ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

திரு.விலி. இளைஞரின் கின்னசு சாதனை முயற்சி

திரு.விலி. இளைஞரின் கின்னசு சாதனை முயற்சி

First Published : 18 August 2013 08:10 PM IST
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணிபுரியும், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் கின்னஸ் சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளார்.இதற்கான நிகழ்ச்சி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன் மகன் பாஸ்கரன் (32). இவர் கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் வேலை செய்து வந்தார். தற்போது இவருக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசுப் பணி கிடைத்துள்ளது.இவர் கடந்த ஆண்டு (29.1.12) தொடர்ந்து 45 நிமிடங்களில் 2480 முறை கர்லாக் கட்டையை சுழற்றி தேசிய அளவிலும், லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார். தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை எடுத்து கின்னஸ் சாதனை புரிவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதற்காக 6 நிகழ்ச்சிகளை பாஸ்கரன் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டினார்.
இதற்கான நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கே.ஆனந்தபிரகாசம் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவரும்,  ராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளருமான என்.எஸ்.வேலாயுதம் முன்னிலையில் நடைபெற்றது.இதில் பாஸ்கரன், மூன்று சிறிய கண்ணாடி டீ கிளாஸ்கள் மீது இருந்து கொண்டு 28 விநாடிகளில் 35 முறை புஸ் அப்ஸ் (தண்டால்) செய்தார். 4 சிறிய கண்ணாடி டீ கிளாஸ்கள் மீது இருந்து கொண்டு 30 விநாடிகளில் 55 முறை புஸ் அப்ஸ் செய்தார்.பின்னர் தரையில் 15 விநாடிகளில் 59 புஸ் அப்ஸ் செய்தார். இதன் முந்தைய கின்னஸ் சாதனை 15 விநாடிகளில் 53 முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நிகழ்த்தியுள்ளார். தற்போது இந்த சாதனையை பாஸ்கரன் முறியடித்துள்ளார்.
தலா 5 கிலோ எடையுள்ள இரு இரும்பு டம்பிள்களை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு 1 நிமிடத்தில் 122 முறை சுழற்றினார்.தலா இரு சிறிய கண்ணாடி டீ கிளாஸ்களில் பாஸ்கரன் நின்று கொண்டு, 4.250 கி.கி. எடையுள்ள கர்லாக் கட்டையை 9 நிமிடம் 10 விநாடிகளில் தொடர்ச்சியாக 556 முறை சுழற்றினார். இது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த நிகழ்ச்சியாகும்.
இறுதியாக கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட பலகையில் இரு கைகளையும் வைத்து 14 விநாடிகளில் 21 முறை புஸ் அப்ஸ் செய்தார் பாஸ்கர்.இவரது இச்சாதனையை டி.எஸ்.பி. ஆனந்தபிரகாசம், பாரத ஸ்டேட் வங்கி உதவி மேலாளர் என்.எஸ்.வேலாயுதம் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக