ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இலங்கை நட்பு நாடு இல்லை : கருணாநிதி

இலங்கை நட்பு நாடு இல்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ளாவிடில் பின்னர் வருந்த நேரிடும்: கருணாநிதி

இலங்கை நட்பு நாடு இல்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ளாவிட்டால், பின்னர் வருந்த நேரிடும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், அப்படிப் பங்கேற்றால் அதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளோம்.தமிழருக்கு உறுதிமொழிகளை வழங்குவதும், தமிழரோடு உடன்பாட்டில் கையொப்பமிடுவதும், பின்னர் உடன்பாட்டில் இருந்து விலகுவதும் இலங்கை அரசின் பாரம்பரியமான பழக்கமாக இருந்து வருகிறது.இதனால் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளது.இரு இனங்களுக்கு இடையே நல்லெண்ணமும் இணக்கமும் ஏற்படுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது.
1987-ல் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே செய்துகொண்ட உடன்பாட்டின்படி மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் சட்டம் 13-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி வடகிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சி அலகாக இணைந்து, ஒரே ஆளுநர், ஒரே முதல்வர் ஒரே அமைச்சரவையின் கீழ் இயங்கும் என்பது அந்த உடன்பாட்டின் அம்சமாகும்.மேலும் வடகிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் மரபு வழித் தாயகம் என்பதும் அதில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.தற்போது 13-வது சட்டத்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.இதுபோல் பல விவகாரங்களில் தமிழர்களுடனும், இந்திய அரசுடனும் செய்துகொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாகவே உடைந்தெறிந்துள்ளனர் இதிலிருந்தே இலங்கை அரசின் நம்பகத்தன்மையற்ற போக்கினை உணர்ந்து கொள்ளலாம்.
இலங்கை அதிபர் ராஜபட்சே, தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட, போர்க்குற்றவாளி என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ குறிப்பிட்டுள்ளார்.1983-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திலேயே இந்திராகாந்தி இலங்கையில் நடப்பது இனப் படுகொலை என்று கூறினார்.இதனை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்தியா போரில் ஈடுபட்டபோது, இலங்கை அரசு இந்தியாவின் பக்கம் நிற்கவில்லை. எதிரிகள் பக்கமே நின்றது.ஈழத் தமிழர்கள்தான் உணர்வுப்பூர்வமாக இந்தியாவை ஆதரித்தனர்.எனவே,நட்பு நாட்டுக்கான எந்தக் குணாதிசயங்களையும் இலங்கை பெற்றிருக்கவில்லை என்பதை இந்தியா இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி இலங்கை அரசைத் தட்டிக் கேட்க வேண்டும்.இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.இந்தியாவில் செய்யப்படும் எல்லாச் சமரச முயற்சிகளையும் இலங்கை அரசு தங்கள் சாதனையாகவே எடுத்துக் கொள்ளும்.இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் இந்தியா பின்னர் வருந்த நேரிடும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக