வெள்ளி, 8 மார்ச், 2013

சாகித்ய அகடமி விருதுவாங்கப் பணமில்லா மலர்வதி

சாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி ப்  பெண்: விருது வாங்கச் செல்ல பணமில்லாததால் கவலை
நாகர்கோவில்: தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை கதையின் கருவாக கொண்டு உருவாக்கிய படைப்புக்கு, சாகித்ய அகடமி விருது வென்று, குமரி மாவட்ட இளம் பெண் மலர்வதி சாதனை படைத்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, வெள்ளிக்கோடு கிராமம். இங்கு அமைந்துள்ள, வியாகுல அன்னை ஆலயத்தை ஒட்டி, டூவீலர் செல்வதற்குக் கூட சிரமப்படும், ஒரு சிறிய ஒற்றையடி பாதை. அதன் உள்ளே, சற்று தூரம் நடந்து சென்றால், ஒரு முழுமை பெறாத வீடு. சுற்றுச் சுவர்கள் சிமென்ட்டின் அரவணைப்பை எதிர்பார்த்து காத்திருக்க, தரையும், மண் துகளுடன் ஏதோ ஒரு சோகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கு ஒரு ஏழை குடும்பம். அதுதான், படைப்பாளிகளை தற்போது திரும்பி பார்க்கச் செய்யும், மேரி புளோரா என்ற, மலர்வதியின் வீடு. இவர் அண்மையில், "தூப்புக்காரி' (ஸ்வீப்பர்) என்ற ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பலர் உதவியுடன் வெளியிட்ட, ஐந்தாவது நாவல். பல மூத்த எழுத்தாளர்கள் அளித்த ஊக்கத்திலும், பாராட்டிலும், தன், "தூப்புக்காரியை' சாகித்ய அகடமி விருதுக்காக அனுப்பி வைத்தார்.

ஒரு மாத பத்திரிகை அலுவலத்தில், சராசரி சம்பளத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இருந்து, ஒரு கடிதம் வந்தது. அதில், "தூப்புக்காரி நாவல் எழுதியதற்காக இந்த ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. வரும், 22ம் தேதி, கவுகாத்தியில் நடைபெறும் விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. செப்பு பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் விருதாக வழங்கப்படுகிறது. இப்படி உயரிய விருதை பெற்ற மேரி புளோரா என்ற மலர்வதி, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தந்தை எலியாஸ்; தாய் ரோணிக்கம்; அக்கா லதா; அண்ணன் ஸ்டீபன். இவர், தாயின் வயிற்றில் வளர்ந்த போதே, தந்தை, குடும்பத்தை தவிக்க விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து, சென்று விட்டார். தந்தை சென்ற பின், வறுமை சூழலில் தவித்த குடும்பத்துக்கு உதவியாக, தாய் ரோணிக்கத்துக்கு, வெள்ளிக்கோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், தூப்புக்காரி வேலை கொடுக்கப்பட்டது. வெறும், 30 ரூபாய் சம்பளத்தில், மூன்று பிள்ளைகளை வளர்க்க, ரோணிக்கம், மிகவும் சிரமப்பட்டார். தன் தாய், கழிவறைகள சுத்தம் செய்யும் போது, தாயின் முந்தானையை பிடித்து நடந்த மலர்வதிக்கு, அந்த துர்நாற்றமும், பினாயில் மணமும், இன்னும் மூக்கை விட்டு விலகவில்லை. அந்த வலியும், கடினமான அனுபவமும் தான், "தூப்புக்காரி' நாவலை உருவாக்க உதவியது என்கிறார் மலர்வதி. தற்போது மலர்வதிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. ஆனால், அந்த பாராட்டுக்களால் மலர்வதியால் மகிழ முடியவில்லை. காரணம், கவுகாத்தி செல்ல வேண்டும்; துணைக்கு, அண்ணன் செல்ல வேண்டும். மொழி பெயர்க்க, வேறு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். ரயிலில் சென்றால் மொழிபெயர்க்க செல்பவர், "10 நாள் செலவிட முடியாது' என்கிறார். விமானத்தில் செல்ல வேண்டும். அதற்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை வேண்டும். தன் ஒரு சவரன் செயினை, அடகு வைத்து விடலாம். அதற்கு மேல் பணத்துக்கு என்ன செய்வது என்ற யோசனையின் இறுக்கத்தில், மலர்வதி, வாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக