திங்கள், 10 செப்டம்பர், 2012

பட்டை தீட்டியதுவறுமை!


பட்டை தீட்டியதுவறுமை!
வறுமையை வென்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தன் கனவை நனவாக்கியுள்ள கோவிந்த் ஜெய்ஸ்வால்: நெருக்கடி மிகுந்த, உ.பி., மாநிலம், வாரணாசி பகுதியில், சிறிய அறை கொண்ட வீட்டில், என் இள வயது கழிந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனரான என் அப்பா, என் கல்விக்கு உறுதுணையாக இருந்தார். வறுமையுடன், ஐ.ஏ.எஸ்., கனவும் வளர்ந்தது.வீட்டைச் சுற்றியுள்ள, விசைத்தறி சத்தம், தொழிற்சாலை களின் புகை, 14 மணி நேர மின்வெட்டு என, பல பிரச்னைகள், என் கனவிற்கு முட்டுக் கட்டை போட்டாலும், அவற்றை வென்று, என் கனவை நனவாக்கினேன்.சிறு வயதில், மற்ற பிள்ளைகளைப் போல் விளையாடுவது, அரட்டை என, எதுவும் இல்லாமல், படிப்பதில் மட்டுமே, கண்ணும் கருத்துமாக இருந்தேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, மற்ற மாணவர்களுக்கும், மாலை வேளையில், "டியூஷன்' சொல்லிக் கொடுத்து, அதில் வரும் வருமானத்தில், என் குடும்பத்திற்கு உதவினேன்.ஐ.ஏ.எஸ்., படிக்க, டில்லி செல்ல திட்டமிட்டிருந்த போது, என் தந்தைக்கு திடீரென, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, படுக்கையில் முடங்கினார். நான் துவண்டிருந்த நேரத்திலும், என் தந்தை எனக்கு ஊக்கம் அளித்து, என் அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய இடத்தை விற்று, என்னை, டில்லிக்கு படிக்க அனுப்பினார். என் குடும்ப நிலையை எண்ணி, கடுமையாக படித்தேன். 2006ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன்.அப்துல் கலாம் தான், என், "ரோல் மாடல்!'என் சிறுவயது காலம், கஷ்டமானதாக இல்லாமல் போயிருந்தால், நான், ஐ.ஏ.எஸ்., ஆகியிருக்க வாய்ப்பில்லை. வறுமையும், கஷ்டங்களும் தான், என் வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமாகின.ஐ.ஏ.எஸ்., தேர்வில் அனைத்துப் பாடங்களையும், என் தாய்மொழி, இந்தியிலேயே எழுதினேன். தாய்மொழியில் தேர்வு எழுதுவது பிரச்னையில்லை. கற்றதை, தெளிவான முறையில், எப்படி தேர்வில் நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். தளராத நம்பிக்கை இருந்தால், எந்தத் தடையையும், நம்மால் வெல்ல முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக