ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இந்தியாவில் தயாரான செயற்கை இதயம்

இந்தியாவில் தயாரான செயற்கை இதயம்: மறு மின்னேற்ற கலன் (ரீ-சார்ஜ் பேட்டரி) மூலம் இயங்கும்
இந்தியாவில் தயாரான செயற்கை இதயம்: ரீ-சார்ஜ் பேட்டரி மூலம் இயங்கும்
மாலை மலர் மும்பை, செப். 23-

உலகில் இந்தியாவில்தான் இதய நோயாளிகள் அதிகம் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குடும்ப பின்னணி, பணிச்சூழல், உணவு முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோய் வருவதாக கூறப்படுகிறது. இதய நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலியாகின்றனர். நெஞ்சு வலி என்று சொல்லப்படும் இதய கோளாறால் இளம் வயதிலேயே பலர் உயிரிழக்கின்றனர்.

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக செயற்கை இதயம் கண்டு பிடிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான 400 கிராம் எடையுள்ள இயந்திரத்தினால் ஆனது இந்த செயற்கை இதயம். மும்பையை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இந்த செயற்கை இதயத்தை வரவழைத்து நோயாளி ஒருவருக்கு பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்திருக்கிறது.
இதற்காக அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் பந்த்ராவில் உள்ள ஆசிய இதய நோய் மருத்துவமையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்த செயற்கை இதய கருவி, இதயம் செய்யும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். செய்கை இதய கருவியானது, ரீசார்ஜ் செய்யத்தக்க பேட்டரிகள் மூலம் இயங்கும். ஆனால், விலைதான் அதிகம்.

தற்போது ஆசிய இதய நோய் மருத்துவ மையத்தில் கிடைக்கும் செயற்கை இதயத்தின் விலை 1 கோடி ரூபாய் ஆகும். இதுபற்றி, இம்மையத்தின் இயக்குநர் டாக்டர் ராமாகாந்த் பண்டா கூறியதாவது:-

இந்தியாவில், இதய நோயால் பாதிக்கப்படுவர்களில் ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே மாற்று இதயம் பொருத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த செயற்கை இதய கருவியானது, நிஜ இதயத்தை விட மிகச் சிறியது. இதய கோளாறுக்கு ஒரு நல்ல தீர்வாக இந்த கருவி அமையும். இதய நோயாளிகளுக்கு இதன் மூலம் புத்துயிர் கிடைக்கும். எப்போதும் போல் நோயாளிகள் அனைத்து வேலைகளையும் செய்யலாம். தண்ணீரில் நீந்த மட்டுமே கூடாது. நோயாளிகள் புத்துணர்ச்சியுடன் திகழ்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 கருத்து: