சிரிக் கும் குழந்தையை தெரியும், ஆனால், சிரிக்கும் குருவியைத் தெரியுமா? பறவை ஆராய்ச்சியாளர்களுக்கும், நீலகிரியிலுள்ள ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் இந்த அபூர்வ பறவை பற்றி. இதுகுறித்து ஆராய்ச்சி செய்த உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் பாடப்பிரிவு மாணவர் பி.நவநீதன் அதற்காக தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார்.மாநிலத்திலேயே வன உயிரியல் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற ஒரே மாணவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.இப் பறவை பற்றி நவநீதனிடம் கேட்டபோது, ""பொதுவாக LaughingThrush எனவும், தமிழில் சிரிக்கும் குருவி எனவும் அழைக்கப்படும் இந்தக் குருவி மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே காணப்படும் 16 வகையான அபூர்வ பறவையினங்களில் ஒன்றாகும். அதில் உலகிலேயே நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் மட்டுமே காணப்படும் இந்த சிரிக்கும் குருவி "நீலகிரி சிரிக்கும் குருவி" என அழைக்கப்படுகிறது. இக்குருவி சப்த மிடும்போது குழந்தை சிரிப்பதைப் போலவே இருக்கும். அதனால்தான் இதை சிரிக்கும் குருவி என அழைக்கின்றனர்'' என்றார்.நீலகிரியில் அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள இந்த சிரிக்கும் குருவியைக் குறித்து உதகை அரசு கலைக் கல்லூரியில் வன உயிரியல் மாணவர் பி.நவநீதன் ஆராய்ச்சி செய்துள்ளார். சாதாரண விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நவநீதன் நீலகிரி மாவட்ட வனத்துறையினரின் அனுமதியோடும், டபிள்யு டபிள்யு எப் அமைப்பினரின் ஒத்துழைப்புடனும், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைகளுடனும் இந்த ஆய்வை முடித்துள்ளார்.""இந்த ஆய்வில் சிரிக்கும் குருவியைக் குறித்த பல்வேறு விவரங்கள் தெரிய வந்துள்ளன. பொதுவாக ஜோடியாகவே காணப்படும் இந்தக் குருவி மக்கள் நடமாட்டமில்லாத சோலைப் பகுதிகளில் மட்டுமே வசிக்கும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையே இவற்றைக் காண முடியும். சிறிய பூச்சிகளையும், வனத்தில் கிடைக்கும் பழங்களையும் உண்ணும். இதன் கூடுகள் தரைமட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்தில் இருக்கும். இந்தக் கூட்டைக் கட்டி அதில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தவுடன் உடனடியாக அந்தக் கூட்டை கலைத்துவிடும் பழக்கத்தைக் கொண்ட இந்த குருவிகள், அடுத்த ஆண்டிலும் அதே இடத்தில்தான் கூடு கட்டும்! கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் முதல் 2600 மீட்டர் உயரம் வரை மட்டுமே இத்தகைய குருவிகள் காணப்படும். நீலகிரியில் காணப்படும் சிரிக்கும் குருவிகள் நீலகிரி சிரிக்கும் குருவி என அழைக்கப்படுவதைப் போல, மலபார் பகுதியில் காணப்படும் குருவிகள் மலபார் சிரிக்கும் குருவி எனவும், வயநாடு பகுதியில் காணப்படும் குருவிகள் வயநாடு சிரிக்கும் குருவிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. குரல் ஒரே மாதிரியாக இருந்தாலும், மேற்புறத் தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கும். அதை பறவை ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே உணர முடியும்.'' தன் ஆய்வில் கண்டெடுத்த தகவல்களை நம் மிடம் பகிர்ந்து கொண்டார்.கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நவநீதன், தனது பிரச்னைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்த ஆய்வினை வெற்றிகரமாக முடித்துள்ளதோடு தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். கடந்த 24ம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா நவநீதனுக்கு தங்கப் பதக்கத்தை வழங்கினார். தனக்கு கிடைத்துள்ள அனுபவங்களை வைத்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் இந்த ஆய்வை முடித்திருக்கும் இவர், விரைவில் பறவைகளைக் குறித்து பி.எச்டி. படிக்கவும் திட்டமிட்டுள்ளார்.-ஏ.பாட்ரிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக