அறிமுகம்
தமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது அனைவராலும் முடிவதில்லை. கிடைக்கும் நேரம் அரிதாக இருப்பதும், கட்டுரை எழுதுவதில் ஆர்வமின்மையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் படம் எடுப்பது சிலருக்கு எழுதுவதிலும் பார்க்க எளிய விசயமாக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே எடுத்த தரமான படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள் உங்களிடம் இருக்கலாம். தற்போது தரவேற்ற முறையும் மிகவும் எளிதாகி இருக்கின்றது. எனவே நீங்களும் இலகுவாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். அதன்மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் உங்கள் பங்களிப்பும் இடம்பெறும்.
விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியா மட்டுமன்றி பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள் போன்ற பிற விக்கித் திட்டங்களிலும் இக்கோப்புகளைப் பயன்படுத்தலாம்.
தேதி: | நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012 |
சமூகவலை: | ஃபேஸ்புக் – டுவிட்டரில் #twmc – வலைப்பதிவு |
மின்னஞ்சல்: | tamil.wikipedia [at] gmail.com |
பரிசுகள் : |
|
தலைப்புகள்: | தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள், |
விதிகள்
- பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு உடனடியாக நீக்கப்படும். (மேலும் காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை)
- ஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.
- போட்டி காலம்: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012
- கோப்புகள் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்படவேண்டும். இதற்காக காமன்சின் தரவேற்ற வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இவ்விணைப்பினைப் பயன்படுத்தி தங்கள் கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும். தரவேற்ற வழிமுறைகளுக்குக் இப்பக்கத்தைக் காண்க.
- பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும். பின்வரும் வகை ஊடகங்கள் பதிவேற்றப்படலாம்
-
- தமிழர் வாழிடங்கள் தொடர்பான படங்கள்
- தமிழர், தமிழியல் தொடர்புடையோர் படங்கள்
- தமிழர் மரபுச் சின்னங்களின் படங்கள்
- தமிழ் நிறுவனங்களின் படங்கள்
- தமிழர் நிலச்சூழல், உயிரினங்களின் படங்கள்
- தமிழர் பாரம்பரியக் களங்கள் - கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் போன்றவற்றின் படங்கள்
- தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
- தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்
- தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
- தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல், சடங்குகள், மற்றும் கிராமியக் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)
- ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
- பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள்:
- புகைப்படம் -- jpg, png, svg, xcf, TIFF
- நிகழ்படம் -- .ogg theora (.ogv)
- அசைப்படம் -- .gif
- ஒலிக்கோப்புகள் ogg vorbis (.ogg), .midi
- பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் தேர்வு நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.
- பதிவேற்றப்படும் கோப்புகள் படைப்பாக்கப் பொதுமங்களின் குறிப்பிடுதல் - இலாப நோக்கமற்ற - அதே மாதிரிப் பகிர்தல் 3.0 (CC-BY-SA 3.0) உரிமத்தின் அடிப்படையில் பதிவேற்றப்படும்.
பரிசுகள்
- முதல் பரிசு: 200 அமெரிக்க டாலர்கள்
- இரண்டாம் பரிசு : 100 அமெரிக்க டாலர்கள்
- மூன்றாம் பரிசு : 50 அமெரிக்க டாலர்கள்
- ஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 அமெரிக்க டாலர்கள்
- தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 அமெரிக்க டாலர்கள்
- சிறப்புப் பரிசு: 150 அமெரிக்க டாலர்கள் (தமிழர் தொழிற்கலைகள் ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
- பரிசு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற ஆக்கங்கள் தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிப்படுத்தப்படும்.
- ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- பரிசுகள் பொதுமை கருதி அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டாலும், கையிருப்பு இந்திய ரூபாய்களில் உள்ளது. எனவே நாணய மாற்று விகித்தில் ஏற்படும் மாற்றங்களால் போட்டி முடிந்த பின் (மார்ச் 2012) வழங்கப்படும் பரிசுத் தொகையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.
பங்கேற்க
- கோப்புகள் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்படவேண்டும்.
- விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் கணக்கொன்றை ஏற்படுத்தி அதனைக் கொண்டு புகுபதிகை செய்யவும்
- பின்வரும் இணைப்பினை சொடுக்கி, கோப்புகளைப் பதிவேற்றவும்:
மேலும் விபரங்களுக்கு http://tawp.in/r/2rbo
__._,_.___
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக