திங்கள், 10 செப்டம்பர், 2012

நீதிமன்றங்களில் தமிழை ப் பயன்படுத்த ஆட்சிமொழி ஆணையம் அவசியம்: மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம்

நீதிமன்றங்களில் தமிழை ப் பயன்படுத்த ஆட்சிமொழி ஆணையம் அவசியம்: மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம்


சென்னை, செப். 9: நீதிமன்றங்களில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கு உடனடியாக தமிழக அரசு தமிழ் ஆட்சி மொழி ஆணையத்தையும், மாநில சட்ட ஆணையத்தையும் ஏற்படுத்த வேண்டும் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கேட்டுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இங்கு ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றங்களில் தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழில் சட்டப் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்ட இந்த நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் பழனிமாணிக்கம் மேலும் பேசியதாவது: உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்,  பிகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மட்டும் தாய்மொழியில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும்போது,  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் தகர்ந்து போகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள், விவாதங்கள்,  சட்ட கருத்துகள், தீர்ப்புகள் போன்றவை அந்தந்த மாநில மொழிகளில் இல்லாவிட்டால் நீதி அருகில் இருக்கிறது என்பதை நம்ப முடியாது.கடந்த 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் அதற்கு மாறுபாடான கருத்துகளை தெரிவித்தது. அந்த மாறுபாடான கருத்து போக்கப்பட வேண்டும். மாநில அரசு உடனடியாக தமிழ் ஆட்சிமொழி ஆணையம் மற்றும் மாநில சட்ட ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.நீதிமன்றங்களில் தமிழை பயன்படுத்த நிதி ஒரு பிரச்னையாக இருக்குமானால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு ஆண்டின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழை நீதிமன்ற மொழியாக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றார் அமைச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக