தாய் மொழியில் தடுமாறலாமா?
இன் றைய நாளில் பள்ளிகளில் தமிழின் நிலை, தமிழ் கற்பிக்கும் முறைகள், தமிழ் மொழியில் மாணவர்களின் நிலை இவைகளைப் பார்க்கும் போது சில கசப்பான உண்மைகளை இங்கே வெளிப்படுத்த வேண்டியுள்ளது.கல் வித்துறையில் ஒரு புள்ளி விவரம் கேட்கப்படுகிறது. அது என்னவென்றால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை எத்தனை மாணவர்களுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியவில்லை, எத்தனை மாணவர்கள் சுமாராக எழுதப் படிக்கக் கூடியவர்கள் என்ற விவரங்களைக் கேட்கிறார்கள். பத்தாம் வகுப்புக்கு வந்தும் கூட தமிழில் எழுத, படிக்க தெரியாதவர்கள் எல்லா பள்ளிகளிலும் இருக்கிறார்கள் என்பது உண்மையே! இதை யாராலும் மறுக்கமுடியாது. தமிழ்நாட்டில் தாய் மொழியிலே தடுமாற்றம் என்றால் மற்ற பாடங்களை இவர்கள் எப்படி படிக்க முடியும்? எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஆக தமிழ் மொழிப்பாடத்தில் இப்படியொரு நிலை இருப்பதற்கு என்ன காரணம்? கல்வித்துறைதான் காரணம்.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் கொண்டு வந்த நேரத்தில், 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு கற்பித்து வந்த இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதிலாக பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தார்கள். இடைநிலை ஆசிரியர்கள் எல்லா பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து வந்தார்கள். ஆனால் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்தபோது கணக்கு ஆசிரியர்களையும், அறிவியல் ஆசிரியர்களையும் நியமித்தார்கள். அதன்பிறகு ஆங்கில ஆசிரியர்களை நியமித்தார்கள். இந்த ஆசிரியர்களுக்குத் தமிழ்ப் பாடத்தை நடந்த பாடவேளை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இவர்கள் தமிழ் மொழி அறிவு பெற்றிருந்த போதிலும் தமிழ்ப் பாடத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை. தங்களுடைய பாடத்தைக் கற்பிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். தமிழில் இலக்கணம், செய்யுள் பகுதிகளைத் தொடுவதில்லை, உரைநடையை மட்டும் மாணவர்களை படிக்கச் சொல்லியும், உரையைப் படித்து விடைகளை எழுதி தயார் செய்தும் தமிழ்ப் பாடத்தை முடித்துவிடுகிறார்கள்.ஆக, தமிழ் மொழியைக் கற்பிக்க தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் தமிழ் மொழியில் மாணவர்கள் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி சரியான தமிழை பிழை இல்லாமல் எழுதும் பயிற்சியைக் கொடுக்க முடியும்.ஆசிரியர்கள் நியமனம்:ஆசி ரியர்களை நியமிக்கும் போது 6,7,8-ம் வகுப்புகளுக்கு மற்ற பாட ஆசிரியர்களை நியமிப்பது போல தமிழ் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. உதாரணமாக 6,7,8-ம் வகுப்புகளுக்கு நான்கு பணியிடங்களை ஒதுக்கும்போது இரண்டு கணித பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அல்லது ஒரு அறிவியல் ஆசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் என்ற நிலையில்தான் நியமனம் செய்யப்படுகிறது. தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் அறவே விடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என எல்லா வகைப் பள்ளிகளிலும் நீடிக்கிறது.தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்:தொடக் கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும்போது கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஏன் ஆங்கில ஆசிரியரைக் கூட நியமிக்கிறார்கள். ஆனால் தமிழாசிரியர் எந்தப் பள்ளியிலும் இதுவரை நியமிக்கப்படவில்லை. அதேபோல் ஒரு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தும்போது தமிழாசிரியரைத் தவிர மற்ற பாட ஆசிரியர் பணியிடங்கள் உடனே அனுமதிக்கப்படுகிறது. தமிழாசிரியர் பணியிடங்கள் பள்ளி தொடங்கி சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் அனுமதிக்கப்படுகிறது.÷உயர்நிலைப்பள்ளி களை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தும் போதும் இதே நிலைதான். முதுநிலைத் தமிழாசிரியர்களை நியமனம் செய்யாமல் யாரோ ஒருவர் அப்பாடத்தை நடத்துகிறார்கள்.÷இப்படி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களைச் சரியான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்காமல் இருப்பதால் மாணவர்கள் தமிழ் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். தொழில் கல்வியில் சேருபவர்கள் கூட தமிழ் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும். கணிதம், இயற்பியல், உயிரியல் போன்ற பாடங்களில் உள்ள மதிப்பெண்களை தொழில் கல்வி படிப்பிற்கு எடுத்துக் கொள்வதால் அப்பாடங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தமிழை ஒதுக்கிவிடுகிறார்கள்.எனவே தாய்த் தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் இத்தகைய நிலையைப் போக்க,1. எல்லா பள்ளிகளிலும் 6,7,8-ம் வகுப்புகளுக்கு தமிழாசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.2. தரம் உயர்த்தப்படும் எல்லா பள்ளிகளுக்கும் மற்ற பாட ஆசிரியர்களை நியமிப்பது போலவே தமிழாசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும்.3. தொழில் கல்வி பட்டப்படிப்பில் சேருவதற்கும் தமிழ்ப் பாடத்தில் பெறும் மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.4. தமிழ்ப் பாட வகுப்புகளில் பேச்சுப் பயிற்சி, தாங்களே கருத்துகளை சிந்தித்து கட்டுரைகள் எழுதும் பயிற்சி, நூல்களை திறனாய்வு செய்து விமர்சிக்கும் பயிற்சி போன்ற செயல்பாடுகளைச் செய்ய வழி காணும் போது இது மொழித் திறனை வளர்க்க உதவும்.5. தனியார் பள்ளிகளில் கூட தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் தமிழைப் படிக்க தடுமாறுவார்கள். காரணம் இங்கேயும் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இந்நிலையையும் மாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சம் பந்தப்பட்டவர்கள் இவற்றைக் கவனித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் தமிழ் நாட்டில் மாணவர்களிடம் தமிழ் மொழி வளர்ச்சியுறும். இல்லையென்றால் தமிழ், நாளும் தேய்ந்து கல்வி கற்றவர்கள் கூட சரியான தமிழ் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாமல் செய்யுள், இலக்கியம், இலக்கண அறிவை பெறாமல் மங்கும் நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.கோ.செல்வராசன், காமராசு நகர், பெத்த தாளாப்பள்ளி அ.நி. கிருஷ்ணகிரி மாவட்டம்
கருத்துக்கள்
சரியான கோரிக்கைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் தமிழ்த்தாய் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் நுழைவுரிமையின்றிக் கண்ணீர் வடிக்கக் கூடாது. உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 5/26/2010 2:51:00 AM