நீதிமன்றங்களில் தமிழை ப் பயன்படுத்த நடவடிக்கை: சல்மான் குர்சித்
சென்னை,
செப். 9: நீதிமன்றங்களில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கு தொடர்
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்
தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு சிறப்பு
நிகழ்ச்சியாக சட்டக்கதிர் தமிழ் சட்ட இதழும், பிரம்மகான சபையும் இணைந்து
நடத்திய நீதிமன்றங்களில் தமிழ் நூல் வெளியீட்டு விழா இங்கு ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தலைமையில்
நடைபெற்ற இந்த விழாவில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நூலை
வெளியிட்டு மேலும் பேசியதாவது: நீதிமன்றங்களில் தமிழ் மொழியை
பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே செய்து
முடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியை கூடுதல் மொழியாக பயன்படுத்துவதற்கு
சென்னை உயர்நீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, அதன் தொடர்
நடவடிக்கைகளுக்கு நான் உண்மையான முயற்சிகளை மேற்கொள்வேன். நம் நாட்டில் பல
மொழிகள் பேசப்படுகின்றன. அதுதான் நமது பலமும், பலவீனமும் ஆகும். நீதிபதிகளை
இடமாற்றம் செய்வதில் எனக்கு சிறிய கருத்துவேறுபாடு உண்டு. நீதிபதிகளை ஒரு
உயர்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம்
செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. அவர்களுக்கு மொழி ஒரு பிரச்னையாக உள்ளது.
நமது பலவீனங்களை பலமாக மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்ப முறைகள் உள்ளதால்
மொழியால் இப்போது பிரச்னை இல்லை. மொழி மாற்றம் செய்து கொள்ளலாம். வழக்கு
ஆவணங்கள், படிக்க வேண்டிய ஆவணங்கள், துணை ஆவணங்கள் போன்றவை மாநில
மொழிகளில் இருந்தால் உச்சநீதிமன்றங்களில் சிரமம் ஏற்படும். எனவே,
அதற்கெல்லாம் தீர்வை ஏற்படுத்தக் கூடிய சிறந்த வழிமுறைகளை காண வேண்டும்.
சாதாரண மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் மொழி
அவசியம். இல்லாவிட்டால் நாம் அன்னியப்பட்டு போய்விடுவோம். எனவே,
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அளிக்கப்படும்
தீர்ப்பின் சுருக்கத்தை தமிழில் ஒரு பத்தியில் எழுதும் நடைமுறையை
நீதிபதிகள் கையாளலாம் என்றார் அமைச்சர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக