சனி, 19 நவம்பர், 2011

என்று முடியும் இந்த மீனவர் சோகம்?


நல்ல கட்டுரை. இந்திய அரசு எல்லா மீனவர் நலனிலும் கருத்து செலுத்த இயலும். ஆனால் தமிழ் மீனவர்கள் மீது சிறிதும் கருத்து செலுததாது. எனவேதான் கடல் எல்லையில் சிங்கள நாடு வன் கவர்வு மேற்கொள்ளத் தேவையில்லாமல் தானே உள்வர வழி வகுத்துக் கொடுக்கிறது. மத்திய அரசிற்குத் தாளம்போடும் வேலையை அனைத்துக் கட்சிகளும் நிறுத்தினால்தான் மீனவர் நலன்  உட்பட அனைத்துத் தமிழர் நலன்களும் காக்கப்படும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


என்று முடியும் இந்த மீனவர் சோகம்?

First Published : 18 Nov 2011 01:51:30 AM IST


காலம் எல்லாம் உழைத்து உழைத்து ஓடாகிப்போன மக்களில் உழவர்களும், மீனவர்களும் முதலிடத்தில் இருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய துயரம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர, குறைந்தபாடில்லை. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் கடமையைச் செய்யும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு பாராமுகமாக இருப்பதுதான் புதிராக இருக்கிறது.உலகம் முழுவதும் அரசாங்கம் என்பது தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே இருக்கிறது. ஆனால், இந்திய நாட்டில் மட்டும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. இலங்கைக் கடற்படையால் கொலையுண்ட மீனவர் தொகையும் குறையவில்லை. இதற்குக் காரணம் என்ன?பல மொழி, பல இனம் கொண்ட இந்நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகப் பேசினால் மட்டும் போதுமா? இந்திய மக்களில் ஒருவர் மேல் படும் அடி ஒவ்வொருவர் மேலும் பட்டதாக நினைக்க வேண்டும். ஆனால், இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய மீனவர்கள் மீது தினமும் விழுந்து கொண்டிருக்கும் அடியைக் கண்டும் காணாமல் இருப்பது எப்படி?"தமிழ் மக்களின் தலைவர்கள்' எனக் கூறிக் கொண்டவர்கள் எல்லாம் வாய்ச்சொல்லில் வீரர்களாகவே இருக்கின்றனர்.கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள், வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டப் போகிறார்களா? பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.தமிழ் மக்களுக்கென ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழர் ஒருவரே மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார். அத்துடன் புதுவையைச் சேர்ந்த தமிழர் ஒருவரே மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இருக்கிறார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதைவிட, தில்லிக்கு நல்ல பிள்ளைகளாக நடந்துகொண்டு சாகும்வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏதேனும் எழுச்சி ஏற்படுமானால் அதை அடக்குவதற்கு இவர்கள் பயன்பட்டு வருகின்றனர்.இப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை எப்படியாவது அடக்கியாக வேண்டும். இப்போராட்டம் கடலோர மக்களுக்கானது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது. இதை ஒடுக்குவதற்காக பிரதமரின் தூதுவராக புதுவை நாராயணசாமி வருகை தந்துள்ளார்.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இடிந்தகரையில் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பு, கழிவு நீர் கலப்பதால் மீன்கள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பது மத்திய அரசின் கடமையில்லையா?தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் 15 விஞ்ஞானிகள் கொண்ட குழுவும், மாநில அரசு மற்றும் போராட்டக்குழு இணைந்த குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய வல்லுநர் குழு கூடங்குளம் அணு உலைப்பகுதிகளை இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தியது.இதைத் தொடர்ந்து போராட்டக்குழு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட குழுவும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கவுள்ளது.கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க அனுப்பி வைக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, போராட்டக்காரர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுபற்றி விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். மக்களின் அச்சத்தைப் போக்க வந்தவர் அவர்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.ஜெய்தாபூர் அணு மின் நிலையம் பிரான்ஸ், அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்போடும், கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியாவின் ஒத்துழைப்போடும் அமைக்கப்படுகிறது. அணு சக்திக்கு எதிரான போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றால் நமது நலன்களுக்கு எதிராக அந்தந்த நாடுகளே எப்படி நிதி உதவி அளிக்கும்?அணுசக்தித் துறையில் முன்னேறிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் அணுமின் நிலையங்களைப் படிப்படியாக மூடி வருகின்றன. 1973-க்குப் பிறகு அமெரிக்காவில் புதிதாக அணுமின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் இப்போது அணுமின் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.இவ்வாறு அணுசக்திக்கு எதிரான தேசிய யாத்திரைக் குழுவில் இடம்பெற்றுள்ள மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்úஸ பாட்டீல் கூறியுள்ளார்."நாட்டின் அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்துள்ள போதிலும் இந்த இடங்களில் நிலநடுக்கம் நிகழாது என்று கூறிவிட முடியாது' என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத்தலைவர் சகிதர் ரெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்."மழை வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கே அரசினால் முழுமையாக உதவி செய்ய முடியவில்லை. அணு உலைகளில் விபத்துகள் ஏற்படுமானால் என்ன செய்ய முடியும்?' என்று மக்கள் அஞ்சுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. 1984-ம் ஆண்டு போபால் நச்சுவாயு கசிவினால் ஏற்பட்ட இழப்பையே இன்றுவரை ஈடுசெய்ய முடியவில்லையே!பூமி தோன்றி கடல் தோன்றியபோதே தோன்றிய மூத்த இனம் காப்பாற்றப்பட வேண்டாமா? மீனவர்கள் கடல்தாயின் பிள்ளைகள். அந்தக் கடலோர மக்களை கடலோரக் கிராமங்களிலிருந்து விரட்டுவதற்குச் சட்டங்கள் போட்டது போதாதா? இப்போது அணுமின் நிலையங்கள் அமைத்தும் அவர்களை அழிக்க வேண்டுமா? இந்திய நாடு வல்லரசாக வளர்வதற்கு ஏழை எளிய மக்கள்தாம் தியாகம் செய்ய வேண்டுமா?இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் தில்லிக்குக் கடிதம் எழுதுவதும் இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கைக்குப் போகும் போதெல்லாம் தமிழக மீனவர் பிரச்னை பற்றியே பேசப்போவதாகக் கூறப்படுவதும் வழக்கமாகி விட்டது.கடந்த அக்டோபர் 8-ம் நாள் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் இடையில் சென்னை வந்து முதல்வரைச் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் மீனவர்கள் மீது இலங்கை அரசின் தாக்குதலைத் தொகுத்து புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தேசியப் பிரச்னையாகக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவுக்கு எதிரான இலங்கை அரசின் தாக்குதல்களாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்ன நடந்தது? இப்போது கூடங்குளம் அணுஉலை பிரச்னை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த வந்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி கூறுகிறார், இந்திய மீனவர்களுக்கு இனி பாதிப்பு நேர்ந்தால், மத்திய அரசு வேடிக்கை பார்க்காதாம்.""இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மாலத்தீவில் சார்க் மாநாட்டின்போது அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்திய மீனவர்களுக்கு இனி பாதிப்பு நேர்ந்தால் மத்திய அரசு வேடிக்கை பார்க்காது'' என்று நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.இவரது உறுதிமொழிக்குப் பிறகும் நவம்பர் 15-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் இதை உறுதி செய்கிறது. மீனவர் மீதான தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது என்று கூறியுள்ளார். இந்திய அரசும் அதே இரட்டை நிலையைத்தான் கடைப்பிடிப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் கடற்கரையும் கடல் வளங்களும் மதிப்பு மிகுந்தவை. பல்லாயிரம் ஆண்டுகளாக மீனவர் வாழ்வும் வரலாறும் கடலோடும் கடற்கரையோடும் பின்னிப் பிணைந்தவை. அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை-2010-ஐ எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போது கூடங்குளத்திலும் தங்கள் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களுக்காகவே போராடி வருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மீனவ மக்களுக்கும் உண்டு. அவர்கள் கேட்பது மாட மாளிகைகள் அல்ல; கூடகோபுரங்கள் அல்ல; வாழ்வும் வாழ்வாதாரங்களுமே. இதை மறுப்பது நியாயமாகுமா? என்று முடியும் இந்த மீனவர் சோகம்?
கருத்துகள்

உண்மையில் எதற்காக தாக்குதல் நடக்கிறது? மீன் பிடிக்க கூடாது என்பதற்காகவா? அல்லது மீன் பிடிக்கும் சாக்கில் கடத்தல் செய்வதை தடுக்கவா? உண்மையை மாநில அரசும்,மதிய அரசும் மக்களிடம் கூறவேண்டும். எல்லோரும் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களா?
By Tamilian
11/18/2011 8:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக