இலங்கையை நட்பு நாடாக க் கருத வேண்டும் என ஞானதேசிகன் ஞானோபதேசம் செய்கிறார்: கருணாநிதி
இலங்கையை எதிரி நாடாகக் கருதினால், தமிழர்களின்
பிரச்னை குறித்து யாரிடம் பேசுவது என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகனுக்கு, திமுக தலைவர் கண்டனம்
தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்பதாவது:-
இலங்கையை எதிரி நாடாகக் கருதினால், தமிழர்களின் பிரச்னை குறித்து
யாரிடம் பேசுவது என்பதை தமிழக அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என ஞானதேசிகன்
கேள்வி எழுப்பியுள்ளார்.ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரன்,
அதற்காக வருத்தப்படவில்லை என சமீபத்தில் பேட்டிளித்துள்ளான். லட்சக்கணக்கான
அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கையை போர்க்குற்றவாளி என உலக
நாடுகள் சுட்டிக் காட்டுகின்றன.உள்நாட்டுப் போரின்போதும், அதற்குப் பிறகும்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா பிரச்னை எழுப்ப
வேண்டும் எனவும், இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனவும்
சர்வதேச பொது மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் கைது செய்வதும், தாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பிரதமரே இது பற்றி திங்கள்கிழமை (ஆக. 19) இலங்கை அமைச்சரிடம்
பேசியிருக்கிறார்.
இலங்கையில் தமிழர்கள் துயரப்படுவது உண்மைதான் என இலங்கை முன்னாள்
பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே
கூறியுள்ளார். ஆனால், ஞானதேசிகன் அதனை இலங்கையின் உள்நாட்டு அரசியல்
நிகழ்வுகள் என்கிறார்.அங்கு தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவது உள்நாட்டு
அரசியல் நிகழ்வா தொப்புள் கொடி சொந்தங்களின் துயரத்தைக் கண்டும் காணாமல்
கபட நாடகம் போட முடியுமா ஆனால், இலங்கையை எதிரி நாடாகக் கருதினால்
தமிழர்கள் பிரச்னை குறித்து யாரிடம் பேசுவது என்று ஞானதேசிகன் வேதாந்தம்
பேசியிருக்கிறார்.
ஞானதேசிகனைப் போன்றவர்கள் இப்படி விதண்டாவாதம் பேசுவதால்தான் இலங்கை
வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவில் இருந்து கொண்டே, கச்சத் தீவை
ஒப்படைக்க முடியாது என சூளுரைத்துள்ளார். அதனால் தான், அங்கும், இங்கும்
தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையை சிங்களவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு
பயன்படுத்துகிறார்கள் என நேற்று (ஆக. 19) எழுதியிருந்தேன்.
இலங்கை அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் ஜி.கே.
வாசன் கூறியுள்ளார். இலங்கை மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து
தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.ஆனால், இலங்கையை நட்பு நாடாக
கருத வேண்டும் என ஞானதேசிகன் ஞானோபதேசம் செய்கிறார் என கருணாநிதி கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக