ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

குளத்தை த் தூர்வார உதவிய முகநூல்! ஆ.) மின்னணுக் குப்பைகள்

குளத்தை த் தூர்வார உதவிய  முகநூல்!

"பேஸ்புக்' உதவியுடன், 143 ஏக்கரில் உள்ள, திருச்சி மாவடிகுளத்தை தூர்வாரிய, 27 வயது இளைஞன், வினோத்ராசு சேசன்: நான், திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்தவன். தற்போது, திருச்சியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில், "லேப் டெக்னீஷியன்' வேலை செய்கிறேன். "வாழும் போதே ஊருக்கு ஏதாவது நல்லது செய்யணும்' என்ற எண்ணம், அவ்வப்போது எழும். ஏரி, குளம், ஆறு போன்ற, நீர் ஆதாரங்களை ஆக்கிரமித்து, தூர் வாராமல் இருப்பதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருவதாக, பத்திரிகை மூலம் அறிந்து கொண்டேன். சமூக வலைதளமான பேஸ்புக்கை, தினமும் பயன்படுத்துவேன். ஒரு நாள், திருச்சி பொன்மலைப்பட்டி, மாவடிகுளத்தை தூர்வார போவதாக, பேஸ்புக்கில் பதிவு செய்தேன். இதை படித்த பல நண்பர்கள், எதிர்மறையாக கேலியும், கிண்டலும் செய்து, தங்களின் கருத்தை பதிவு செய்திருந்தனர். நண்பர்களின் கேலியும் கிண்டலும் தான், எனக்கு ஊக்கத்தை தந்தது. "மண்ணின் நீர்வளத்தை பெருக்க, என்னோடு கைகோர்ப்பவர்கள், ஜூலை 14ம் தேதி வரலாம்' என, தேதி குறித்தேன். குளத்தை தூர்வார தேவையான உபகரணங்களை, என் பணத்திலேயே வாடகைக்கு வாங்கினேன். என் பேஸ்புக்கை படித்த, 50 இளைஞர்கள், குளத்தை தூர்வார உதவினர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில், பணியை தொடர்ந்தோம். எங்களுக்கு ஊக்கம் தர, திருச்சி மாவட்ட ஆட்சியர், ஜெயஸ்ரீ முரளிதரனும், கையில் மண்வெட்டியை பிடித்து, குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். குளத்தின் ஆக்கிரமிப்பையும், மாவட்ட நிர்வாக துணையுடன் அகற்றினோம். இளைஞர்களோடு பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், மாவட்ட நிர்வாகம் என, பல தரப்பிலும் களம் இறங்கியதால், புதர் மண்டிய மிக பெரிய குளம், புதுப்பொலிவோடு ஜொலிக்கிறது. தமிழ்நாட்டின், 40 ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வாரி பராமரித்தாலே அடுத்த, 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இருக்காது. இளைஞர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்.


இ-வேஸ்ட் பற்றி விழிப்புணர்வு தேவை!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், "இ-வேஸ்ட்' கழிவுகளை மறுசுழற்சி செய்ய உதவும், கல்லூரி மாணவி திவ்ய பாரதி: நான், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி. சுற்றுச்சூழலை பாதுகாக்க, 2009ல், "கிரீன் பிரிகேட்' என்ற அமைப்பை கல்லூரியில் நிறுவி, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை, கல்லூரி நிர்வாகம் நடத்தியது. நான், தலைவியாக பொறுப்பேற்றதும், கல்லூரி வளாகத்தில் உள்ள, 2,400 மரங்களை கணக்கெடுத்து, மரத்தின், உயிரியல் பெயரை அட்டையில் எழுதி, ஒவ்வொரு மரத்திலும் தொங்க விட்டோம். மரம் நடுதல், மரத்தால் கிடைக்கும் நன்மைகளை, மக்களிடம் எடுத்துக் கூறினேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்து, உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகும், மின்னணு சாதனக் கழிவுகளின் எண்ணிக்கை, இந்தியாவில், 2020ல், 500 சதவீதமாக அதிகரிக்கும் என, ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் அறிக்கை தெரிவித்தது. அந்த சமயத்தில் தான், அதிகப்படியான, இ-வேஸ்ட்டுகள், மறுசுழற்சி செய்யப்படாமல், குப்பையோடு குப்பையாக புதைக்கப்படுகின்றன என்ற உண்மையை அறிந்தோம். எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர், இ-வேஸ்டுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தை நடத்துவதாக அறிந்தோம். மக்களிடம், இ-வேஸ்ட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இ-வேஸ்ட்களை சேகரித்து, மறுசுழற்சி செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லவும், அமைப்பில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்தோம். ஒவ்வொரு ஏரியாவிற்கும் ஒரு நபரை நியமித்து, வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள, இ-வேஸ்ட்களை சேகரிக்கிறோம். இதற்கு கிலோவிற்கு, 10 ரூபாய் என்ற வீதத்தில், மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திடமிருந்து பெற்று தருகிறோம். இதை தன்னார்வ தொண்டாக செய்யும் நாங்கள், இதுவரை, 180 கிலோ இ-வேஸ்ட்களை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம். தொடர்புக்கு: www.ewaste.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக