செவ்வாய், 15 நவம்பர், 2011

சந்தையில் காலணி விற்கும் பேரூராட்சி தலைவர்





மேட்டூர்:கொளத்தூர் பேரூராட்சி தலைவர் சின்னக்கண்ணு (எ) பழனிச்சாமி, வாரந்தோறும் சந்தையில் கடை போட்டு, காலணி விற்பனை செய்கிறார்.

சேலம் மாவட்டம், கொளத்தூர் பேரூராட்சி தலைவர் பதவி, ஆதி திராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கொளத்தூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, 16 பேர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சின்னக்கண்ணு (எ) பழனிச்சாமி வெற்றி பெற்று தலைவரானார்.கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தையில் சின்னக்கண்ணு கடை போட்டு, காலணி வியாபாரம் செய்வது வழக்கம். பேரூராட்சி தலைவரான பின்பும் சந்தையில் சின்னக்கண்ணு காலணி வியாபாரம் செய்கிறார்.

அவர் கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுகளாக, காலணி வியாபாரம் செய்கிறேன். அந்தியூர், மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ்., மற்றும் கொளத்தூர் வாரச்சந்தைகளில் கடை போடுவேன். காலணி வியாபாரத்தின் மூலமே கொளத்தூர் பேரூராட்சியின் பெரும்பாலான மக்கள் எனக்கு அறிமுகம் ஆகினர்.தற்போது கொளத்தூர் பேரூராட்சி தலைவராக இருந்தபோதிலும், 20 ஆண்டாக காப்பற்றிய தொழிலை விட மனமில்லை. தலைவரான பின், வெளிசந்தைகளில் கடை போடுவதை நிறுத்திவிட்டு, கொளத்தூர் சந்தையில் மட்டும் கடை போட்டு காலணி விற்பனை செய்கிறேன்.இவ்வாறு சின்னக்கண்ணு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக