இலங்கையில் உள்ள திருக்கோயில்களை தரிசனம் செய்வதற்காகவும், யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்து உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், கடந்த 11.5.10 ஆன்மிக இயக்கங்களைச் சேர்ந்த 6 பேருடன் சென்னையில் இருந்து கொழும்பு சென்றேன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம். 2 நாள்களாக நாங்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ 9 நெடுஞ்சாலை வழியாக ஒமந்தை ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதி பெற முயற்சிக்கலாம் என்கிற செய்தி தெரிந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானோம். யுத்தம் முடிந்து, ஓராண்டு நிறைவுபெற்றபிறகும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இலங்கை உள்ளதை நேரடியாகக் காணமுடிந்தது. ஆங்காங்கே ராணுவ முகாம்களும், ராணுவக் காவல் மையங்களும், ராணுவச் சோதனைச் சாவடிகளும் ஏராளமாக இருந்தன. ஒமந்தையிலும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சர்வதேச சமூகத்தினருக்கும் சமீபத்தில் இலங்கைத் தேர்தலில் வென்ற இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட இப் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுவாக, இலங்கை முழுவதும் ராஜபட்சவின் புகழ்பாடும் விளம்பரங்களே காணப்படுகின்றன. இலங்கை ராணுவ மற்றும் அரசு அதிகாரிகளும் தமிழ் மக்களைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர். சிங்கள பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. யுத்தப் பாதிப்பு மனோ நிலையில் இருந்து தமிழர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் தமிழர்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும், அதுகுறித்து அரசு நிர்வாகத்திடம் புகார் செய்வதற்குக் கூட பயந்து வாழும் பரிதாபகரமான சூழ்நிலையே உள்ளது. தங்கள் தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களோ, விவசாய நிலங்களோ (காணிகள்) சிங்களவர்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கும் துன்பகரமான சூழ்நிலையில்தான் தமிழர்கள் இன்று உள்ளனர். இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் உள்ளன. இதில், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தோடு தொடர்புடைய கோயில்கள் ஏராளமாக உள்ளன. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்களும் உள்ளன. யுத்தத்தின்போது தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சிங்கள ராணுவத்தினரால் தாக்கப்பட்டன. சில கோயில் வளாகங்களை ராணுவத்தினர் தங்களது முகாம்களாகக் கூட பயன்படுத்தினர். சிதிலமடைந்த பல கோயில்களை வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் உதவியுடன் இயன்ற அளவு சீரமைத்து வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் யுனிசெஃப் வாகனங்களும், கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஐ.நா. சபை சார்பில் மனிதாபிமான உதவிநிதியத்தில் சுமார் ரூ.1600 கோடி இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது. அதில், வெறும் ரூ.40 கோடி மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழர்கள் கூறுகின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சம் மாணவர்களில் 26 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே யுத்தத்துக்குப் பிறகு பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களுடன் உரையாடுகையில், கடந்த ஆண்டு உக்கிரமாக நடந்து வந்த இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூட இந்தியா இது விஷயத்தில் தலையிட்டு, ஏதேனும் ஒரு வகையில் யுத்த நிறுத்தத்தை அமல்படுத்தும், இந்தியா தங்களைக் காப்பாற்றும் என எதிர்பார்த்துக் காத்திருந்து, தமிழ் மக்கள் ஏமாந்து இருக்கின்றனர். இந்தியா நம் தாய்நாடு. இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார்கள் என்றும், இந்தியக் கப்பல்கள் இன்று வரும், நாளை வரும் என்றும், அப்பாவிகளான தங்களைக் காப்பாற்றும் என்றும் கடைசி நொடி வரை எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர். புலம்பெயர்ந்து வருகின்ற வழியில் இலங்கை ராணுவத்தினரின் மத்தியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய ராணுவத் தடவாளங்களைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக, இந்தியாவின் மீதும், தமிழக அரசியல்வாதிகள் மீதும் கடும் வெறுப்புணர்வு அவர்கள் மத்தியில் உருவாகி இருப்பதை எங்களால் காண முடிந்தது. உறவினர்களோடு சென்று சேர முடியாதவர்கள், காயம்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். யுத்தத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் ராணுவத்தினரால் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் ஏராளம். மகனைத் தேடி அலையும் பெற்றோர்களும், கணவரைத் தேடி அலையும் தாய்மார்களும் ஏராளமாக உள்ளனர். சுமார் 15 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை.இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான கருப்புச் சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருப்பதால், தமிழர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர். இலங்கை அரசின் நீதித் துறை முழுமையாக இயங்குவதில்லை.தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை. இலங்கை அரசுப் பணிகள், ராணுவப் பணிகள், காவல்துறைப் பணிகள், நிர்வாகப் பணிகள் ஆகியவற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே தமிழர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில், ரூ.5 ஆயிரம் மட்டுமே குடும்பங்களுக்குக் கிடைத்துள்ளது. இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்கு என வழங்கப்படும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் 15 நாள்களுக்குள் தீர்ந்துவிடுவதாகக் கூறுகிறார்கள். முகாம்களில் உள்ளே சென்று, யாரையும் சந்திக்க வெளியாள்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த மாதத்தில் இருந்து முகாம்களில் வசிப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பிவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தகைய ஒருசிலரிடம் எங்களால் பேசி விவரங்களைச் சேகரிக்க முடிந்தது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர்.மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. புதிய தாற்காலிக வீடுகளை அமைப்பதற்கு ஐ.நா. சபையின் சார்பில் தகரங்களும், தார்பாலின்களும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் சார்பில் ஒரு குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரம் வைப்பு நிதியாகக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நிதி எந்தக் குடும்பத்துக்கும் சென்று சேரவில்லை. இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் வழங்கியுள்ள கட்டுமானப் பொருள்களும், நிவாரணப் பொருள்களும் தமிழர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக பெரும்பான்மை சிங்களப் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் சிங்களப் பகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழர் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. தமிழக அரசால் செய்யப்பட்ட உதவிகள் கூட தமிழர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை நிலை. இந்துக் கோயில்களை புத்த விகாரங்களாக மாற்றும் முயற்சிகள் காணப்படுகின்றன. திருகேதிச்சுவரம், திருக்கோணச்சுவரம் உள்ளிட்ட பாடல் பெற்ற திருக்கோயில்களைச் சுற்றி திட்டமிட்ட ரீதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலைகளை அகற்றி விட்டு, அதே இடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும், பெüத்த அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களின் தொன்மைச் சின்னங்களையும், சமய அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்ப் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களின் பெயர்கள் கூட சிங்கள பௌத்த பெயர்களாக மாற்றப்படுகின்றன. ÷வவுனியா, திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது சீனா, ஜப்பான் போன்ற பெüத்த நாடுகள் புதிதாக உருவாக்கிய சில தொழிற்சாலைகளைக் காண முடிந்தது. திருகோணமலையில் சீன கடற்படை தளங்களையும் காண முடிந்தது.÷போரால் பாதிக்கப்பட்ட ஈரான், ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்திய அரசு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறது. ஆனால், இதுவரை எந்தவிதமான நிவாரணப் பணிகளையும் நேரடியாக இலங்கையில் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது. மத்திய, தமிழக அரசுகள் சார்பில் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பது குறித்தும் சரிவர கண்காணிக்கப்படவில்லை. மேலும், இந்திய அரசின் சார்பிலோ, தமிழக அரசின் சார்பிலோ அதிகாரபூர்வமாக எந்தவொரு குழுவும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று, உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதும் வேதனைக்குரியது. இலங்கையை வளப்படுத்தியதிலும், வலுப்படுத்தியதிலும் இலங்கை பூர்வகுடி தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இலங்கைக்கு விடுதலை வாங்கித் தருவதிலும் தமிழர்களின் பங்கே முதன்மையானது. ஆனால், தமிழர்களின் பூர்வீக பூமியான இலங்கையில் அனைத்து உரிமைகளையும் இழந்து, மிருகங்களுக்கும் கீழான நிலையில் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியபோது, விதியே விதியே என் செய்ய நினைத்தாய்; எம் தமிழ்ச் சாதியை! என்கிற பாரதியின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
கருத்துக்கள்
ஈழத்தமிழர்களின் இன்னல்களையும் சிங்களக் கொடுங்கோன்மையையும் ஓரளவேனும் படம் பிடித்துக் காட்டியுள்ள் அர்ச்சுன் சம்பத்திற்குப் பாராட்டுகள்.ஈழத் தமிழர்கள் பிற சமய வெறியர்களால் நசுக்கப்படுவதில் இருந்து மீட்கப்பட இந்து சமய மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டுகிறேன். நம் சமயமும் சமய மக்களும் அழிக்கப்படும் பொழுது காகக வேண்டியது நம் கடமை என உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டுகிறேன். ஆரியச் சமய மேலாண்மையிலிருந்து நம் சமயத்தை விடுவித்தால்தான் இது எளிதில் கை கூடும் என்றாலும் இயன்றவரை முயன்று ஈழத்தமிழர்கள் விடுதலைக் காற்றை நுகர வழிவகை செய்யட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakuvanar Thiruvalluvan 5/26/2010 3:13:00 AM
Thiru.Arjun Sampath bkoduththuLLa thkavalkaLukku nandRi.But ha can not avoid the responsibility to assert that the Eezhamtes Tamils were justiifed in demanding separation from the majoiry Sinmhalese and have their own sovereign Thamizh Eezham. People like Arjun Smapath r allowed to enter the Island juts for seeing how the Sinhalese have subjucated the Tamils. Whether Congress or BJP when in power in New Delhi they have only supported the Sinhales.