வியாழன், 22 ஆகஸ்ட், 2013

முன்மாதிரியான மிதியூர்தி ஓட்டுநர்!

முன்மாதிரியான  மிதியூர்தி ஓட்டுநர்!

பொதுமக்களை அச்சுறுத்தும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மத்தியில், சற்று வித்தியாசமாக செயல்படும், அண்ணாதுரை: நான், தஞ்சாவூர், பேராவூரணியை சேர்ந்தவன். தற்போது, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில், குடும்பத்தோடு வசிக்கிறேன். கடந்த, நான்கு ஆண்டுகளாக, திருவான்மியூர் முதல், நாவலூர் வரை, ஆட் டோ ஓட்டுகிறேன். பொதுமக்களை அச்சுறுத்துபவர்களில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என, பொதுமக்கள் கருதுவதாக, அவ்வப்போது கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. ஆனால், எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் அப்படியில்லை என்றும், மனிதநேயமும், சமூக சிந்தனையும் உள்ள பலர் இருப்பதாக, மக்களுக்கு எடுத்துக்காட்ட முயற்சித்தேன். நான், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறேன். இதனால், "மொபைல் மற்றும் லேப்-டாப்' எடுத்து வரும் பயணிகளின், இலவச இணைய வசதிக்காக, "வை-பை' தொழில்நுட்ப கருவியை, ஆட்டோவில் பொருத்தி உள்ளேன். மற்ற பயணிகளுக்காக, ஒரு பொது லேப்-டாப்பும் உள்ளது. இதில், சந்தா முறையிலான, "டிவி சேனல்கள், வீடியோ கேம்கள், மொபைல்' மற்றும் டி.டி.எச்.,சிற்கு, ரீசார்ஜ் செய்வதற்காக, "மல்டி ரீசார்ஜ்' வசதிகள் உள்ளன. பயணிகளுக்கு பயன்படும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் என, அனைத்து வகை பத்திரிகையையும் வாங்குகிறேன். ஆட்டோவில், "டிவி' வைத்து, அதன் மூலமும் நடப்பு செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை காட்டுகிறேன். "ரெகுலர்' பயணிகளுக்கு, சலுகை டோக்கன் வழங்குகிறேன். மாதம், 25 ஆயிரம் வருமானத்தில், பயணிகளின் தேவைக்காக மட்டுமே, 10 ஆயிரம் செலவிடுகிறேன். ஆண்டிற்கு, 12 ஆயிரம் செலவில், ஒரு ஏழை குழந்தையை படிக்க வைக்கிறேன். இதை பார்த்த என் ஆட்டோ பயணிகளான, மூன்று இளைஞர்கள், மூன்று ஏழை குழந்தைகளுக்கான மொத்த கல்வி செலவையும் ஏற்றனர். என் செயல்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், அவர்களையும் அதுபோல் செய்ய தூண்டுவது, சந்தோஷமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக