புதன், 6 மார்ச், 2013

செயலிழந்த சிறுநீரகங்கள் - ஆனால், அருவினை ஆற்றத் துடிப்பு

 



அசாமில், இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில், உயிருக்கு போராடும் ஏழை மாணவி ஒருவர், 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைக்கும் முயற்சியில், தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

அசாம் மாநிலம், ஜோர்கத் மாவட்டத்தில், ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் அவந்திகா. 15 வயது சிறுமியான இவர், படிப்பில் மிகவும் கெட்டிக்காரர்; நத்மால் - சுதா அகர்வாலா தம்பதியரின் மூன்றாவது மகள். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு, ஆறாம் வகுப்பு படிக்கும்போதே சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. குடும்பத்தின் ஏழ்மை காரணமாக, நல்ல சத்தான உணவுகளை சாப்பிட முடியவில்லை. நாளுக்கு நாள் சிறுநீரகங்கள் சீர்கெட்டு வந்தன; இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில், சிகிச்சை பெறுவதற்காக ஐதராபாத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவந்திகாவை பரிசோதித்த டாக்டர்கள், கண்டிப்பாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் தான், காப்பாற்ற முடியும் என, கூறியுள்ளனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, போதுமான பணம் தங்களிடம் இல்லை என கூறி, அவந்திகாவின் பெற்றோர், ஆயுர் வேத சிகிச்சை அளிப்பதற்காக, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிற்கு அழைத்து சென்றனர். ஆயுர்வேத சிகிச்சைக்கு பின், சில நாட்கள் அவர் நன்றாக இருப்பதுபோல் தெரிந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்து உள்ளது. இருப்பினும், மாற்று அறுவை சிகிச்சையை தவிர அவந்திகாவை காப்பாற்றுவதற்கு வழியில்லை என்ற கட்டத்திற்கு வந்து விட்டார் அவரின் தந்தை. இதற்காக, அரசு உதவி, தனிநபர் உதவி என, பலரையும் நாடி வருகிறார். ஆனால், அவரால் போதிய நிதியை திரட்ட முடியவில்லை. உயிருக்கு போராடி வரும் நிலையிலும், எப்படியும், 10ம் வகுப்பு தேர்வை எழுதியே தீருவேன் என்ற நம்பிக்கையுடன் அவந்திகா படித்து வருகிறார். அவரது குடும்பத்தாரும், பள்ளி நிர்வாகத்தினரும், தேர்வு எழுத வேண்டாம்; அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என, முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அவந்திகாவுக்கு, ஒரு சிறுநீரகமாவது தானமாக கிடைக்குமா என, டாக்டர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவந்திகாவின் ரத்த வகை "ஏபி பாசிட்டிவாக' இருப்பதால் இதுவரை, ஒரு சிறுநீரகம் கூட பெற முடியவில்லை. கடந்த ஒரு மாதமாக, அவருக்கு அளிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் வேலை செய்யவில்லை; தற்போது கடவுளின் கருணையை மட்டுமே நம்பி, உடல் நலிவடைந்த நிலையிலும், தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகிறார். அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில், தேர்வுக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என, நாட்களை நகர்த்தி வரும், அவந்திகா கூறுகையில், ""நோய் அதன் வேலையை செய்கிறது; நான் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன்,'' என்கிறார். அவந்திகா படிக்கும் பள்ளியின் முதல்வர் அலோக் நந்தா கூறுகையில்,""அவந்திகா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் படிப்பில் என்றும் சோடை போனதில்லை;அவள் கண்டிப்பாக சாதிப்பாள். அவருக்காக பிராத்தித்து வருகிறேன்,'' என்றார்.

1 கருத்து:

  1. தயவுசெய்து இந்த இணைப்பைப் பார்க்கச்சொல்லுங்கள்

    http://www.anatomictherapy.org/Videos.html

    நிலா

    பதிலளிநீக்கு