சனி, 9 மார்ச், 2013

மார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி

குற்றவாளிகளைக் காவலர்களாகக் காட்டும் முயற்சி - சாத்தான் ஓதும் வே தம்

தெசோ அறிவித்துள்ள மார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி



டெஸோ நடத்துவதாக அறிவித்திருக்கும் மார்ச் 12 வேலை நிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்; அன்று ரயில், விமானங்களை ரத்து செய்து, போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து அவர் இன்று கடித அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவருடைய முழுமையான கடித அறிக்கை:

12-3-2013 அன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம்! “டெசோ” அமைப்பின் வேண்டுகோள் இது!
இலங்கையில் சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவால் நடத்தப்பட்ட தெல்லாம் தமிழினப்  படுகொலையே; அவர் அடுக்கடுக்காகச் செய்த தனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மன  சாட்சியை நசுக்கி அழித்து விட்டு மீறியதெல்லாம் மனித உரிமைகளையே; எனவே அவரைச்  சர்வ தேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும்; இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்;  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12-வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்சே சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடு களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்; இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை யைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் முழு மனதோடு ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும்; இந்திய அரசே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் பொது வாக்கெடுப்புக்கென தக்கதொரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; என்பவைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் - ஜனநாயக நெறிபிறழாமல் - அமைதியான முறையில் - அறவழியில் - ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் - இது நம்முடைய தொப்புள் கொடிச் சொந்தங்களான ஈழத் தமிழர் களுக்காக நாம் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டிய அடிப்படைக் கடமை என்ற உணர்வோடு - அனைவரும் பங்கேற்க வேண்டுமென்ற எனது வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாகச் சிலருக்கு சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்படலாம். அவற்றையெல்லாம் அன்புகூர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த வேலை நிறுத்தத்தை “டெசோ” இயக்கத் தின் சார்பில் அறிவித்த காரணத்தால் ஒரு சிலர் தமிழ் இனப் பற்றை தங்கள் உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இது ஏதோ திசை திருப்புகின்ற செயல் என்றெல்லாம் காழ்ப்புணர்ச்சி யோடும், எதிர்ப்பு அறிக்கை கொடுக்காவிட்டால் யாரோ கோபப்பட்டு விடுவார்களோ - அதனால் பாதிப்பு ஏற்படுமோ என்பதற்காகவும், ஏதோ ஒரு உள்நோக்கத்தோடும் அறிக்கை விடுத்த போதிலும், இந்த வேலை நிறுத்தம் என்பது முழுக்க முழுக்க இன்னல்களால் உழன்று வரும் ஈழத் தமிழர்களுக்கு தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு என்ற உணர்வோடு; அதை வெற்றி கரமாக ஆக்கித் தர வேண்டுகின்றேன்.
எங்கே ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழரெலாம் ஒன்றுபட்டு விடுவார்களோ, அதனால் தி.மு.க.விற்குப் பெயர் வந்து விடுமோ என்ற ஆதங்கத்தில், இப்போதே ஒரு சில “அவாள்” பத்திரிகைகள் இந்தப் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது என்றும், மற்றக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றும் தாங்களாகவே செய்தி வெளியிட்டுக் கொண்டு திருப்தி அடைய எண்ணுகிறார்கள்!
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது ஏதோ ஒரு கடை திறக்கப் பட்டிருக்குமானால், அல்லது யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது வாகனத்தை சாலையில் ஓட்டினால், அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது ஒரு நாள் இலாபமே பெரிது என்று திறந்து வைத்தால், அவர்கள் எல்லாம் நம்முடைய ஈழத் தமிழர்கள் பால் ஆழ்ந்த பற்றற்றவர்கள் அல்லது ஈழத் தமிழர்களின் துன்ப துயரங்களையும், பிரச்சினைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று ஆகிவிடும்.
பிரபாகரனின் மகனாகப் பிறந்த ஒரே குற்றத்திற் காக, பள்ளிக்குச் சென்று பயில வேண்டிய பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத பருவத்தில், அவன் மார்பிலே ஐந்து குண்டுகளைப் பாய்ச்சினார்களே, குலை நடுங்கும் அந்தக் கோரக் கொடுமைகளைக் கண்ட பிறகும், இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பது திசை திருப்பும் செயல் என்றோ, தேவையில்லாத ஒன்று என்றோ நினைக்க முடிகிறதா?
லண்டனைத் தலைநகராகக் கொண்ட ‘சேனல்-4’ தொலைக்காட்சி நிறுவனம் எத்தனையோ ஆபத்துக்கிடையே படம் எடுத்து, தயாரித்த அந்தக் கொடுமையான காட்சிகள்தான் எத்தகையவை? பாலச்சந்திரன் கைக்கும் வாய்க்கும் இடையே ரொட்டித் துண்டுடன் இருந்ததையும், அடுத்த படத்தில் அவன் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிப் பிணமாகக் கிடந்ததையும் விளக்கிடும் காட்சி; தாயும் குழந்தையும் ஒன்றாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த காட்சி; அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக் கும் காட்சி ; விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ் என்பவர் முகம் சிதைந்த நிலையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கின்ற காட்சி; பெண்புலி இசைப்பிரியா என்ற இளம்வயது பெண்ணை சிங்கள ராணுவம் சீரழித்து, படு கொலை செய்த காட்சி; ஆண்களை நிர்வாண மாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி, முதுகிலே சுட்டுக் கொல்கின்ற காட்சி; ஆகிய இதயத்தைக் கசக்கிப் பிழிந்திடும் காட்சிகளையெல்லாம் கண்ட பிறகும், இந்த ஒரு நாள் வேலை நிறுத் தத்தில் நாம் கலந்து கொள்ளாவிட்டால் அந்தச் சிங்களக் காடையரின் கொடுமைகளையெல்லாம் நாம் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டவர்களாகி விட மாட்டோமா?
பாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவ மனைகளிலும் கொத்துக் கொத்தாகக் குண்டுகள் வீசப்பட்டு தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டதற்குப் பிறகும் - தமிழினத்தின் பண் பாட்டுக் கூறுகளை அழித்திடும் நோக்கில் அவற்றின் வேர்களைச் சிதைத்திடும் கொடுமை யான முயற்சிகளையும், தமிழர்களுடைய பூகோள அடிப்படையிலான வாழ்க்கை நெறிகளை அழித் திடும் முனைப்பையும் கண்டதற்குப் பிறகும் - ஈழத் தமிழர்களின் கல்விக் கூடங்கள், கோயில் கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றைத் தகர்த்தும், தமிழர்களின் மொழி அடையாளத்தைச் சிதைத்தும், நூற்றுக்கணக்கான தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றியும், இலங்கையில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலையும், ஆக்கிரமிப்பு அக்கிரமத்தையும் கண்டதற்குப் பிறகும் - இவற்றையெல்லாம் கண்டிப்பதற்காக நடைபெறும் வேலை நிறுத்தம் தேவையற்றது, திசை திருப்பும் செயல் என்றெல்லாம் கூறுவது மனசாட்சிக்கு மாறான கூற்றா இல்லையா?
நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய விவாதம் நேற்றையதினம் நடைபெற்றபோது நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவின் குரலோடு இணைந்து, பா.ஜ.க. போன்ற கட்சிகள் எல்லாம் பிரச்சினையின் கடுமையை உணர்ந்து, தாமாகவே முன்வந்து நம்முடைய இனத்திற்காகக் குரல் கொடுக்கின்ற நிலையில், மத்திய அரசு தனது பதிலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு உறுதி அளிக்காத நிலையில், அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஒரு நாள் வேலை நிறுத்தத் திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது நம்முடைய கடமை அல்லவா?
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து எத்தனையோ ஆண்டுக் காலமாகக் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்; சிறைபிடிக்கப்படுகிறார்கள்; அவர்களின் மீன்பிடிச் சாதனங்கள் எல்லாம் கடலிலே தூக்கி வீசி எறியப்படுகின்றன; பிடித்த மீன்கள் எல்லாம் கைப்பற்றப்படுகின்றன; மனிதாபி மானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். நேற்றையதினம் கூட ஒரேநாளில் தமிழக மீனவர்கள் மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கலக்கமடைந்து கண்ணீர் சிந்துவதும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் அதற்காக அறிக்கைகளை வெளியிடுவதும், அரசின் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு மீனவர்களை விடு விக்க முயற்சிப்பதும் என்பது நீண்ட தொடர்கதை யாக நிகழ்ந்து வருகின்றது.
அவர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு நடைபெறும் இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்ற உணர் வோடு பங்கேற்க முன்வர வேண்டாமா?
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் - அதிலே நம்மிடையே உள்ள சகோதர யுத்தத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது - நம்மிடையே ஒற்றுமை உள்ளது என்றாலே சிங்கள அரசு அஞ்சி நடுங்கும் என்று எண்ணித்தான், “டெசோ” சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதுகூட, கட்சிச் சார்பற்ற முறையில் அரசியல் காழ்ப் பில்லாமல் ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தும் வேலை நிறுத்தம் இது என்று அறிவித்தோம். அந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க. கூட எதிர்த்து ஒரு வார்த்தை கூறாததற்கு முன்பாகவே, நம்முடைய தீர்மானத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தாலே, அது யாருக்கோ “குளுகுளு” என்றிருக்கும் என்ற எண்ணத்தோடு, இந்த வேலை நிறுத்தத்தை திசை திருப்பும் முயற்சி என்று ஒருசிலர் அறிக்கை விடுகிறார்கள். இவர்களின் இந்த அறிக்கையைப் படிக்கும் உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் என்னதான் எண் ணிக் கொள்வார்கள்? தேர்தலில் இவர்களுக்கு இரண்டொரு இடங்கள் வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் தம்மை மறந்து - தரம் தாழ்ந்து அறிக்கை விடுகிறார்களே, கடந்த காலங்களில் நம்மிடம் பாசமாக இருப்பதைப் போல எப்படி யெல்லாம் நேச வேடம் போட்டார்கள் என்று எண்ணிக் கொள்ளமாட்டார்களா?
அவர்கள் எப்படியோ போகட்டும்; அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரையில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஒரு சிலரைத் தவிர, மற்ற அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் எல்லாம் நம்மைத் தொடர்பு கொண்டு இந்த வேலைநிறுத்தத்திற்குத் தங்களின் முழு ஒத்து ழைப்பையும் தருவதாகத் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் - அவர்களுடைய தமிழ் இன உணர்வைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரு நாள் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பொதுமக்களிடம், நம்மினத்தவர் இலங்கையிலே நாளும் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் செய்கின்ற எள்ளளவு தியாகம் என்ற உணர் வோடு, அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வேலை நிறுத்தத்தின்போது, பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய நிறுவனங்கள் - பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்கள் - கடைகள் அனைத்தும் மூடப் பட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள் கிறேன். சாலைகளிலே ஆட்டோக்கள் ஓடக் கூடாது என்றும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் அன்று ஒரு நாள் பன்னிரண்டு மணிநேரம் தங்கள் தியேட்டர்களை மூடி காட்சிகளை நிறுத்த முன் வரவும் வேண்டுகிறேன்.
தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள்; ஏன் இந்திய அரசே முன் வந்து அன்றையதினம் புகைவண்டி கள் மற்றும் விமானங்கள் தமிழ கத்திலே ஓடாது என்று அறிவித்திட வேண்டும்; தமிழக அரசின் பொறுப்பிலே இருப்போரும், இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய இன மக்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று என்ற உணர்வோடு அரசு அலுவலகங்களையெல்லாம் அன்று ஒரு நாள்-12 மணி நேரம், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்காக விடுமுறை விட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல; அங்கே வாழ்ந்து மறைந்த ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் அஞ்சலியுடன், இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்காக தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு - அரவணைப்பு என்ற உணர்வோடு, இந்த வேலைநிறுத்தத்தில் நம்முடைய ஒற்றுமையை உறுதியாக வெளிப்படுத்திட முன்வர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ வகைப் போராட்டங்களை 1956ஆம் ஆண்டிலிருந்து நடத்திப் பழக்கப்பட்ட தி.மு.கழகத்தின் தலைவன் என்ற முறையிலும், “டெசோ” இயக்கத்தின் தலைவன் என்ற முறையிலும், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், கட்சியினருக்கும், அனைத்துப் பொதுமக்களுக்கும், சமுதாயத்தின் எல்லாப் பிரிவினர்க்கும், தோழமைக் கட்சிகளின் சோதரர்க்கும், கழக உடன்பிறப்புக்களுக்கும் நான் விடுக்கின்ற வேண்டுகோள் இது!
மார்ச் 12 - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை! 12 மணிநேரம்! தமிழகமே ஒன்று திரண்டு வேலை நிறுத்தத்தில் அழுத்தமாக நின்றது என்று தெரிந்தாலே ராஜபட்ச நடுங்குவார். அதற்கொரு வாய்ப்பு என்ற முறையில் இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்பீர்! எப்போதும்போல இந்த வேலை நிறுத்தத்தில் மருத்துவமனைகள், பத்திரிகை அலுவலகங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும்; இது தேர்வு நேரம் என்பதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கும்; விதி விலக்கு உண்டு. பாவிகளின் கொலைவெறிக்கு பலியான பாலகன் பாலச்சந்திரனின் மரணத்திற்குப் பிறகும், இந்த வேலை நிறுத்தத்தைக் களங்கப்படுத்த நினைப்போர் - திசை திருப்பி குளிர்காய எண்ணுவோர் - எவராயினும், தமிழ் இனம் சகித்துக் கொள்ளாது! அவர்கள் யார் என்று புரிந்து கொள்ளும்! பொது வேலை நிறுத்தம் வெற்றி வெற்றி என்ற செய்தியை, இன்னல்களுக்கு ஆளாகி யிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக வழங்குவோம்! சங்கம் முழங்கிடுவோம்! “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்று சங்கம் முழங்கிடுவோம்!

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக