ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சிவகாசியில் தீக்குளித்து உயிர் நீத்த ஈகி கணேசன்

சிவகாசியில் தீக்குளித்து உயிர் நீத்த ஈகி கணேசன்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு -  பதிவு செய்த நாள் : 08/09/2012


தன் உயிர் கொடுத்து பிறர் வாழ வழிகொடுத்த தியாகி கே.கணேசன்!!!

சிவகாசி-பெரியார் நகரில்  18-08-2012 அன்று….கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வந்த சுமார் 108 வீடுகளை காலி செய்ய அரசு அதிகாரிகள், அழி பொறி(புல்டோசர்)இயந்திரந்துடன் வந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துவிட்டனர்.வீடுகளை இடிக்க உச்சநீதி மன்ற உத்தரவைக் காட்டியதாக செய்திகள் வெளியாகின.அரசு அதிகாரிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த கே.கணேசன் என்பவர் தன் உடல் மீது  கல்நெ ய் யை(பெட்ரோலை) ஊற்றிக்கொண்டு பக்கத்து வீட்டின் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.அவருக்கு மனைவி,  மூன்று குழந்தைகள் உள்ளனர்.அவரின் தற்கொலை முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் கூட அரசு அதிகாரிகள் தங்களின் கடமை (!) தவறாமல் வாங்கிய “காசு”க்கு வீடுகளை இடித்துக் கொண்டிருந்தனராம்.
கடந்த 40 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சியும் அதிகார வர்க்கத்தின் உதவியுடன் அரசு புறம்போக்கு நிலம் என இப்போது சொல்லும் பகுதியில் மின் வசதி,குடிநீர் வசதி போன்றவைகளை எப்படி செய்து கொடுத்தது? வாக்கு வங்கியை மனதில் கொண்டு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு,இப்போது சாலை விரிவாக்கத் திட்டம் இல்லாத சூழலில் யாரையோ திருப்திப்படுத்த இந்த வீடு இடிப்பு சம்பவத்தை அரங்கேற்றப்பட்டுள்ளது.
அதேபகுதியில் வாழ்ந்து வரும் சிலர் நீதிமன்றம் மூலமாக தங்கள் வீடுகளுக்கு “பட்டா” வங்கியுள்ளனர்.கல்வி அறிவில்லாத பலர்,தங்கள் பகுதியின் நகராட்சி மன்ற உறுப்பினர்கள்,தலைவர்கள்,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என கடந்த 40 ஆண்டுகளாக முறையிட்டு வந்துள்ளனர்.அவர்களும் இவர்களின் வாக்குகளை மனதில் கொண்டு, போலியான வாக்குறுதிகளை வழங்கி வந்துள்ளனர்.இவர்களும் அதை நம்பி அவர்களுக்கு வாக்குகளை அளித்துள்ளனர்.ஆனால் இப்போது சிவகாசி சட்டமன்ற உறுப்பினர்,தமிழக அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி, முறையாக இந்த பிரச்சனையை அணுகாததால்தான் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுவிட்டது.
அரசியல் ஆதாயத்துக்காக அமைச்சர், இப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க முயலவில்லை எனும் குற்றச்சாட்டு அப்பகுதி மக்கள் மத்தியில் உள்ளது.இதற்கு உதாரணமாக …இறந்துபட்ட கணேசன் வீட்டிற்கு அமைச்சர் இதுவரை வந்து துக்கம் கேட்கவில்லை எனும் உண்மை வலுச்சேர்க்கிறது.இது மட்டுமல்ல…இதே சிவகாசியில் பல பகுதிகளில் இதே போல அமைச்சரின் உறவுகள் பலர் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி மாடி வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியை இடிக்க முன் வராத நகராட்சி மற்றும் அரசு நிர்வாகம்,பெரியார் நகர் பகுதி மக்களின் வீடுகளை எப்படி இடிக்கலாம்? சுமார் 36,000 வாக்குகள் சிவகாசி நகராட்சி மற்றும் சட்டமன்ற அரசியலை நிர்ணயிப்பதை தடுக்க நினைக்கும் ஒரு குறிப்பிட்ட வியாபார சமுதாயத்தின் கைக்கூலிகளாக அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும், மாறிவிட்டதால்,அதை தடுக்கும் பணபலம் இல்லாதவர்களின் பிரதிநிதியாகத்தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டான் கணேசன்…
இது சிவகாசியில் மட்டுமல்ல…இனி எங்கு இதுபோல் பணபலம் அதிகார வர்க்கத்தின் துனையுடன் இல்லாதவர்களின் அடிப்படை வாழ்வுக்கான ஆதாரங்களைத் தகர்க்க முனைகின்றதோ அங்கெல்லாம் கணேசன் போன்ற தியாகிகளின் தற்கொலை உயிர்ப்பலி தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக