புதன், 16 நவம்பர், 2011

கணித்தமிழ் மேம்பாட்டிற்கான கருத்துருக்கள் :


கணித்தமிழ் மேம்பாட்டிற்கான கருத்துருக்கள் :

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



கணித்தமிழ் மேம்பாட்டிற்காக ஐந்தாண்டுத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியனவும் உடனடி நடவடிக்கைக்கு உரியனவுமான சிலவற்றைத் தெரிவிக்கின்றேன்.
01. கணி விசைப்பலகையில் தமிழ் எழுத்துகள் இலங்க வேண்டும்.
02. இப்போதைய தமிழ் விசைப்பலகைகளில் ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறு வகையாக எழுத்துகளுக்கான விசைகள் பயன்பாட்டில் உள்ளன. சான்றாக, ஆங்கில க்யூ இடத்தில் ஹ,ங,ணு, என வெவ்வேறு வகை; காற்புள்ளி, முற்றுப்புள்ளி ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு விசை ஒதுக்கீட்டு முறை என்பனவாக உள்ளன. எனவே, வெவ்வேறு எழுத்துருக்களைக் கணியச்சிடும் பொழுது ஒவ்வொரு வகையாக விசைப் பயன்பாடு அமைகின்றது. இதானால் குழப்பமும் பிழைகளும் நேர இழப்பும் ஏற்படுகின்றன. இவை யெல்லாம் மன நலனுக்கு எதிரானவை. மேலும், வெவ்வேறு விசை ஒதுக்கீட்டு முறையால் கணியச்சிட்டவற்றைச் சீருரு(யூனிகோடு) அல்லது வேறோர் எழுத்துருவிற்கு மாற்றும் பொழுது பிழைகள் நேர்கின்றன. நெடில் எழுத்துகள், குறியீடுகள் முதலானவை மாறி வருகின்றன. எனவே, விசைப்பலகைகளில் விசைக்கான எழுத்துகள் அமைவிற்கு ஒரு குழுவை அமைத்து அனைவருக்கும் ஏற்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தி அதற்கிணங்கவே விசைப்பலகைகள் அமைய வேண்டும்.
03. தமிழ் மொழியில் அயல் எழுத்துகளுக்கு இடம் கொடுத்ததால்தான் அயற் சொற்கள் புகுந்து தமிழ் தான் பேசும் பரப்பளவை இழந்துசுருங்கி உள்ளது. இதை நினைவில் கொண்டு கணிணி விசைப்பலகையில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கணிணியில் குறியீடுகள் என்னும் பகுதியில் இவற்றிற்கு இடமளித்தால் இன்றியமையாது வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் விசைப்பலகை என்பது தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்டதாகவும் தமிழ் எண்கள் உடையதாகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04. கணித்தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இதழ்களுக்கு அரசு நேரடியாகவும் விளம்பரங்கள் மூலமும் பொருளுதவி அளிக்க வேண்டும்.
05. நல்ல தமிழில் வரும் கணியிதழ்களை அரசே வாங்கிக் கல்விக்கூடங்களுக்கும் நூலகங்களுக்கும் அளிக்க வேண்டு
06. கணிச்சொல் அகராதிகள் வெளியிட அரசு முழு நிதியுதவி அளித்தல் வேண்டும்.
07. கணிணி தொடர்பான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முழு நிதியுதவி அளித்தல் வேண்டும்.
08. கணிணி தொடர்பான நூல்களுக்குத் தனியாகப் பரிசளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும்.
09. தமிழ்ப் பயன்பாடு உள்ள கணிணிகள் மட்டுமே தமிழ்நாட்டில் விற்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. தமிழ்நாட்டில் விற்கப்படும் அனைத்து அலைபேசிப் பொறிகளிலும் தமிழ்ப்பயன்பாட்டிற்கு வழிவகை செய்தல் வேண்டும்.
11. கல்விக்கூடங்களில் கணியறிவைத் தமிழில் தருநருக்கு நிதியுதவி அளித்தல் வேண்டும்.
12. கணித்தமிழ் மன்றம் ஒன்றை அரசே அமைத்துத் தமிழில் கணிணியறிவு பெருகுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவற்றின் மூலம் கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்கள், சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற வேண்டும்; நூல்களும் அகராதிகளும் வெளியிடப்பெற வேண்டும்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர் ,தமிழ்க்காப்புக்கழகம்
அமைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்<
7 / 1 , மாவு ஆலை முதல் தெரு,
மயிலாப்பூர், சென்னை 600 004
பேசி : 98844 81652
மின்வரி : thiru2050@gmail.com
0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக