சனி, 29 செப்டம்பர், 2012

ஊறுகாய் உற்பத்தியில் வெற்றி!

சொல்கிறார்கள்


"பிள்ளையார் சுழி போட்டுச்சு!' ஊறுகாய் தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ள மீனா: தேனி தான் எங்க ஊர். எங்க வீட்டுக்காரருக்கு, ஓட்டல்ல சப்ளையர் வேலை. ரெண்டு பிள்ளைக. குடும்பம் அவர் வருமானத்தை மட்டும் நம்பி, ஏனோ தானோன்னு ஓடுச்சு. எங்க பக்கத்து வீட்டுல இருந்த அம்மா ஒருத்தவுக, நான் போட்டுத் தந்த ஊறுகாய சாப்பிட்டதும், "உனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு; ஊறுகாய் போட்டே கூட பொழச்சுக்கலாம்'னு சொன்னாக. அந்த வார்த்தைங்கதேன், இந்த தொழிலை எடுத்துச் செய்ய, என் மனசுல பிள்ளையார் சுழி போட்டுச்சு! முதன்முதலா, நூறு பாட்டில் பூண்டு ஊறுகாய் போட்டு, "முனீஸ்வரன் ஊறுகாய்'ன்னு லேபிள் ஒட்டி, அக்கம் பக்கத்துல இருக்கறவுகளுக்கு கொடுத்தோம். வாங்குனவுக என்ன சொல்றாகனு கேட்டு, அடுத்து போடலாம்னு காத்திருந்தோம். ஒரு வாரத்துக்குள்ள, "சாப்பிடறதுக்கு எப்பவும் அடம் பிடிக்கற எங்க பிள்ளைக, உங்க ஊறுகாயால, இப்போ மறுசோறு கேக்குதுக... பெரியவுகளுக்கும், ருசி உச்சிக்கு ஏறுது'ன்னு ஒருத்தர் தப்பாம பாராட்ட, எங்களுக்கு சந்தோஷம் தாங்கல. அடுத்த தடவை, எலுமிச்சை ஊறுகாய் போட்டு, கடைகளுக்கு சப்ளை செய்தோம். எங்ககிட்ட ரொம்ப யோசிச்சு சரக்கு எடுத்த கடைக்காரர், "என்னம்மா, ஊறுகாயில ஏதும் மை ஒட்டி வெச்சிட்டீகளா? ஒங்க ஊறுகா பிச்சுக்கிட்டுப் போகுது'னு பாராட்டுனதோட, "உன் கைப் பக்குவத்துல, பிரண்டை ஊறுகா போட்டுக் கொடு... சூப்பரா போகும்'னு ஐடியாவும், ஆர்டரும் கொடுத்தாரு. பகல் முழுக்க சர்வர் வேலை, ராத்திரி ஊறுகாய் போடுறதுக்கு உதவி செய்யிறது, காலைல எட்டு மணி வரைக்கும் கடைகளுக்கு ஊறுகாய் சப்ளை செய்யிறதுன்னு, என்னோட சேர்ந்து உழைச்ச என் வீட்டுக்காரர், ஒரு கட்டத்துல, சர்வர் வேலையை விடுற அளவுக்கு, தொழில் முன்னேற்றம் கண்டது. தக்காளி, மாங்காய், எலுமிச்சை, பூண்டு, பிரண்டை, இஞ்சி, நார்த்தங்காய், மிளகாய் என்று, 14 வகையான ஊறுகாய்களை, மாதத்துக்கு, 1,000 முதல், 1,500 பாட்டில்கள் தயாரிக்கிறோம். தேனி, உசிலம்பட்டி மட்டுமல்லாது, கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், வியாபாரம் விரிந்திருக்கிறது. மாதம் கிட்டத்தட்ட, 15 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக