செவ்வாய், 15 நவம்பர், 2011

"மற்றவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்துகிறது!'



பல குரல்களில் பேசி அசத்தும், மாற்றுத்திறனாளியான குமார்: பிறக்கும் போதே பார்வை சவாலுடன் பிறந்தேன். ஐந்து வயதில், "லிட்டில் பிளவர்' பள்ளி ஹாஸ்டலில், என் பெற்றோர் சேர்த்தனர். என் வாழ்க்கையே சூனியமானது போல் இருந்தது. பின், மனதை தேற்றி, வேதனையில் இருந்து நானாகவே வெளியில் வர ஆரம்பித்தேன். என்னை நான் மட்டும் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தேன்.சாப்பாடு வாங்க, வகுப்பிற்கு போக யாருடைய துணையும் இன்றி, நானாகவே வெளியில் போய் வர ஆரம்பித்தேன். இது, என் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே, விலங்குகளின் அத்தனை குரல்களையும், மிமிக்ரி மூலம் கொண்டு வருவேன். என் பள்ளி ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலால், மிமிக்ரி செய்வதில், முழு மூச்சுடன் இறங்கினேன்.நடிகர்களின் குரல் மட்டுமல்லாமல், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என்று, பலரின் குரல்களையும் அச்சுபிறழாமல், என்னால் பேசிக் காட்ட முடியும். அரைமணி நேரம் ஒரு நபர் என்னுடன் பேசினால், அவரைப் போலவே என்னால், மிமிக்ரி செய்ய முடியும். இந்தத் திறமையே மற்றவர்களிடம் இருந்து என்னை வேறுபடுத்துகிறது. இது மட்டுமல்ல, இந்தியாவின் கடைக்கோடியில்என்னைக் கொண்டு போய் விட்டாலும், "வாக்கிங் ஸ்டிக்' துணையுடன், கிளம்பிய இடத்திற்கே மீண்டும் என்னால், வந்து சேர முடியும். இதற்குக் காரணம் என் தன்னம்பிக்கை.நல்ல மேடைகளில் மிமிக்ரி செய்யும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக