கவலைகள் மறையட்டும்!
இரண்டு கால்களும் செயல்படாத நிலையில், கவலைகள் மறந்து, சுய தொழில்
செய்யும், செந்தூரப்பாண்டியன்: நான், சென்னை செங்குன்றத்தை அடுத்த,
பாடியநல்லூரில் வசிக்கிறேன். சிறிய வயதிலேயே ஊனம் ஏற்பட்டு, இரண்டு
கால்களும் செயல்படாமல் முடங்கின. இதனால், யாருடைய துணையும் இன்றி, வெளியே
சென்று வர முடியாது. போதாத குறைக்கு, என் இரண்டு கைகளில், வலது கையின்
மணிக்கட்டுக்குக் கீழ் மட்டும் செயல்படும். மற்ற இடங்களில், எந்த
அசைவுகளும் கிடையாது.சிறு வயதில், மற்ற குழந்தைகளைப் போல், என்னால் ஓடி ஆடி
விளையாட முடியவில்லையே என, ஏங்கி வருத்தப்பட்டு அழுவேன். பத்தாம் வகுப்பு
வரை, ஒரு மாணவர் விடுதியில் தங்கி படித்தேன். அங்கு தான், என் ஊனத்தைப்
பொருட்படுத்தாமல், என்னை ஊக்கப்படுத்தினர். அதனால், நன்றாக படிக்க
முடிந்தது.நான், பத்தாம் வகுப்பு முடித்து, விடுதியிலிருந்து வீடு
திரும்பிய போது, சொந்த அப்பாவே, என் ஊனத்தை காரணம் காட்டி, வீட்டிலிருந்து
வெளியேற்றினார். "இனி நான் தங்குவதற்கு, யார் வீடு வாடகைக்கு தருவர். சொந்த
அப்பாவே வெறுக்கும் போது, மற்றவர்கள் என்னை எவ்வாறு நடத்துவர்' என்ற
கேள்வி என்னுள் எழுந்தது.என்ன நடந்தாலும் பரவாயில்லை, வாழ்க்கையில் மட்டும்
தோற்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. விடுதி தந்த, அடிப்படை கல்வி
அறிவும், ஊக்கமும் எனக்கு வழிகாட்டியது. ஒரு சுயதொழில் செய்யும்
ஆர்வத்தில், மொபைல் போனை பழுது நீக்க பயிற்சி எடுத்தேன். மொபைல் போனில்
பழுது நீக்கவும், அதற்கான, "ரீ-சார்ஜ் மற்றும் டாப்- அப்' செய்யவும், ஒரு
சிறிய இடத்தில் கடை
வைத்தேன்.வாழ்க்கையில், வெற்றி பெற வேண்டும் என்ற வெறி உள்ளதால், சோர்வு
ஏற்படாமல் கடையிலேயே இருப்பேன். இதனால் தினமும், 250 ரூபாய் லாபம்
கிடைக்கிறது. ஓய்வு நேரங்களில், அழகிய ஓவியங்கள் வரைவதால், என் கவலைகள்
மறந்து, மனதிற்கு புது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இன்னும் கடினமாக
உழைத்து, தங்குவதற்கு சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்பதே, என் ஆசை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக