திங்கள், 29 மார்ச், 2010

வறுமையில் ஆசிரியர்கள்: முடங்கும் பாரம்பரிய கலைகள்



சென்னை, ​​ மார்ச்,​​ 28: ஊதியம் வழங்கப்படாத நிலையில்,​​ தமிழகத்தின் கலை-பண்பாட்டை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.இதனால்,​​ ஏழை}எளிய மாணவர்கள் பயன் பெற்று வரும் ​ தமிழக அரசின் சிறப்பான திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது.கலை-பண்பாட்டுத் துறையின் சார்பில்,​​ தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தரும் திட்டம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.அதன்படி, ​​ ஓவியம்,​​ நாட்டியம்,​​ வாய்ப்பாட்டு,​​ கராத்தே ஆகிய கலைகள் 4 வயது முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.​ மாவட்டந்தோறும் இந்தக் கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.ஏழை மாணவர்கள்:ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும் போதும்,​​ இந்தக் கலைகளை கற்றுத் தருவது குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகங்கள் வெளியிடும்.சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வர்.​ அதன்பின்,​​ ஜூன் மாதம் முதல் கல்வியாண்டு முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 மணி நேரம் வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.​ ஒரு மாணவர் குறைந்தபட்சம் 2 கலைகள் வரை கற்றுக் கொள்ளலாம்.​ அரசின் இந்த சிறப்பான திட்டத்தின் மூலம்,​​ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பலன் பெற்று வருகின்றனர்.ஒவ்வொரு கலைக்கும் ஒரு ஆசிரியர் வீதம் மொத்தம் 4 பேரும்,​​ இதைக் கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளரும் மாவட்டந்தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.​ மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.​ ஆண்டுக்கு ரூ.65 மட்டும் மாணவர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.ரூ.300 மட்டுமே ஊதியம்:மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை கற்றுக் கொண்டாலும்,​​ அதை கற்றுத் தரும் ஆசிரியர்கள் துன்பத்தின் விளிம்பில் உள்ளனர்.''11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கும் போது,​​ ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக மாதத்துக்கு ரூ.300 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.​ நாளடைவில் இந்தத் தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை என சேர்த்து வழங்கப்பட்டது.​ கடந்த ஓரண்டாக இந்தத் தொகையும் அளிக்கப்படவில்லை.​ இதனால்,​​ ஆசிரியர்கள் பலரும் தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் இருந்து விலகி வருகின்றனர்.​ குறைந்த ஊதியம் கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர்'' என்று கூறுகின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்கள்.முடங்கிப் போகும் நிலை:ஊதியம் வழங்காத நிலையில்,​​ ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தத் திட்டம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.செம்மொழி மாநாட்டை தமிழக அரசு நடத்த இருக்கிறது.​ இந்தச் சூழலில்,​​ தமிழகத்தின் கலை-பண்பாட்டை பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக