வியாழன், 27 மே, 2010

யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா



சென்னை, மே 26: முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்களில் ஒருவரைக் கூட இழக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. வைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஜெயலலிதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான முத்துசாமி, தி.மு.க.வில் இணையப் போவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் பொதுச் செயலாளர். கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளதால், உறுப்பினர்கள் அனைவரது பிரச்னைகளையும் கேட்டு, தீர்வு காண வேண்டியது எனது கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, கட்சியினர் யாருக்கு எந்த பிரச்னை இருந்தாலும், என்னை சந்திக்கலாம். அவர்களது மனக் குறைகள் குறித்து என்னிடம் மனம் விட்டுப் பேசலாம். பேச்சுவார்த்தை மூலம் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு என்ன மனக் குறை உள்ளது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முத்துசாமி எப்போது வேண்டுமானாலும், என்னை சந்தித்துப் பேசலாம். அவர் என்னிடம் பேசினால், அவரது பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். முத்துசாமி உள்பட கட்சியில் உள்ள எந்த ஒரு உறுப்பினரையும் இழக்க நான் விரும்பவில்லை.ஸ்பெக்ட்ரம் பிரச்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஊடகங்களில் பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் பல ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், பிரதமர் மன்மோகன் சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா சாதாரணமானவர். இப்பிரச்னையில் அவரைவிட பலம் வாய்ந்த யாரோ உள்ளனர். அத்தகைய நபரைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயல்கிறார்.÷2011-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது மேலும் சில கட்சிகள் அ.தி.மு.க. அணியில் சேரக் கூடும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து, கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு செய்யும் என்றார் ஜெயலலிதா. முன்னதாக அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் சார்பில் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள வாகனத்தை ஜெயலலிதா இயக்கி வைத்தார்.÷மேலும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சம் நிதி உதவி வழங்கினார். மரணமடைந்த கட்சி உறுப்பினர் ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியை அவர் வழங்கினார். வடசென்னை மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச தையல் பயிற்சியை முடித்த 70 பெண்களுக்கு, தையல் எந்திரங்களை ஜெயலலிதா வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஜி. செந்தமிழன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்து வி்ட்டார். ஆனால், பொருள் புரிந்துதான் படித்தாரா எனத் தெரியவில்லை. காட்சிக்கு எளியராக இருந்தால் தம்முடைய குறைகளைக் களைந்து நிறை கண்டு வெற்றிகளை ஈட்டியிருப்பாரே! யாராக இருந்தாலும் தன்னைச சந்திக்கலாம் என்றவர்,அதற்கு ஆண்டுக் கணக்கில் தவமிருந்து காத்திருக்க வேண்டும் எனக் கூறத் தவறி விட்டார். என்றாலும் விலகல்களினால் கலகலத்துப் போய்விடடார் என்று மட்டும் தெரிகிறது. தம்முடைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டால் வெற்றியை அரவணைக்கலாம். ஆனால், மேலாதிக்க மனப்போக்கு அதனைத் தடுக்கின்றது. கட்சி கரைந்து விடும் என்ற அச்சம் வந்து விட்டதால் முத்துச்சாமி சந்திக்கும்வரை அல்லது விலகும் வரை காத்திருக்காமல் வரவழைத்துப் பேசலாம். தொண்டர்களின் தமிழ் உணர்வைப் புரிந்து கொள்ளாத மற்றொரு கட்சித் தலைமை! எக்கேடு கெட்டால் நமக்கென்ன? தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் கட்சியை வரவேற்போம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக