புதன், 26 மே, 2010

மாநிலங்களவைத் தேர்தல்: 2 இடத்திலும் அதிமுக போட்டி


மாநிலங்களவைத் தேர்தல்: 2 இடத்திலும் அதிமுக போட்டி



மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ​(இடமிருந்து)​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.​ மகேந்திரன்,​​ மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.​ ராமகிருஷ்ணன்,​​ ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ.
சென்னை,​​ மே 25:​ மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம் என்று மார்க்சிஸ்ட்,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய தோழமைக் கட்சிகள் அறிவித்துள்ளதால் 2 இடத்திலும் அ.தி.மு.க.​ போட்டியிடுகிறது.​ மாநிலங்களவையில் காலியாகும் உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளது.​ தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.​ ​​ இதில் தி.மு.க.​ அணி 4 இடங்களிலும்,​​ அ.தி.மு.க.​ அணி 2 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.​ அ.தி.மு.க.​ தனது சொந்த பலத்தின் மூலம் ஒரு இடத்தையும்,​​ தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் மற்றோர் இடத்தையும் கைப்பற்றும் நிலையில் உள்ளது.​ ​​ இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க.​ தலைமை கடிதம் எழுதியிருந்தது.​ ​​ இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,​​ அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் பி.சம்பத்,​​ இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன்,​​ மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு,​​ ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ,​​ பொருளாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோர் அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.​ ​சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்தத் தலைவர்கள்,​​ மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர்.​ ​இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன்,​​ வைகோ,​​ சி.​ மகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:​ ​மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா எங்கள் கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.​ அவரது கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.​ ​மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கும் மத்திய,​​ மாநில அரசுகளை வீழ்த்த வேண்டியுள்ளது.​ எனவே,​​ அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.​ ​இதன் மூலம் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ 2 இடங்களைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.​ ​அ.தி.மு.க. ​ வேட்பாளர்கள் யார் என்பது வரும் 27-ம் தேதி நடைபெறும் அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்குப் பின் தெரிய வரும்.​ ​​
கருத்துக்கள்

பாவம் அதிமுகவின் தோழமைக் கட்சிகள்! குறிப்பாக மதிமுக! தொடர்ந்து தேர்தல் தொகுதிகளை விட்டுக் கொடுத்தது. மாநிலங்களவையில் வைக்கோ இடம் பெற்றால் தமிழர்க்கு நல்லது; அதிமுகவிற்கும் வலிமைவாய்ந்த சொற்பொழிவாளரை அனுப்பிய வகையில் மிக நல்லது. ஆனால், பேராசை பிடித்த அதிமுக எல்லாவற்றையும் தானே கபளீகரம் செய்யும் பிசாசு போல் நடந்து கொள்கிறது. என்ன செய்வது? உலகத்தமிழர் நலனுக்கு எதிரான திமுகவிலும் இணைய முடியவில்லை. தனித்து நிற்கும் துணிவும் இல்லை. அதிமுகவின் கொத்தடிமையாக இருக்கின்றனர். மத்திய மாநில அரசுகளை வீழ்த்த அதிமுகவால்தான் முடியும்; தங்களால் முடியாது என இக்கட்சியினர் கருதினால் இவர்களுக்கு எதற்குத் தனித் தனிக் கட்சிகள்? கட்சிகளைக் கலைத்துவிட வேண்டியதுதானே! ஏதோ, புரட்சித்தலைவியைச் சந்தித்த நற்பேறு கிடைத்த மகிழ்ச்சியில் வாய்மூடிக் கிடப்பார்கள் போலும்! தமிழர்களின் அடிமைத்தனத்தைப் போக்க எண்ணுபவர்கள் முதலில் தங்கள் அடிமைத்தனத்தைப் போக்க முயலட்டும்!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக