செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

உதவ முன்வர வேண்டும்!

உதவ முன்வர வேண்டும்!
 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_784564.jpg

வறுமை, பாலியல் வன்கொடுமை மற்றும் அனாதையாக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பு மற்றும் கல்வியறிவு தரும், கவுதமன்: நான், கும்பகோணத்தில் உள்ள, கபிஸ்தலத்தில் பிறந்தேன். 1977ல், நண்பர் ஒருவர், சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை படிக்க கொடுத்தார். அந்த புத்தகத்தை படிக்க படிக்க, என்னில் மனமாற்றம் ஏற்பட்டது. அன்று முதல், விவேகானந்தரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, அவரை பின்பற்ற ஆரம்பித்தேன்.அதனால், அவ்வப்போது கும்பகோணத்தில் உள்ள, வள்ளலார் இல்லத்திற்கு செல்வேன். அங்குள்ள பெரியவர் ஒருவர், ஒவ்வொரு வீடாக யாசகம் பெற்று, ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வந்தார். சேவை மற்றும் தியாகத்தை, அவரை பார்த்து கற்றுக்கொண்டேன்.ஓசூரில் குடியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு, இளையோர் மற்றும் நல்லவர்கள் உதவியுடன் சேவை செய்ய ஆரம்பித்தேன். 1994ல், சேவா பாரதியின் அன்பு இல்லத்திற்கான கிளையை, ஓசூரில் ஆரம்பித்தேன். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தை, பெற்றோர் தற்கொலை செய்ததால் அனாதையான குழந்தை, பெற்றோரின் நெறியற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட குழந்தை, பெண் குழந்தை வேண்டாம் என, தூக்கி வீசப்பட்டோர் பற்றி, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும். ஆனால், உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இப்படி, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து, எங்கள் சேவா இல்லத்தில் வளர்க்கிறேன். வறுமை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் இங்கு தங்குவதால், மற்ற குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து, பாசத்துடன் வளர்க்கின்றனர். "சாரதேஸ்வரம்' என்ற கோட்பாட்டை முன் வைத்து, ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை சிறு சிறு குடும்பமாக பிரித்து, 1 ஏக்கர் நிலத்தில், 3 லட்ச ரூபாய் செலவில், தனி வீடுகள் கட்டி தந்துள்ளோம். அங்கு அம்மா, அக்கா, தங்கை என, உறவு முறைகளோடு தனி தனி வீடுகளில் வாழ்வதால், தாங்கள் அனாதைகள் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக