவற்றை கத்தரித்து, பாலிதீன் கவர்களில் பத்திரப்படுத்துவதை, வழக்கமாக கொண்டிருந்தேன். பின்னர், நானே, தினமும் பத்திரிகைகளை வாங்க ஆரம்பித்தேன். 58 வயதில் சேகரிக்க துவங்கிய நான், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரை இப்பழக்கத்தை கடைபிடிக்கிறேன். இதனால், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, அரசியல், கலைகள் என, 40க்கும் மேற்பட்ட தலைப்புகளில், சேகரிக்கப்பட்ட செய்திகள் என்னிடம் உள்ளன. இவற்றை, வீட்டில் உள்ள, ஐந்து அலமாரிகளில், அகர வரிசைப்படி அடுக்கி பாதுகாக்கிறேன். பத்திரிகை செய்திகளை சேகரிப்பதை, முழு ஈடுபாட்டுடன் செய்ததால், 20 ஆண்டுகளில் எவ்வித சலிப்பும் வந்ததில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு, பழைய செய்திகள் தேவைப்படும் போது, நான் சேகரித்ததை கொடுத்து உதவுகிறேன். உலகமே, "கூகுள்'மயமாகி விட்டாலும், பழைய செய்திகள் என்றுமே பொக்கிஷம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக