தலைப்பு-ஆள்கடத்தல்,வவுனியா குடிமக்கள் குழு : thalaippu_aalkadathal_vavunia

அரசு நலன் சார்ந்த ஆள் கடத்தல்களே

இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3


வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு:

காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்:

  இழப்பீட்டையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு.
 ‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற சொல் பதம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஏலவே, அறிமுகம் – 01, 03, 04இல் நாம் சுட்டியிருப்பது போல, தாங்கள் இலக்கு வைத்த ஒருவரை, அல்லது தாங்கள் விரும்பாத ஒருவரை, அவர் எங்கு போகின்றார் – வருகின்றார், எப்போது போகின்றார் – வருகின்றார், எத்தனை மணிக்குப் போகின்றார் – வருகின்றார் என்று பின்தொடர்ந்து சென்று அவர் பற்றிய தகவல்களை முழுமையாகத் திரட்டிய பின்னர், மிகவும் பொறுமையாக நன்கு திட்டமிட்டு, இந்தப் பெரிய மக்கள் திரளுக்குள் இருந்து அந்த ஒருவரை மட்டும் தனியாக வகைப்படுத்தி (தேர்ந்தெடுத்து), அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும் இலங்கையில் ‘ஆள்கடத்தல் – கைது’ நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனவே, இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ நிகழ்த்தப்பட்ட சூழ்நிலைகளையும் – இடங்களையும் நீங்கள் அறிவார்ந்தமாக ஊகித்துக் கொண்டால் மாத்திரமே, உங்களால் மனமுவந்து இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவும் – தெளிவுறவும் முடியும்.
ஆள் கடத்தல், கைதுகள் நிகழ்த்தப்பட்ட சூழ்நிலைகளும் – இடங்களும்
  •    அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்துக்குச் சார்புடையவர்கள் என்ற ஐயத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
  •   விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது முகவர்கள் என்ற ஐயத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
  •   மே 2009ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தறுவாயில் ஆயுதங்களைக் களைந்து விட்டுப் பாரிய விழுப்புண்களுடன் தாமாகவே படையினரிடம் அடைக்கலமடைந்த போராளிகளும், போராளிக் குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
  •   முல்லைத்தீவு நகரம், வட்டுவாகல், ஓமந்தை சோதனைச்சாவடி பகுதிகளிலும், வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏதிலியர் முகாம்களிலும், படையினர் கேட்டுக் கொண்டதற்கு அமைய, குடும்பத்தினரால் கொண்டு செல்லப்பட்டு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
 ஆகவே, பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கும் – ஐ.நா., அறிவிப்புகளுக்கும் முரணான இத்தகைய ‘கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல்’ நடவடிக்கைகள், ஆட்சியாளர்களுடைய, அரசினுடைய நலன்கள் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படி மிகவும் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன.
  ஆதலால் அறிமுகம் – 02இல் நாம் சுட்டியிருக்கும் விளக்கத்துக்கு அமைய, ‘காணாமல் போன’ என்ற சொல்பதம் அலுவலகத்தின் முகப்பிலிருந்து (பெயர்ப் பலகையில் இருந்து) நீக்கப்பட்டு, அறிமுகம் – 01, 03, 04இல் நாம் சுட்டியிருக்கும் விளக்கத்துக்கு அமைய, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களுக்கான அலுவலகம் – கை.க.கா.ஆ.உ.தே.க.கு.அ’ (Office for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives) என்ற சொல்பதம் அலுவலார்ந்து(officially) பயன்படுத்தப்படுதல் வேண்டும்.  இந்த அலுவலகம் வெளியிடும் அறிக்கைகள், அச்சு ஏடுகள், இன்ன பிற வெளியீடுகள் அனைத்திலும் குறித்த சொல் பதம் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
ஆளணி (பணியாட்கள் தொகுதி):
  வடக்கு-கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டவாரியான இந்தச் சங்கங்களுக்குத் திருமதி செ.நாகேந்திரன் (திருகோணமலை மாவட்டம்), திருமதி அ.அமலநாயகி (மட்டக்களப்பு மாவட்டம்), திருமதி த.செல்வராணி (அம்பாறை மாவட்டம்), திருமதி கா.செயவனிதா (வவுனியா மாவட்டம்), திருமதி இ.சுபலட்சுமி (மன்னார் மாவட்டம்), திருமதி த.புசுபாம்பாள் (முல்லைத்தீவு மாவட்டம்), திருமதி உயோ.கனகரஞ்சனி (கிளிநொச்சி மாவட்டம்), திருமதி க.சிறீகாந்தி (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகியோர் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் அதே வேளை, மாவட்டவாரியான தமது சங்கங்களை ஒன்றிணைத்து, ‘தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற பெயரில் இவர்கள் தேசிய அளவில் கூட்டு இயக்கமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதன் தலைவராகத் திருமதி செ.நாகேந்திரன், (ஆயிசா), துணைத்தலைவராகத் திருமதி அ.அமலநாயகி (அமலினி), செயலாளராகத் திருமதி உயோ.கனகரஞ்சனி (கலா), துணைச்செயலாளராகத் திருமதி க.சிறீகாந்தி, தலைமை ஊடகப் பேச்சாளராகத் திருமதி த.செல்வராணி, இணை ஊடகப் பேச்சாளராகத் திருமதி த.புசுபாம்பாள், பொருளாளராகத் திருமதி கா.செயவனிதா, உதவி ஒருங்கிணைப்பாளராகத் திருமதி இ.சுபலட்சுமி ஆகியோர் செயலாற்றி வருகின்றனர். இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் தலைவர் திரு.கோ.இராச்குமார் (இராசா) அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.
 ஆதலால், கை.க.கா.ஆ.உ.தே.க.கு.அ எனப் பெயரை மாற்றுமாறு நாங்கள் வலியுறுத்தும் தற்போதைய காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகமானது, மாவட்டவாரியாக உள்ளூர் அலுவலகங்களைத் திறக்கும்பொழுது த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கத்தின் மாவட்டத் தலைவிகள் ‘தங்களுக்கு யார் நம்பிக்கையானவர்கள், தங்களுக்கு யார் உண்மையாக இருந்து கடமைகளை ஆற்றுவார்கள், தங்களுக்கு யார் இரண்டகம் இழைக்க மாட்டார்கள்’ என்று நம்புகின்றார்களோ, அவர்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் யாருடைய பெயர்களைப் பரிந்துரை செய்கின்றார்களோ, அந்தச் செயல்பாட்டாளர்கள் ‘பணியாட்கள் தொகுதிக்குள்’ கட்டாயம் கொண்டு வரப்படல் வேண்டும். தான்தோன்றித்தனமாக இதற்கான பணியாட்கள் தொகுதி ஏலவே பணியமர்த்தப்பட்டிருந்தால் அந்தப் பணியாட்கள் தொகுதி உடனடியாகக் கலைக்கப்படல் வேண்டும்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்