சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பேர்த் நகரில் நடைபெற்று வந்த கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு இன்று மாலை நிறைவடைந்தது.

மாநாட்டின் இறுதியில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுமாறு 53 நாடுகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

அழைப்புரையாற்ற மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டதும், கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து கனேடியப் பிரதமர் ஹாபர், கடந்த வாரம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகப் பேசியிருந்தார்.

அப்போது அடுத்த கொமன்வெல்த் கூட்டத்துக்கு முன்னர் தமது கவலைகளுக்கும் கரிசனைகளுக்கும் சிறிலங்கா உரிய வகையில் பதிலளிக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர்கள் அதைச் செய்யாது போனால் நாங்கள் புறக்கணிப்போம் என்று அவர் குறிப்பிட்டதாகவும் கனேடிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.