வெள்ளி, 2 ஏப்ரல், 2010

இந்தோனேசியாவில் 6 மாதங்களாக கப்பலில் சிறை: தமிழக முதல்வரின் தயவை எதிர்நோக்கும் 252 இலங்கைத் தமிழர்கள்சென்னை, ஏப்.1: இந்தோனேசியாவில் கடந்த 6 மாதங்களாகக் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும் என்று 252 இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையைச் சேர்ந்த 254 இலங்கைத் தமிழர்கள், கப்பல் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் நடுக்கடலில் இந்தோனேசியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தாங்கள் பயணம் செய்த கப்பலிலேயே கடந்த 6 மாதங்களாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சத்தான உணவு, சுகாதார வசதி, மருத்துவ வசதி எதுவும் கிடைக்காததால் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொற்று நோய் தாக்குதலால் ஒருவர் கப்பலிலேயே உயிரிழந்து விட்டார். மற்றவர்களின் உடல் நிலையும் மிக மோசமாக உள்ளது. இது குறித்து கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான வேந்தன் என்பவர், வியாழக்கிழமை தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்த பேட்டி: இந்தக் கப்பலில் உள்ள அனைவரும் இலங்கையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள். நான் அங்குள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினேன். மற்றவர்களும் அதிக வருவாய் தரும் வேலைகள் மற்றும் தொழில்களைச் செய்து வந்தனர். இந்நிலையில் 2008}ல் இருந்து இலங்கையில் போர் உக்கிரம் அடைந்ததை அடுத்து, இனியும் அங்கு உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எனவே, அங்கிருந்து தப்பித்து, குடும்பம் குடும்பமாக வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியா வந்து சேர்ந்தோம். மலேசியாவில் ஒன்று சேர்ந்த நாங்கள் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டோம். ஏனெனில், அகதிகளாகச் செல்லும் நாங்கள் அமைதியாக வாழவும், எங்கள் திறமைக்கேற்ப வருவாய் ஈட்டவும், குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கவும் மொத்தத்தில் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழக் கூடிய சூழல் ஆஸ்திரேலியாவில் உள்ளதால், அந்த நாட்டைத் தேர்வு செய்தோம். இந்தோனேசியாவைச் சேர்ந்த தனியார் கப்பல் மூலம் ஆஸ்திரேலியா செல்ல ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதற்காக ஒவ்வொருவரும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாகக் கொடுத்தோம். மலேசியாவிலிருந்து 31 பெண்கள், 30 குழந்தைகள் உள்பட 254 பேர் 1.10.2009 அன்று ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டோம். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எங்களை 10.10.2009 நள்ளிரவு இந்தோனேசியக் கடற்படையினர் கைது செய்தனர். இந்தோனேசிய கடற்பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததால் கைது செய்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். போர்ச் சூழலில் இருந்து தப்பி வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தும், எங்களை அகதிகளாக அங்கீகரிக்க முன்வராத இந்தோனேசிய அரசு, பயங்கரவாதிகளைப் போல நடத்தி வருகிறது.அந்நாட்டில் உள்ள "மெராக்' துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலிலேயே நாங்கள் கடந்த 6 மாதங்களாகச் சிறை வைக்கப்பட்டுள்ளோம். தரமற்ற மோசமான உணவு வழங்கப்படுகிறது. சுகாதார வசதி இல்லை. மருத்துவ உதவி கிடைக்கவில்லை. இதனால் தொற்று நோய் பரவியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டின் ஜேக்கப் என்ற 29 வயது இளைஞர் 22.2.2010 அன்று உயிரிழந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இலங்கைக்குத் திரும்பிவிட்டார். எங்களுக்கு உணவு, மருந்துகள் வழங்க பல தொண்டு நிறுவனங்கள் தயாராக இருந்தும் இந்தோனேசிய அரசு யாரையும் அனுமதிக்க மறுக்கிறது. ஊடகங்களையும் சந்திக்க முடியவில்லை. இதற்கிடையே அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அதிகாரிகள் எங்களைச் சந்தித்து, அகதிகளுக்கான சான்றிதழை அளிக்க வேண்டும். எனினும், ஐ.நா. அதிகாரிகளை அனுமதிக்க இந்தோனேசியா மறுக்கிறது. எங்கள் கப்பலில் தமிழ்ப் போராளிகள் இருக்கலாம் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. எனவே, இலங்கை அரசின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படவே, இந்தோனேசிய அரசு விரும்புகிறது.இப்பிரச்னையில் உடனடியாக சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். குறிப்பாக எங்களை விடுவிக்குமாறு இந்திய அரசு மூலம், இந்தோனேசிய அரசை வற்புறுத்த முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும் என்றார் வேந்தன்.
கருத்துக்கள்

கலைஞர் பரிவு காட்டுவதாக இருந்தால் 6 திங்களாக உறங்கிக் கொ்ண்டிருக்க மாட்டாரே! எனவே, நேரடியாக மத்திய அரசை அணுகலாம்.ஈழப் படுகொலைகளுக்குக் காரணமான இந்தியம் உதவுமா என்ற எண்ணம் வரலாம். சிங்களத்துடன் முறுக்கிக் கொண்டுள்ளதைக் காட்டுவதற்காக உதவலாம். எனினும் உலக மனித நேயர்களின் ஒன்று பட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே இவர்களின் வாழ்வு அமையும். எனவே, தமிழ் உணர்வாளரக்ளே! மனித நேயர்களே! கொலைகாரக் கூட்டணியை நம்பாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து இவர்களைக் காப்பாற்றுங்கள்!அறியாமையால் நம் நாட்டவரை நம்பி அழிய இருக்கும் இவர்களை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டெடு்ங்கள்.

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/2/2010 4:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக